3.14 கோடியை மோசடி செய்தேனா?- பிரபல நடிகர் விளக்கம்

3.14 கோடியை மோசடி செய்தேனா?- பிரபல நடிகர் விளக்கம்

``தன் மீதும் தன் மனைவி மீதும் பொய்யான மோசடி புகார் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று பிரபல நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல மலையாள நடிகர் பாபுராஜ். இவர் தமிழிலும் சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர், நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர். வாணி விஸ்வநாத், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பாபுராஜ், ’கூடாஷா’ (Koodasha) என்ற படத்தை கடந்த 2018-ம் ஆண்டு தயாரித்தார். இந்தப் படத்துக்காக, கேரள மாநிலம் திருவில்வமலாவை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் 3.14 கோடியை கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை என்பதால் ரியாஸ், ஒட்டப்பாலம் போலீஸில் பாபுராஜ் மற்றும் வாணி விஸ்வநாத் மீது மோசடி புகார் அளித்தார். இது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தப் புகாருக்கு நடிகர் பாபுராஜ் தனது ஃபேஸ்புக்கில் பதிலளித்துள்ளார். அதில், ’’இந்தப் படத்துக்கும் என் மனைவி வாணி விஸ்வநாத்துக்கும் சம்மந்தமில்லை. எங்கள் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு அப்போது வேறு பிரச்சினை இருந்ததால் எனது தயாரிப்பு நிறுவனமான விபி கிரியேஷன்ஸ் மூலம் படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். படத்துக்கு சம்பளமாக நான் ஏதும் பெறவில்லை.

படப்பிடிப்புக்கான உணவு மற்றும் தங்குமிடம் என்னுடைய ரிசார்ட்டில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான செலவுகளுக்கும் பணம் கொடுக்கவில்லை. படம் வெளியானதும் பார்க்கலாம் என்று தயாரிப்பாளர்கள் கூறினர். ஆனால், படம் படுதோல்வி அடைந்துவிட்டது. இதுதான் உண்மை. இந்த பொய்ப் புகாரைச் சட்டப்படி சந்திப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in