நயன்தாரா பட விவகாரம்: தோனி நிறுவனம் திடீர் விளக்கம்

நயன்தாரா பட விவகாரம்: தோனி நிறுவனம் திடீர் விளக்கம்

நயன்தாரா நடிக்கும் படம் தொடர்பாக வந்த தகவல் குறித்து, கிரிக்கெட் வீரர் தோனியின் பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கிறார். தோனி, கேப்டனாக இருந்து சென்னை அணிக்காக 4 முறை ஐபிஎல் பட்டத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.

இவர், இப்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி, சினிமா படங்கள் மற்றும் வெப்சீரிஸ் தயாரிக்க இருப்பதாகவும் முதலில் தமிழ்ப் படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. அவர் தயாரிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்றும் இந்தத் தயாரிப்பு நிறுவனத்தில், சஞ்சய் என்பவர் முக்கிய பொறுப்பில் இணைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், தோனி என்டர்டெயிமென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளப் பக்கத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், ``நாங்கள் சஞ்சய் என்ற யாருடனும் பணியாற்றவில்லை. அப்படி யாரையும் பணியில் சேர்க்கவும் இல்லை. இதில் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். எங்கள் குழு, சிறந்த திட்டங்களில் பணிபுரிந்து வருகிறது. அதுபற்றி அனைவரிடமும் விரைவில் பகிர்ந்துகொள்வோம்’' என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த நிறுவனம், நயன்தாரா நடிப்பதை மறுக்க வில்லை என்பதால் தோனி தயாரிப்பில் அவர் நடிப்பது உறுதி என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.