மீண்டும் களமிறங்கிய இயக்குநர் 'தினந்தோறும்' நாகராஜ்

மீண்டும் களமிறங்கிய இயக்குநர்  'தினந்தோறும்' நாகராஜ்

'தினந்தோறும்' படத்தை இயக்கிய நாகராஜ் மீண்டும் படத்தை இயக்க உள்ளார்.

1998-ம் ஆண்டு முரளி, சுவலட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் 'தினந்தோறும்'. இப்படத்தை நாகராஜ் இயக்கினார். மணிவண்ணன், ரேணுகா,கிட்டி, வடிவுக்கரசி உள்பட பலர் நடித்த இப்படத்திற்கு ஓவியன் இசையமைத்தார். வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாக இப்படம் பாராட்டப்பட்டது. இப்படத்தின் வெற்றியால் இயக்குநர் பெயருடன் 'தினந்தோறும்' டைட்டிலும் சேர்ந்து கொண்டது. இப்படம் தெலுங்கில் ’மனசிச்சி சூடு’ என்ற பெயரில் ரீமேக்கானது.

இதன் பிறகு கெளதம் மேனன் இயக்கிய 'மின்னலே', 'காக்க காக்க' ஆகிய படங்களுக்கு 'தினந்தோறும்' நாகராஜ் வசனம் எழுதினார். இவரது இயக்கத்தில் 2013-ம் ஆண்டு 'மத்தாப்பு' என்ற திரைப்படம் வெளியானது. இதன் பின் பல படங்களில் கதை விவாதங்களில் பங்கேற்றுள்ள 'தினந்தோறும்' நாகராஜ், தற்போது நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் பணியில் தீவிரமாகியுள்ளார்.

க்யூ சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் ஆர்.சசிகுமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. இப்படத்திற்கு சி.சத்யா இசையமைக்கிறார். காடன் படத்தின் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in