திறமையான நடிகைன்னு பேரு வாங்கிக் குடுக்கணும்! வாரிசு நடிகையின் அறிமுக பேட்டி!

‘ஓ போடு’ ராணியின் மகள் தார்ணிகா ராவ் முதல் பேட்டி
தார்ணிகா ராவ்
தார்ணிகா ராவ்

விக்ரம் நடிப்பில் ஏவி.எம் தயாரிப்பில் 2002-ல் வெளியான ‘ஜெமினி’ படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’ பாடலை இன்னும்கூட முணுமுணுப்பவர்கள் இருக்கிறார்கள். படம் வெளிவரும் முன்பே பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்ததால், அந்தப் பாடலுக்குப் படத்தில் துள்ளாட்டம் ஆடியிருந்த ராணிக்கு படத்தின் டைட்டிலில் ‘ஓ போடு’ ராணி என்றே கிரெடிட் கொடுத்திருந்தார் அப்படத்தின் இயக்குநர் சரண். தற்போது ராணி - பிரசாந்த் கௌடா தம்பதிக்கு தார்ணிகா ராவ் என்ற மகள் இருக்கிறார். தமிழ் திரையுலகில் அறிமுகமாகவிருக்கும் அவருடைய முதல் பேட்டி இது...

பொதுவா புகழ்பெற்ற நடிகர்களின் மகன்கள் அப்பா அல்லது அம்மா வழியில் நடிக்க வருவது அதிகம். மகள்கள் நடிக்க வருவது குறைவு. அந்த வகையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி இல்லையா..?

தார்ணிகா ராவ்
தார்ணிகா ராவ்

நிச்சயமாக. எனக்கு நடிக்க ஆர்வம் வந்ததுக்குக் காரணம் அம்மாதான். 3 வயதிலிருந்து அம்மாவின் நடனம், அதுக்காக அவங்க போடுற கடின உழைப்பு, எனக்கும் அப்பாவுக்கும் அவங்க கொடுக்கிற கேர் எல்லாமே இப்பவும் இன்ஸ்ஃபையரிங்கா இருக்கு.

பல படங்கள்ல கதாநாயகியா நடிச்சுட்டு, 300 படங்களுக்கு மேல டான்ஸரா ஆடிட்டு, கல்யாணம், குடும்பம்ன்னு ஆனபிறகும் தனக்கு வர்ற வாய்ப்புகளைச் சின்ன ரோல்ன்னு கூட பார்க்காமல் நடிச்சுக் கொடுக்கிறாங்க. சினிமாவை அவர் அவ்வளவு நேசிக்கிறார். “உனக்கு ஒரு வயசுலேர்ந்து டான்ஸ் சொல்லிக் கொடுத்துட்டு வர்றேன்” என்று சொன்னார். “டான்ஸைப் பொருத்தவரைக்கும் ஒரு சின்ன மூவ்மென்ட் கூட ஈஸி கிடையாது. ஒவ்வொரு மூவ்மென்டையும் ஆடியன்ஸ் ரசிக்கிற மாதிரி ஆடணும்” என்று சொல்லி நான் நல்ல பண்ற வரைக்கும் என்னை ட்ரில் வாங்காம விடமாட்டார். அவரோட எனர்ஜி லெவல் இப்பவும் வேறதான்.

அம்மாவைப் பார்த்துதான் நாமும் ஹீரோயின் ஆகணும்ன்னு நினைசேன். ஸ்கூல்ல 6-ம் வகுப்புல டீச்சர் கேட்டாங்க, “நீ என்னவா ஆக விரும்புறேன்னு”. கொஞ்சம் கூட யோசிக்கல. “ஹீரோயின்”னு சொன்னதும் வீட்டுல வந்து சொல்லிட்டாங்க.

அதைக் கேட்டு வீட்ல சந்தோஷப்பட்டங்களா?

அதுதான் இல்ல. “உனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தது உடம்பு ஃபிட்டா இருக்கணுங்கிறதுக்காகதான். நீ படிச்சு டாக்டரா ஆகணும்”ன்னு கண்டிப்பா சொன்னாங்க. 10-ம் வகுப்பு வரும்போது நீட் கோச்சிங் போகணும்னு சொன்னப்ப, “நான் மீடியா படிக்கிறேன்... அதுதான் என்னோட சினிமா கனவுக்கு உதவியா இருக்கும்”னு சொல்லிட்டு 2 நாள் பட்டினி கிடந்தேன்.

அவ்வளவுதான்... என்னோட பிடிவாதத்தைப் பாத்துட்டு எனக்காக அப்பாவும் அம்மாவும் இறங்கி வந்துட்டாங்க. ப்ளஸ் 2 முடிச்சதும் ஹைதராபாத் செயின்ட் மேரீஸ் கல்லூரியில் பி.ஏ., மாஸ் கம்யூனிகேஷன் படிச்சேன். அதுவொரு பிராக்டிக்கல் படிப்பு. மீடியா படிப்பு எனக்கு நிறைய தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கு.

அம்மாவை விட அதிகமாக சாதிக்க வேண்டும் அல்லது அம்மா விட்ட இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா?

இப்பவும் அம்மாவுக்கு ரசிகர்கள் அதிகம்தான். ஏர்போர்ட்லயோ... பொது இடங்களிலோ அம்மாவை ரசிகர்கள் பார்த்துட்டா.. ‘ஓ... போடு’ன்னு சொல்லி சந்தோஷப்படுறாங்க. அம்மா கூட போட்டோ எடுத்துகிறாங்க. அவங்களுக்கு பெஸ்டா என்ன கேரக்டர்ஸ்... பாடல்கள் வந்ததோ அதுல அவங்க நல்லாவே பண்ணிட்டாங்க. அதுல அம்மாவுக்கும் வருத்தம் கிடையாது. எனக்கும் கிடையாது.

என்னோட தலைமுறையில சினிமாவே வேறயா இருக்கு. இப்போ ஹீரோயின் கேரக்டர் கமர்ஷியல் படங்கள்ல கூட கதையில ரொம்ப முக்கியமானதா மாறியாச்சு. அதனால் இன்னைக்கு பெண்கள் ஒரு ஆர்ட்டிஸ்டா நீடிச்சு நிக்க முடியுது. நல்ல, திறமையான நடிகைன்னு பெயர் வாங்கிக் கொடுக்கிறதுதான் அம்மாவுக்கு நான் கொடுக்குற சந்தோஷம்.

அதேபோல நான் சினிமாவில் நடிக்கப் போறதுல அப்பாவுக்கு விரும்பம் இல்ல. அவருக்கு நான் செல்ல மகள் என்பதால் மட்டும்தான் ஓகே சொன்னார். அவருக்கும் பெருமை சேர்க்கிற மாதிரி படங்கள்ல நடிக்கணும். அதை நிச்சயமா செய்வேன்ற நம்பிக்கை இருக்கு.

டான்ஸ், படிப்பு தவிர வேறு எப்படி தயாராகி இருக்கீங்க? எந்த மாதிரி அறிமுகம் கிடைக்கணும்னு ஆசைப்படுறீங்க?

நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பொண்ணு. தமிழ், எழுதப் படிக்க நல்லா தெரியும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேச நல்லா பயிற்சி எடுத்துருக்கேன். எனக்கு கௌதம் மேனன் சார் டைரக்‌ஷன் ரொம்பப் பிடிக்கும். ‘வின்னைத் தாண்டி வருவாயா?’ என்னோட ஃபேவரைட். அந்த மாதிரி சிறந்த காதல் கதைகள், குடும்பக் கதைகள்ல அறிமுகமாக விரும்புறேன். வெகு விரைவில் என்னோட அறிமுகப்படத்தில் கமிட் ஆக இருக்கிறேன். அதுபற்றி உங்களுக்குத்தான் முதலில் சொல்வேன்.

இதையும் வாசிக்கலாமே...

உஷார்... தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

பிரபல கால்பந்து ஜாம்பவான் ராபர்ட் சார்ல்டன் காலமானார்! ரசிகர்கள் இரங்கல்!

பரபரப்பு… அதிமுக கவுன்சிலர் வெட்டிக்கொலை!

அதிர்ச்சி... புழல் சிறையில் பெண் கைதி தூக்கிட்டு தற்கொலை!

அரையிறுதியில் இந்தியா அதிர்ச்சி தோல்வி... வாக்குவாதத்தால் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in