தாமத திருச்சிற்றம்பலமும் தனுஷ் ரசிகர்கள் சீற்றமும்!

தாமத திருச்சிற்றம்பலமும் தனுஷ் ரசிகர்கள் சீற்றமும்!

அண்மையில் வெளியான ’தி கிரே மேன்’ ட்ரெய்லரால் நொந்து போயிருக்கும் தனுஷ் ரசிகர்கள் தற்போது ’திருச்சிற்றம்பலம்’ என்ற தனுஷின் அடுத்த தமிழ் திரைப்படத்தை விரைவாக வெளியிடக்கோரி, அதன் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக சமூக ஊடகங்களில் சீற்றம் காட்டி வருகின்றனர்.

2002-ல் ’துள்ளுவதே இளமை’ மூலம் அறிமுகமான வகையில், தனது திரையுலக பயணத்தில் நடப்பாண்டு 20 வருடங்களை நிறைவு செய்கிறார் நடிகர் தனுஷ். கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட், ஹாலிவுட் என இளம்வயதில் தனுஷ் அடைந்திருக்கும் உயரம் அபாரமானது. ஆனால், இதனை கொண்டாடுவதற்கு வழியின்றி தனுஷ் ரசிகர்கள் தவித்து வருகின்றனர். நேரடி திரையரங்க வெளியீடாக தனுஷ் திரைப்படங்கள் வெளியானால் மட்டுமே ரசிகர் பட்டாளம் கெத்து காண்பிக்க முடியும் என்பது அவர்களின் ஏக்கமாக நீடிக்கிறது.

ஆனால், ‘ஜகமே தந்திரம்’, ’மாறன்’, ’அட்ராங்கி ரே’ என அண்மை வெளியீடுகள் அனைத்துமே ஓடிடியில் வெளியானவை. மேலும், இவை ரசிக எதிர்பார்ப்புகளையும் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்த வகையில் அடுத்து வெளியாகும் திரைப்படம் வெற்றிக் கணக்கில் சேர வேண்டும் என்று ஏங்குகிறார்கள். அதற்கு வழியின்றி அவற்றின் வெளியீடு தாமதமாவதாகவும் குறைபடுகிறார்கள்.

கரோனா பொதுமுடக்கம் முடிவுக்கு வந்ததுமே முடங்கிக்கிடந்த திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்கு தரிசனம் தந்து வருகின்றன. அவற்றை அந்த நடிகர்களின் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும்போது அவர்கள் மத்தியில் தனுஷ் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர்.

தனுஷ் நடிப்பில் அவரது ரசிகர்களின் பெருமிதத்துக்கு உரிய பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களும் ஓடிடி மூலமாகவே வெளியாகின்றன. இந்தி ‘அட்ராங்கி ரே’ தமிழில் ‘கலாட்டா கல்யாணம்’ என்ற தலைப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியானபோதும், அது தனுஷ் ரசிகர்களை திருப்தி செய்யவில்லை. அடுத்தபடியாக ஹாலிவுட் வெளியீடான ’தி கிரே மேன்’ திரைப்படமும் நேரடி ஓடிடி வெளியீடாகவே வர இருக்கிறது.

கேப்டன் அமெரிக்கா, அவெஞ்சர்ஸ் திரைப்படங்களை இயக்கிய ரூஸோ சகோதரர்களின் இயக்கம், நெட்ஃப்ளிக்ஸின் அதிக பட்ஜெட் படைப்பு என இந்திய நடிகர்களில் எவருக்கும் கிடைக்காத வாய்ப்பாக ’தி கிரே மேன்’ தனுஷ் குறித்து ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால், அண்மையில் வெளியான ’தி கிரே மேன்’ ட்ரெய்லர் தனுஷ் ரசிகர்களின் உற்சாக பலூன்களில் ஊசியால் துளைத்தன. கிறிஸ் எவான்ஸ், ரியான் கோஸ்லிங் ஆகிய நடிகர்களுக்கு மட்டுமே அந்த ட்ரெய்லரில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. அதிலும் மிகச்சில விநாடிகளே ட்ரெய்லரில் தனுஷ் வந்துபோகிறார். இதனால் சமூக ஊடகங்களில் போட்டி ரசிகர்களின் கலாய்ப்புக்கும் தனுஷ் ரசிகர்கள் ஆளானார்கள்.

தங்களது விருப்பத்துக்குரிய நடிகர் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் துவண்டிருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். ’மகன் உரிமை’ கோரி நீதிமன்றம் சென்ற மதுரை தம்பதிக்கு எதிராக தனுஷ் நஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருப்பது, மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்திருப்பது ஆகியவை ரசிகர்களுக்கு சலிப்பு தந்திருக்கின்றன. இந்த தருணங்களில் எல்லாம் போட்டி நடிகர்களின் ஏச்சுக்கு பதிலளிக்க முடியாது தனுஷ் ரசிகர்கள் தடுமாறி வந்தனர். குறிப்பாக, ரஜினி மகள் ஐஸ்வர்யாவிடமிருந்து தனுஷ் விலகி வாழ்வதால் ரஜினி ரசிகர்களின் கடுமையான தாக்குதலுக்கு தனுஷ் ரசிகர்கள் ஆளாகி வருகின்றனர்.

அண்மையில் தனது 20 ஆண்டு திரைவாழ்க்கையின் நிறைவையொட்டி உரியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டிருந்தார் தனுஷ். அதில் ஒரு இடத்தில்கூட ரஜினிகாந்த் பெயரைக் காணோம் என்று ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். ரஜினியின் புகழ் நிழலில் தனுஷ் வளர்ந்ததாகவும், அதனாலேயே பாலிவுட், ஹாலிவுட் வாய்ப்புகள் கிட்டியதாகவும் சிலர் தாக்குதல் தொடுத்தார்கள். ரஜினியின் தனிப்பட்ட மற்றும் திரை வாரிசாக தனுஷ் முன்னிறுத்தப்பட்ட போதெல்லாம், அதனை ரசிக்க முடியாது புழுங்கிக் கிடந்த ரஜினி ரசிகர்கள் இந்த பதிலடி வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், தனுஷ் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் தர முடியாது அவரது ரசிகர்களின் திண்டாட்டம் தொடர்ந்தது.

சமூக ஊடகங்களில் இம்மாதிரியான இணைய கைகலப்புகள் முற்றும்போதெல்லாம் தங்கள் ஆஸ்தான நடிகரின் அடுத்த திரைப்படத்தை முன்னிறுத்தியே ரசிகர்கள் தெம்பாக களமாடுவார்கள். அந்த வகையில் வரிசைகட்டியிருக்கும் தனுஷின் திரைப்படங்கள் பலவும் எப்போது திரைக்கு வரும் என்ற எதிர்பார்ப்புகள் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. ’தி கிரே மேன்’ ட்ரெய்லர் ஏமாற்றி இருப்பதால், அடுத்தபடியாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மீது கண் வைத்துக் காத்திருக்கிறார்கள்.

ஆனால், அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ‘திருச்சிற்றம்பலம்’ தொடர்பான அப்டேட் எதையும் வெளியிடுவதில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். ரஜினிகாந்த், விஜய் என உச்ச நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தரும் முக்கியத்துவம் தனுஷ் படத்துக்கு இல்லை என்றும் பொங்குகிறார்கள். அதிலும் ’அண்ணாத்த’ படத்தை தொடர்ந்து மெகா பட்ஜெட்டில் உருவாகும் அடுத்த ரஜினி படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் அளிக்கும் முக்கியத்துவத்தில் சற்றும் திருச்சிற்றம்பலத்துக்கு கிடைப்பதில்லை என்று சீற்றம் காட்டுகிறார்கள்.

இவற்றின் வெளிப்பாடாக சன் பிக்சர்ஸ்க்கு விழிப்பூட்டும் விதமாக ’வேக்அப் சன் பிக்சர்ஸ்’ என்று தயாரிப்பு நிறுவனத்தை டேக் செய்யும் தாக்கீதுகளை தொடங்கியுள்ளனர். மே 30 அன்று மாலையில் பற்றிய இந்த ட்விட்டர் பிரச்சாரம் நள்ளிரவு கடந்தும் ட்ரெண்டிங்கில் நின்றது. இதையே தங்களது வெற்றிக்கணக்கின் தொடக்கமாக அறிவித்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். ஏக்கம், பரிதாபம், சீற்றம், உரிமையுடனான கோரல் என கலவையாக வெளிப்பட்ட தனுஷ் ரசிகர்களின் இணையப் போராட்டம் வித்தியாசமாக உருவெடுத்தது.

நடிகர் தனுஷ் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் தயாராகிவரும் ’வாத்தி’ பட உருவாக்கத்தில் தீவிரமாக உள்ளார். அடுத்து அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட சில இயக்குநர்களின் நடிப்பது குறித்து கலந்து வருகிறார். ‘திருச்சிற்றம்பலம்’ மட்டுமன்றி அண்ணன் செல்வராகவன் இயக்கத்திலான ‘நானே வருவேன்’ திரைப்படமும் படப்பிடிப்பு முடிந்துள்ளது. செல்வராகவன் படங்களுக்கே உரிய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் காரணமாக இதன் வெளியீடு மேலும் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இவற்றின் மத்தியில் குறிப்பிட்ட காரணம் எதுவுமின்றி, ’திருச்சிற்றம்பல’த்தின் திரையரங்க வெளீடு தாமதமாவதாக தனுஷ் ரசிகர்கள் சீறி வருகின்றனர்.

ட்விட்டரில் தொடரும் துவந்த யுத்தங்களில் தங்களின் அஸ்திரமாக ’திருச்சிற்றம்பலம்’ விரைவில் திரையில் எழுந்தருள வேண்டும் என்பதே தனுஷ் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in