
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் தனுஷ்-ஐஸ்வர்யா இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவு தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ். 18 ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு யாத்ரா ராஜா, லிங்கா ராஜா என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று தனுஷ்-ஐஸ்வர்யா கூட்டாக அறிவித்தது அவரது ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்தது.
இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘18 வருடங்கள் நண்பர்கள், தம்பதிகள், பெற்றோர் மற்றும் நலம் விரும்புபவர்கள் என ஒருவரையொருவர் ஒன்றாக இணைத்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது. இன்று நாங்கள் ஒருவரை ஒருவர் பிரியும் இடத்தில் நிற்கிறோம். ஐஸ்வர்யாவும் நானும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்கவும்” என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து, இரண்டு பேரும் படவேலைகளில் கவனம் செலுத்தினர். தனது மாமனார் ரஜினிகாந்த் இருக்கும் இடத்திலேயே வீட்டை கட்டத்தொடங்கினார் தனுஷ். இதனிடையே, தனுஷ்- ஐஸ்வர்யாக இடையே நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் சமரச பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் விவாகரத்து செய்யும் முடிவை தற்காலிகமாக கைவிடப்போவதாக இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினி மற்றும் வீட்டில் உள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.