டெவில் - சினிமா விமர்சனம்

டெவில்
டெவில்

ஹேமா (பூர்ணா) ஒட்டிவரும் கார், ரோஷன் (திருகுன்) மீது மோதி அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இதனால் ரோஷனுக்கு உதவுகிறாள் ஹேமா. ஒருகட்டத்தில் அது நெருக்கமான நட்பாக உருவெடுக்கிறது. ஹேமாவின் கணவன் அலெக்ஸ் (விதார்த்), தன் அலுவலகத்தில் பணியாற்றும் சோஃபியுடன் தொடர்பில் இருக்கிறான். இதனால் ஹேமாவைப் புறக்கணிக்கிறான். ஒரு கட்டத்தில் சோஃபியிடமிருந்து விலகி ஹேமாவிடம் வருகிறான். இதற்குப் பிறகும் ஹேமாவின் வாழ்வில் ரோஷன் குறுக்கிட, இவர்கள் மூவரின் வாழ்வு என்னவாகிறது என்பதுதான் டெவிலின் மீதிக் கதை.

‘சவரக்கத்தி’க்குப் பிறகு மிஷ்கினின் தம்பி ஆதித்யா இயக்கியிருக்கும் படம் இது. இந்தப் படத்தின் மேன்மையான உருவாக்கத்திலும் தொழில்நுட்பத் தரத்திலும் மிஷ்கினின் தாக்கம் தெரிகிறது. பல விஷயங்களை வசனங்களாகச் சொல்லாமல் காட்சிகளாகக் காண்பித்திருப்பது நன்றாக இருக்கிறது.

டெவில்
டெவில்

ஆனால் படத்தின் கதையும் திரைக்கதையும் பெரும் ஏமாற்றம் அளிக்கின்றன. முதல் பாதியில் ரோஷனுக்கும் ஹேமாவுக்கும் நட்பு உருவாவதைச் சொல்லும் காட்சிகள் ஓரளவு ரசிக்க வைக்கின்றன. ஆனால், அலெக்ஸின் வருகைக்குப் பிறகு நிகழும் திருப்பங்களுக்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை. இதனால் முதன்மைக் கதாபாத்திரங்களுடன் ஒன்ற முடியவில்லை. இரண்டாம் பாதியின் பிற்பகுதியில் த்ரில்லர், ஹாரர் ஜானருக்கு மாறும்போது சற்று எதிர்பார்க்க வைத்தாலும் அதுவும் விரைவில் நீர்த்துப்போகிறது. கனவு, அமானுஷ்யம், ஆன்மிகம் என்று பல விஷயங்களைக் கலந்து குழப்பியடித்திருக்கிறார்கள்.

இந்தக் குறைகளைக் கடந்து ஹேமா கதாபாத்திரத்தையும் சிறப்பாக நடித்திருக்கும் பூர்ணாவையும் ரசிக்க முடிகிறது. விதார்த், திருகுன் இருவரும் குறைசொல்ல முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார்கள்.

மிஷ்கினின் பின்னணி இசை, காட்சிகளுக்கு வலுசேர்க்கின்றன. பாடல்கள் தேவையற்ற திணிப்பு. கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். பதற்றத்தைத் தக்கவைப்பதில் இளையராஜாவின் படத்தொகுப்பு தக்க துணை புரிந்திருக்கிறது. உருவாக்கத்தில் கவர்ந்தாலும் உள்ளடக்கத்தில் ஏமாற்றியிருக்கிறது ‘டெவில்’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in