தமிழக ஊர்திகளுக்கு அனுமதி மறுப்பு- வைரமுத்து ஆவேசம்

எங்களுக்கும் பொறுமை இருக்கிறது என ட்வீட்
வைரமுத்து
வைரமுத்துhindu கோப்பு படம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், "திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது" என்று கவிஞர் வைரமுத்து ஆவேசமாக கூறியுள்ளார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி டெல்லி பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெறுகிறது. இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்வில் தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான கருத்துரு வழங்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான கருத்துருவை ஒன்றிய அரசின் நிபுணர் குழு நிராகரித்தது.

இந்நிலையில், "குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்ட வீரர்களின் உருவகங்கள் அடங்கிய தமிழ்நாட்டின் ஊர்தி மறுக்கப்பட்டு இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. பிரதமர் மோடி உடனடியாக தலையிட்டு, விடுதலை போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதனிடையே, தமிழக அரசின் ஊர்தியை அனுமதிக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டு ஊர்தியை நிராகரிப்பது ஒன்றிய அரசின் அதிகாரம். ஆனால், காரணங்கள் சரியில்லை. வ.உ.சி வியாபாரியாம், வேலுநாச்சி ஜான்சிராணி சாயலாம், மருதிருவர் தீவிரவாதிகளாம். நிபுணர் குழுவின் புரிதல் இது. திருத்துவற்கு நேரமிருக்கிறது; எங்களுக்கும் பொறுமை இருக்கிறது" என்று காட்டமாக கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in