புகைப்படத்தை வெளியிட்டு இழிவு: நடிகை பார்வதி நாயர் புகாரில் சிக்கினார் முன்னாள் ஊழியர்

புகைப்படத்தை வெளியிட்டு இழிவு: நடிகை பார்வதி நாயர் புகாரில் சிக்கினார் முன்னாள் ஊழியர்

பிரபல நடிகை பார்வதி நாயரின் புகைப்படத்தை வெளியிட்டு இழிவுபடுத்தி, மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவரது முன்னாள் ஊழியரான சுபாஷ் சந்திர போஸை தனிப்படை போலீஸார் புதுக்கோட்டையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரபல நடிகை பார்வதி நாயர் கடந்த அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தனது வீட்டில் இருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரம், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் திருடுப்போனது தொடர்பாக அளித்த புகாரில், அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த சுபாஷ் சந்திரபோஸ் என்பவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்துவதாக சுபாஷ் சந்திரபோஸும் நடிகை பார்வதி நாயர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

பின்னர் தான் அளித்த புகார் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறியும், தொடர்ச்சியாக தனது புகைப்படத்தை வெளியிட்டும், செல்போனில் தொடர்பு கொண்டும் மிரட்டல் விடுத்து வருவதாகவும் கடந்த வாரம் நடிகை பார்வதி நாயர் காவல் ஆணையர் அலுவலகத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் ஒரு புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் சுபாஷ் சந்திரபோஸ் மீது மீண்டும் நுங்கம்பாக்கம் போலீஸார் மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெண்களை இழிவுபடுத்துதல், இழிவுபடுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், இந்த இரண்டாவது வழக்கில் சுபாஷ் சந்திர போஸை புதுக்கோட்டையில் வைத்து நுங்கம்பாக்கம் தனிப்படை போலீஸார் இன்று கைது செய்தனர். அவரை சென்னை அழைத்து வந்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in