
ஆஸ்கர் மேடையில் விருது பெறுவதற்காக இந்திய படைப்பாளிகள் நம்பிக்கையுடன் காத்திருப்பதற்கு மத்தியில், விருது வழங்கும் வகையிலும் இந்தியர்கள் கௌரவிக்கப்பட இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோன் உறுதி செய்யப்பட்டிருக்கிறார்.
ஆர்ஆர்ஆர் திரைப்படம் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு மோதிய நிலையில், அதற்கான ஆஸ்கர் விருது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை முரசறைந்து சொல்லும் வகையில் ‘நாட்டு.. நாட்டு’ பாடல் ஆஸ்கர் மேடையில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியானது.
விருது பெறுவதற்கு இணையாக, விருது வழங்கும் பிரபலங்களின் வரிசையிலும் இந்தியர்கள் கௌரவிக்கப்பட உள்ளனர். அதற்காக ஆஸ்கர் விருது ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வெளியான முதல் பட்டியலில் பாலிவுட் உச்ச நட்சத்திரம் தீபிகா படுகோன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. ஹாலிவுட் பிரபலங்களான ட்வெய்ன் ஜான்சன், மைக்கேல் ஜோர்டன், சாமுவேல் ஜாக்சன் உள்ளிட்ட மேலும் பலர் இந்த முதல் பட்டியலில், தீபிகா உடன் இடம் பெற்றுள்ளனர்.
அண்மையில் வசூலில் வாரிக்குவித்த, ஷாருக்கானின் ’பதான்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம், திருமணத்திற்கு பின்னரும் தீபிகா படுகோன் தனது பாலிவுட் முன்னணி இடத்தை தக்கவைத்திருக்கிறார். கடந்தாண்டு டிசம்பரில் நிறைவடைந்த ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான பரிசுக் கோப்பையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சிக்கும் தீபிகா படுகோன் அழைப்பின் பேரில் பங்கேற்று சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.