டியர் - ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்
டியர் - ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்

டியர் - சினிமா விமர்சனம்

சின்ன சத்தம் கேட்டாலே தூக்கம் களைந்துவிடும் அர்ஜுனுக்கும் (ஜி.வி.பிரகாஷ்), பலமாகக் குறட்டை விட்டபடி தூங்கும் தீபிகாவுக்கும் (ஐஸ்வர்யா ராஜேஷ்) திருமணம் நடக்கிறது. முதலிரவுக்குப் பின் மனைவியின் குறட்டைப் பிரச்சினையால் தூக்கம் தொலைக்கும் அர்ஜுன், ஒரு கட்டத்தில் விவாகரத்துக் கேட்டு நீதிமன்றம் செல்கிறார். நீதிமன்றம், குடும்பம், மனைவி, நண்பர்கள், இந்த விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டனர், அர்ஜுன் எடுத்த முடிவு சரியா, இறுதியில் என்ன தீர்வு கிடைத்தது என்பது கதை.

கடந்த ஆண்டு வெளிவந்த ‘குட் நைட்’, ‘குறட்டை’யை வெற்றிகரமாகக் கையாண்டது. இந்தப் படமும் அதையே பேசுவதால் தொடக்கத்திலேயே  பொசுக்கென்று குறைந்து விடுகிறது சுவாரஸ்யம். இரண்டாம் பாதியில், குறட்டை பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு,சிறுவயதில் குடும்பத்தை விட்டு ஓடிப்போய்விட்ட அப்பாவைத் தேடப் போய்விடுகிறது திரைக்கதை. எங்கோ ஆரம்பித்த கதையை எங்கோ கொண்டு சென்று, ஒருவர் குறையை மற்றவர் அனுசரித்து செல்வதுதான் வாழ்க்கை என்று முடித்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

முதல் பாதியில் சில இடங்கள் ரசிக்க வைத்தாலும் இரண்டாம் பாதி சீரியஸ் கதைக்குள் சென்று விடுவதால் ஒட்ட முடியவில்லை.

படத்தில், அர்ஜுன் மனைவி தீபிகா, அர்ஜுனின் அண்ணன் மனைவி கல்பனா, அர்ஜுனின் அம்மா லட்சுமி, தீபிகாவின் அம்மா வசந்தி ஆகிய அனைத்துப் பெண் கதாபாத்திரங்களையும்  தன்னம்பிக்கையும் பொறுப்பும் கடமையும் மிக்கவர்களாகப் படைத்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம்.  

சிறுவயதில் மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு ஓடிபோனவரை அழைத்துவந்து, ‘அவரை ஏத்துக்கணும், ஏன்னா, என்னத்த இருந்தாலும் அவர் உங்க அப்பா’ என்று பேசுவதெல்லாம் டிவி.சீரியலை மிஞ்சும் டிராமா. அவசியமான காட்சிகளில் வசனங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம் கவனிக்க வைக்கின்றன.

டியர் - ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்
டியர் - ஜி.வி.பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்

ஜி.வி.பிரகாஷ், தனது கதாபாத்திரத்தின் சிக்கலை  உள்வாங்கி நடித்திருப்பதுடன் செய்தி வாசிப்பாளருக்கான நேர்த்தியையும் சில காட்சிகளில் காட்டியிருக்கிறார். தீபிகாவாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் ஜி.வி.பிரகாஷுக்குமான கணவன் மனைவி தோற்றம் பொருந்தவில்லை. கல்பனாவாக வரும் நந்தினி கவனிக்க வைக்கிறார். ரோகிணி, கீதா கைலாசம் இருவரும் கதையோடு ஒன்ற வைக்கிறார்கள். இயல்பான நடிப்பால் கவர்கிறார் இளவரசு. சரவணனாக வரும் காளி வெங்கட் தனது சிறந்த நடிப்பை இதிலும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதாபாத்திரங்கள் வாழும் நிலத்தின் அருகாமையை உணரவைத்து, காட்சியின் சூழலுக்கு அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் ஜகதீஷ் சுந்தரமூர்த்தி. தேவையான பாடல்களையும் பின்னணி இசையையும் கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

பார்வையாளர்களுக்கு ஏற்கெனவே பரிச்சயமான கதைக் கருவைக் கையாண்ட போதும், முன்பாதியில் மெல்லிய நகைச்சுவை, பின்பாதியில் கணமான உணர்வுகள் என  தொடுத்துக் கொடுத்திருந்தாலும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம், இந்த ‘டியரை’!

x
காமதேனு
kamadenu.hindutamil.in