`அன்புள்ள கேகே... என்ன அவசரம் நண்பா'- கேகே மறைவால் கமல், ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

`அன்புள்ள கேகே... என்ன அவசரம் நண்பா'- கேகே மறைவால் கமல், ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

பிரபல பின்னணி பாடகரான கேகே மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்றிரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், "பன்மொழிகளிலும் பாடி ரசிகர்களை மகிழ்வித்த கேகே எனும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் அகால மரணம் அடைந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆறுதல்கள்" என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அன்புள்ள கேகே... என்ன அவசரம் நண்பா... உங்களைப் போன்ற திறமையான பாடகர்களும் கலைஞர்களும் இந்த வாழ்க்கையை இன்னும் கூடுதலாக தாங்கக் கூடியதாக மாற்றினீர்கள்...'' என பதிவிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மின்சார கனவு' படத்தில் 'ஸ்ட்ராபெரி கண்ணே' உள்ளிட்ட பாடல்களை கேகே பாடியிருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in