
`தசரா' படத்தின் பாடல் படப்பிடிப்பு கோதாவரிக்கானியில் நடைபெற்று வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
நேச்சுரல் ஸ்டார் நானி தொடர்ந்து வித்தியாசமான களங்களில், தரமான வகையிலான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வந்த படங்கள் கதை தனித்துவமானவையாக இருந்தன. அந்த வகையில் எல்லாவற்றையும் தாண்டும் நேர்த்தியான ஆக் ஷன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக ‘தசரா’ அறிமுக இயக்குநர் ஶ்ரீகாந்த ஒதெலா இயக்கத்தில் உருவாகி வருகிறது.
ஶ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் நானியின் முதல் பான் இந்திய திரைப்படமாகும். இப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்படுகிறது. தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு பெத்தபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரிக்கானி (தெலங்கானா) பகுதியில் நடைபெற்று வருகிறது, அங்கு நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. ஆர்ஆர்ஆர் படத்தில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்து, வியப்பில் ஆழ்த்திய பிரேம் ரக்ஷித் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 500 நடனக் கலைஞர்கள் பங்கேற்க, பிரம்மாண்டமாக இந்தப் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது. கோதாவரிகனியில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் கதையாக அமைக்கப்பட்டுள்ளது.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சாய் குமார் மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தில் நவின் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், விஜய் சாகந்தி நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.