இசையை எளிமையாக்கிய கே.வி.மகாதேவன் எனும் மகா மேதை!

- 105-வது பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
’அம்மா என்றால் அன்பு’ பாடலின் போது... கே.வி.மகாதேவன், ஜெயலலிதா, எம்ஜிஆர்
’அம்மா என்றால் அன்பு’ பாடலின் போது... கே.வி.மகாதேவன், ஜெயலலிதா, எம்ஜிஆர்

கே.வி.மகாதேவன், நம் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளம். அதற்கு முன்பிருந்த ஜாம்பவான்களின் எந்தச் சாயலுமில்லாமல், புது பாணியில் இசையைக் கொடுத்த மகாதேவனுக்கு நாகர்கோவில் பக்கம் கிருஷ்ணன் கோவில்தான் சொந்த ஊர். அப்பா வெங்கடாசல பாகவதர். அம்மா லட்சுமி அம்மாள். 1918-ம் ஆண்டு பிறந்த மகாதேவனுக்கு, முறைப்படி சங்கீதம் கற்றுக்கொடுக்க அனுப்பிவைத்தார் அப்பா. அருகில் உள்ள பூதப்பாண்டி எனும் கிராமத்தில் அருணாசலக் கவிராயர் என்பவரிடம் சங்கீதம் பயின்றார். இவரின் கற்றறியும் வேகம் கண்டு, ‘’மகாதேவனுக்குள்ளே சரஸ்வதி இருக்கா. அவன் பெரியாளா வருவான் பாரேன்’’ என்று அருணாசலக் கவிராயர், பார்ப்பவர்களிடம் சொல்லிப் பூரித்தார்.

கே.வி.மகாதேவனுடன் பி.சுசீலா, எஸ்.பி.பி
கே.வி.மகாதேவனுடன் பி.சுசீலா, எஸ்.பி.பி

தனது 24-வது வயதில், 1942-ம் ஆண்டு, திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்தார் மகாதேவன். ‘மனோன்மணி’ என்கிற படத்துக்கு ஒரேயொரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில், இவர் இசையமைத்த பாடல் தனித்துத் தெரிந்தது.

கர்நாடக சங்கீதம் என்பது அறிந்தவர்களுக்கு மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது. ஆனால், தன் இசையால் கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தினார் கே.வி.மகாதேவன். எளிய மனிதர்களுக்குமாகக் கொண்டு சேர்த்தார். இன்னும் சொல்லப் போனால், எந்தவிதமான பாடலாக இருந்தாலும், அங்கே கர்நாடக சங்கீத பாணியை மெல்லிய இழைபோல் பாட்டு முழுவதும் விரவவிட்டிருப்பார் மகாதேவன். ஒருகட்டத்தில், ‘இது கே.வி.மகாதேவன் பாணி’ என்றே ஆனது.

’நிலவோடு வான் முகில் விளையாடுதே’ என்ற பாடல் முழுக்க முழுக்க இசை ஞானம் அறிந்தவர்களால் கூட சுலபமாகப் பாடமுடியாது. ஆனால், கிராமத்தில் விவசாயம் செய்பவர்கள் கூட, இந்தப் பாட்டுப்புத்தகத்தை வாங்கிவைத்துக் கொண்டு, அச்சுஅசல் அதே ஏற்ற இறக்கங்களுடன் பாடினார்கள். அதற்குக் காரணம்... கே.வி.மகாதேவனின் கர்நாடக இசை. இன்னொரு காரணம். அந்த இசையை எல்லோர்க்குமாகக் கொண்டு சேர்த்த ஸ்டைல்!

கே.வி.மகாதேவன்
கே.வி.மகாதேவன்

முக்தா சீனிவாசனின் ‘முதலாளி’ படத்தில், ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன்மயிலே. நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’ என்ற பாடல், சிட்டிமக்களாலும் பட்டிதொட்டி கிராம மக்களாலும் ரசிக்கப்பட்டது. முணுமுணுக்கப்பட்டது. ஒருபக்கம் இயக்குநர் ஏ.பி.நாகராஜன் தன் படங்களுக்கு திரை இசைத் திலகத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். அதேபோல், பி.ஆர்.பந்துலுவும் தன் படங்களுக்கு மகாதேவனின் பாடல்களும் இசையும் மிக அவசியம் என்பதைப் புரிந்துவைத்திருந்தார். தொடர்ந்து பயன்படுத்தினார்.

கே.வி.மகாதேவனின், காதல் பாடல்கள் பலாச்சுளை. சோகப்பாடல்கள் வீணையின் இதம். உற்சாகப் பாடல்கள், தபேலாவின் வேகம். தத்துவப் பாடல்கள் புல்லாங்குழலின் மென்மை. இப்படித்தான், கே.வி.மகாதேவனின் பாடல்கள், ஹிட்டடித்தன. ‘உன்னைக்காணாத கண்ணும் கண்ணல்ல’ என்று உருகவைப்பார். ’இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம்’ என்று கிறங்கடிப்பார். ’நதி எங்கே போகிறது கடலைத்தேடி’ என்றும் ‘பறவைகள் பலவிதம்’ என்றும் ‘கண்ணெதிரே தோன்றினாள் கனிமுகத்தைக் காட்டினாள்’ என்றும் ஒவ்வொருவிதமாக, பாடல்களைக் கொடுத்த கே.வி.மகாதேவன், பாட்டுக்குத்தான் மெட்டு என்பதில் உறுதியாக இருந்தார்.

‘நாதர்முடிமேலிருக்கும் நல்லபாம்பே’ என்ற பாடலைக் கேட்டால் நாமே மயங்கிவிடுவோம். ‘திருவிளையாடல்’ படத்தில் கே.பி.சுந்தராம்பாள் பாடல் அற்புதம் என்று சொன்னால், டி.ஆர்.மகாலிங்கம் கோபித்துக் கொள்வார். இவரின் பாடலைச் சொன்னால், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்று டி.எம்.எஸ். எகிறியடிப்பார். சரி... அவரைச் சொல்ல வார்த்தைகள் தேடினால், ‘ஒருநாள் போதுமா?’ என்று டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா கேட்பார். ‘பழம் நீயப்பா’ பாடல் இன்றைக்கும் முருகன் கோயிலில் ஒலித்துக் கொண்டிருக்கிற பாடல். அந்த முருகப்பெருமானுக்கே ரொம்பப் பிடித்த பாடலாகக் கூட இருக்கலாம்!

’நலந்தானா நலந்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா?’ என்ற பாடல், இன்றைக்கும் காதலர்கள் குசலம் விசாரித்துக்கொள்கிற பாடல். பேரறிஞர் அண்ணாவே வியந்து மகிழ்ந்து நெகிழ்ந்த பாடல். இவர்தான் ‘எலந்தபயம்’ பாடலையும் இசைத்து மிகப்பெரிய ஹிட்டாக்கினார் என்றால் நம்பவே மாட்டார்கள்.

தேவர் பிலிம்ஸ் தன் படங்களில், தொடர்ந்து கே.வி.மகாதேவனின் இசையையே பயன்படுத்திக் கொண்டது. படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுக்கிற மேஜிக், மாமா என்று அன்புடன் அழைக்கப்படுகிற கே.வி.மகாதேவனுக்கே உரிய ஸ்டைல்! ‘ஏதோ ஏதோ ஏதோவொரு மயக்கம், அது எப்படி எப்படி வந்தது எனக்கும்’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் நான்கு நிமிடத்துக்கு நாம் மயங்கிச் சுதாரிப்போம். ’திருமணமாம் திருமணமாம் ஊரெங்கும் திருமணமாம்’ என்ற பாடல், கல்யாண ஊர்வலத்தில் நம்மையும் ஒருவராக அழைத்துச் செல்லும்.

குரலால் தனித்துவம் மிக்க பாடகியாக மிகப்பெரிய பேரெடுத்த எல்.ஆர்.ஈஸ்வரியை அறிமுகப்படுத்தினார் கே.வி.மகாதேவன். ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்று மெல்லிசை மன்னரின் இசையில் முதன்முதலாகப் பாடினாலும் எஸ்பி.பி-யின் ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடலும் இசையும் மிகப்பெரிய கவனம் பெற்றது. அந்தப் பாடலின் நடுவே வருகிற ஒவ்வொரு இசையும் நம்மைத் துள்ளாடச் செய்யும். வரிகளும் இசையுமாக வந்து மனதை தள்ளாடச் செய்யும்.

இசையின் மகத்துவங்களை அறிந்த கே.வி.மகாதேவனின் முக்கியமான ஸ்டைல்... சைலண்ட். அதாவது மெளனம். பாடல் வந்துகொண்டிருக்கும். இசையும் வரிகளுமாகக் கலந்து கைகோத்து நம்மை என்னவோ செய்துகொண்டிருக்கும். 'என்னதான் ரகசியமோ இதயத்திலே/ நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள்... நடுநடுவே இசையே இல்லாமல் வரிகள் மட்டும் வந்து பச்சக்கென்று இன்னும் பாடலுடன் உறவாடத் தொடங்குவோம்.

‘வசந்தமாளிகை’ படத்தின் எல்லாப் பாடல்களும் அப்படியொரு வெற்றிப் பாடல்களாக அமைந்தன. ‘ஓ மானிடஜாதியே’ என்று விமானத்தில் பாடுகிற பாடல் புது தினுசாக இருந்தது. ‘ஏன் ஏன் ஏன்...’ என்ற பாடலில், ‘அதில் நான் சக்கரவர்த்தியடா’ என்று சட்டென்று ஆர்ப்பரிக்கும் இசை அடங்கி, வார்த்தைகள் மட்டும் வரும்போது, பாடலும் சக்கரவர்த்தியின் கம்பீரத்தைப் பெற்றிருக்கும்.

‘அன்னத்தைத் தொட்ட கைகளிலே மதுக்கிண்ணத்தை இனி நான் தொடமாட்டேன்’ என்று பாடிக்கொண்டே இருக்கும்போது, ’உன் உள்ளம் இருப்பது என்னிடமே அதை உயிர்போனாலும் தரமாட்டேன்... உயிர் போனாலும் தரமாட்டேன்’ என்று சொல்லும்போது இசையை மெளனமாக்கி, வார்த்தைகளை கனமாக்கி காதலுக்குள் மூழ்கடித்துவிடுவார் கே.வி.மகாதேவன்.

ஜெயலலிதா பல பாடல்களைப் பாடியிருக்கிறார். ’’ஜெயலலிதா குரலில் ஒரு மேஜிக் இருக்கு. அதனால இந்தப் பாட்டை அவங்களே பாடட்டும்’’ என்று எம்ஜிஆரிடம் சொல்ல, எம்ஜிஆரும் சம்மதம் தெரிவிக்க, ‘அம்மா என்றால் அன்பு’ என்ற பாடலை முதன்முதலாகப் பாடினார் ஜெயலலிதா.

நாற்பதுகளின் தொடக்கத்தில் தொடங்கிய மகாதேவன் மாமாவின் இசைப்பயணம் எழுபதுகளின் இறுதி வரை தொடர்ந்தது. 1967-ம் ஆண்டில், இசையமைப்பாளர்களுக்கும் தேசிய விருது வழங்கலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்ற முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் தான்!

இயக்குநர் கே.விஸ்வநாத்தின் பல படங்கள் இசையை மையமாகக் கொண்டும் கலைக்கு முக்கியத்துவம் கொண்டும் உருவாக்கப்பட்டன. அப்படி அவர் உருவாக்கிய ‘சங்கராபரணம்’ படத்துக்கு கே.வி.மகாதேவனே இசையமைத்தார். தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழகத்திலும் தெலுங்கு மொழியிலேயே வந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது இந்தப் படம். இந்தப் படத்தின் பாடலைப் பாடாத இசைக்கச்சேரிக்காரர்களே இல்லை. இந்தப் படத்துக்காக எஸ்பி.பி-க்கு சிறந்த பாடகர் விருதும் கே.வி.மகாதேவனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் கிடைத்தன.

எண்பதுகளின் இறுதி வரையிலும் அதாவது மெல்லிசை மன்னர், வி.குமார், விஜயபாஸ்கர், சங்கர் கணேஷ், இளையராஜா, கங்கை அமரன், தேவா, சந்திரபோஸ், எஸ்.ஏ.ராஜ்குமார், வி.எஸ்.நரசிம்மன் என பல இசையமைப்பாளர்கள் வந்த நிலையிலும் மகாதேவன் இசைைத்துக் கொண்டுதான் இருந்தார்.

‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் அந்த உறவுக்குப் பெயர் என்ன... காதல்...’ என்ற பாடலும் ‘மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையாகக் கையைத் தொட்டு அள்ளியள்ளி அணைக்கத்தாவினேன்... நீயும் அச்சத்தோடு விலகி ஓடினாய்’ என்பதுமான எத்தனையோ ஆயிரமாயிரம் முத்துமுத்தான பாடல்களைக் கொடுத்த திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன், கர்நாடக சங்கீதம் எனும் முரட்டுக்குழந்தைக்குத் திலகமிட்டு, பூச்சூட்டி, மெல்லிசையாக்கி அழகுபார்த்த செல்ல மாமா!

1918-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி பிறந்தவர் கே.வி.மகாதேவன். நூற்றாண்டுகளைக் கடந்தும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிற, போற்றப்பட்டுக் கொண்டே இருக்கிற, கொண்டாடிக்கொண்டே இருக்கிற மகா இசைமேதை மகாதேவனின் 105-வது பிறந்தநாள் இன்று!

மகாதேவன் எனும் இசை மாமாவைக் கொண்டாடுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in