ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு கரோனா: நாடக நிகழ்ச்சி ரத்து

ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு கரோனா: நாடக நிகழ்ச்சி ரத்து
டேனியல் கிரேக்

ஜேம்ஸ்பாண்ட் நடிகரான டேனியல் கிரேக்கிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நாடக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

பிரபல ஜேம்ஸ்பாண்ட் நடிகர் டேனியல் கிரேக். இவர் தொடர்ந்து ஐந்து, பாண்ட் படங்களில் நடித்துள்ளார். பாண்ட் பட வரிசையில் 25வது படமும், கிரேக்கின் கடைசி பாண்ட் படமுமான, 'நோ டைம் டு டை' கடந்த வருடம் வெளியானது.

இந்நிலையில், கரோனா காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளான நியூயார்க்கின் பிராட்வே நாடக அரங்கத்துக்கு உதவ, அதன் நாடகங்களில் நடிக்க விரும்புவதாகவும் பிராட்வே-வின் ஓர் அங்கமாக இருக்க விரும்புவதாகவும் டேனியல் கிரேக் தெரிவித்திருந்தார்.

’மெக்பத்’ நாடகத்தில் டேனியல் கிரேக், ருத் நெக்கா
’மெக்பத்’ நாடகத்தில் டேனியல் கிரேக், ருத் நெக்கா

அதன்படி, பிராட்வே தயாரித்த ஷேக்ஸ்பியரின் ’மெக்பத்’நாடகத்தில் அவர் நடித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நாடகம் தொடங்க இருந்தது. இதற்காக டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. நாடகம் தொடங்க இருந்த 2 மணிநேரத்துக்கு முன்பாக, டேனியல் கிரேக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மேட்னி மற்றும் மாலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.

’ரசிகர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். அனைவரின் பாதுகாப்பும் முக்கியமானது என்பதால், நிகழ்ச்சி ரத்து செய்யப்படுகிறது. டிக்கெட் வாங்கியவர்கள் அதற்கான பணம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. பிராட்வே நாடக நடிகர்கள் பலருக்கு ஏற்கனவே கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.