சிவ சங்கர் மாஸ்டர் காலமானார்

சிவ சங்கர் மாஸ்டர் காலமானார்

நடன இயக்குநர் சிவசங்கர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இரவு காலமானார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநர் சிவசங்கர். இந்தியாவின் பல மொழித் திரைப்படங்களில் 800-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு நடனம் வடிவமைத்துள்ளார். ‘திருடா திருடி’ திரைப்படத்தில் இவர் வடிவமைத்த மன்மத ராசா பாடல் இன்றளவும் தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாகத் திகழ்கிறது. மேலும் ‘மகதீரா’ திரைப்படத்தில் தீரா தீரா பாடலுக்கு அவர் நடனம் வடிவமைத்ததற்காகத் தேசிய திரைப்பட விருது பெற்றார். கடைசியாக, ‘பாகுபலி’ திரைப்படத்திற்கு நடனம் அமைத்திருந்தார். மேலும், ‘வரலாறு’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘பரதேசி’, ‘தில்லு முல்லு’, ‘அரண்மனை’, ‘சர்கார்’, உள்பட ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரின் மருத்துவச் செலவுக்குப் பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடந்த கரோனா காலகட்டத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகளைச் செய்ததாகக் கூறப்படும் பாலிவுட் நடிகர் சோனு சூட், சிவசங்கர் மாஸ்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தகவலறிந்து, தான் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்திருந்தார். அதைத் தொடர்ந்து நடிகர் சிரஞ்சீவி ரூ 3 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்து உதவினார்.


72 வயதான சிவசங்கர் சிகிச்சைப்பெற்றுவந்த ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் தற்போது, அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கரோனா தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.