டி.ராமா நாயுடு : கின்னஸில் தடம் பதித்த தென்னக தயாரிப்பாளர்!

- நினைவுநாள் சிறப்புப் பகிர்வு
விருதுபெறும் ராமா நாயுடு
விருதுபெறும் ராமா நாயுடு

படங்களைத் தயாரிப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதிலும் படத்தைத் தயாரித்துவிட்டு, ரிலீஸ் செய்வதற்குள் மறு ஜென்மம் எடுத்த உணர்வே வந்துவிடுகிறது தயாரிப்பாளர்களுக்கு! ஆனால் திரையுலகில், மிகப்பெரிய ஜாம்பவான் தயாரிப்பாளராக வலம் வந்து, இன்றைக்கு அவரின் பெயரைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது தெலுங்கு சினிமாவும் தமிழ் சினிமாவும்! அவர்... டி.ராமா நாயுடு. 150-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர்!

மொத்தம் 13 மொழிகளில் படங்களைத் தயாரித்திருக்கிற ராமா நாயுடுவின் இயற்பெயர் டகுபதி ராமா நாயுடு. இதைத்தான் டி.ராமா நாயுடு என்று அழைக்கிறார்கள்.

1936-ம் ஆண்டு ஜூன் 6-ம் தேதி, வெங்கடேஸ்வரலு - லட்சுமி தேவம்மா தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ராமா நாயுடு. மிடில் கிளாஸ் குடும்பம்தான் அவர்களுடையது. அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் திரையுலகிற்கும் எந்தத் தொடர்புமில்லை.

சொல்லப்போனால், நாயுடுவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் சினிமா மீது துளியும் ஆர்வம் கூட கிடையாது. ராமா நாயுடுவைப் பள்ளியில் சேர்த்தார்கள். ஆனால் படிப்பில் ஈடுபாடே வரவில்லை அவருக்கு. ‘பள்ளிக்கு அனுப்புகிறார்கள், படிக்க வேண்டும்’ என்கிற ரீதியில்தான் அவரின் அடுத்தடுத்த படிப்புகள் இருந்தன.

விடுமுறை நாட்களில், மருத்துவமனையில் கம்பவுண்ட்டராக வேலை பார்த்தார். ஒருவழியாக பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்தார். இன்னும் படிப்பின் மீதான வெறுப்பு அதிகரித்ததே தவிர, அதில் நாட்டமென்னவோ அதிகரிக்கவே இல்லை. ஊருக்குத் திரும்பிச் சென்றார்.

‘’நான் ரைஸ்மில் வைக்கப் போறேன்’’ என்று வீட்டில் சொன்னார். ரைஸ்மில் வைத்தார். ஆனால், மிகப்பெரிய நஷ்டத்தையே அது கொடுத்தது. ‘’உனக்கு வியாபாரமெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்று வீடு சொல்லியது. பிற்காலத்தில், தெலுங்குத் திரையுலகையே தான் தயாரிக்கும் படங்களால் கட்டியாளப் போகிறோம் என்பதெல்லாம் அப்போது ராமா நாயுடுவுக்கே தெரியாது.

அடுத்ததாக ஒரு பஸ் வாங்கினார். போக்குவரத்தில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், பணம்தான் போனது. நஷ்டம்தான் வரத்தாக வந்துசேர்ந்தது. இதன் பிறகுதான் பட நிறுவனத்தைத் தொடங்கினார்.

அப்பாவிடம் கெஞ்சிக்கூத்தாடி, சொத்தில் இருந்து தன் பங்கை விற்றுக் கொடுக்க மன்றாடி, அழுதுபுரண்டு, ஆர்ப்பாட்டங்கள் செய்து, ‘சம்பு பிலிம்ஸ்’ நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்ந்தார் ராமா நாயுடு. அப்போதிருந்தே சினிமாவின் லாப நட்டக் கணக்குகளையும் நுணுக்கங்களையும் படிக்க ஆரம்பித்தார்.

அந்தப் படக்கம்பெனியில் பங்குதாரராக இருக்கும் போது, நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்காராவ் முதலானவர்களின் நட்பும் பிரியமும் கிடைத்தது. அந்தச் சமயத்தில் சில படங்களில் சின்னச் சின்ன வேடங்களிலும் நடித்தார் ராம ராவ். ஒருகட்டத்தில், திடீரென்று, ‘சினிமா இருக்கட்டும், வேறொரு தொழில் தொடங்கலாம்’ என நினைத்து புகையிலைத் தொழிற்சாலையைத் தொடங்கினார். கைமேல் பலனைக் கொடுத்தது புகையிலை வியாபாரம். இவரே எதிர்பார்க்காத அளவுக்கான லாபம் வந்தமயமாக இருந்தது.

1962-ம் ஆண்டு, சென்னையில் தனது உறவினரும் நண்பருமான ஒருவருடன் சேர்ந்து செங்கல் சூளை ஒன்றை ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் அவரின் உறவினரான பாஸ்கர் ராவ் என்பவர், ‘அனுபோ’ எனும் படக்கம்பெனியைத் தொடங்கினார். அதில் இணைந்த ராமா நாயுடு, 1963-ம் ஆண்டு, ‘அனுராகம்’ எனும் படத்தைத் தயாரித்தார். புகையிலை கைகொடுத்த அளவுக்கு படம் கைகொடுக்கவில்லை. பெருத்த நஷ்டத்தைச் சந்தித்தார்.

ஆனாலும், ‘படத்தில் விட்ட நஷ்டத்தை படத்திலேயே எடுத்துக் காட்டுகிறேன்’ என உள்ளுக்குள் வைராக்கியத்துடன் களத்தில் இறங்கினார் ராமா நாயுடு. இந்த நிலையில் பாஸ்கர ராவ் கழன்று கொண்டார். தன் இளமைக்கால நண்பர்களான ராஜேந்திர பிரசாத்தையும் சுப்பாராவையும் சேர்த்துக் கொண்டு, ‘சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ்’ என்று தன் மகன் பெயரில் படக்கம்பெனியைத் தொடங்கினார் ராமா நாயுடு.

1963-ம் ஆண்டு படத்தில் பணத்தை விட்டார். அடுத்த வருடமே ‘ராமுடு பீமுடு’ என்கிற படத்தைத் தயாரித்தார். என்டிஆர் நடித்த இந்தப் படத்தின் வெற்றி, எகிடுதகிடாக எகிறியது. திரையிட்ட தியேட்டர்களிலெல்லாம் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. என்டிஆரின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்தது. அடுத்தடுத்து படங்களைத் தயாரித்தார் நாயுடு. மக்களின் நாடித்துடிப்பைப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு படங்களாக ரிலீஸ் செய்ய, பத்திரிகைகள் கொண்டாடின. மக்கள் ரசித்து ரசித்துப் பார்த்தார்கள். வெற்றி மேல் வெற்றியாகக் குவித்தார் ராமா நாயுடு.

பிறகு, விஜயா வாஹினி ஸ்டூடியோவின் நாகிரெட்டியின் மகன்களுடன் இணைந்து, ‘விஜயா - சுரேஷ் கம்பைன்ஸ்’ என்ற பெயரில் படங்களைக் கொடுக்கத் தொடங்கினார் நாயுடு. அவருக்கு முதன் முதலில் மெகா ஹிட் கொடுத்த ‘ராமுடு பீமுடு’வை தமிழ் ரசிகர்களும் கொண்டாடினார்கள். இன்று வரைக்கும் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். அதுதான் எம்ஜிஆர் நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’.

பின்னர், விஜயா நிறுவனமும் இவரின் நிறுவனமும் பிரிந்தது. ஆனாலும் படங்கள் தயாரிப்பதை விடவே இல்லை நாயுடு. நம்மூர் ஏவி.எம். போல், நம்மூர் ஜெமினி போல், நம்மூர் பக்ஷிராஜா கம்பைன்ஸ் போல், நம்மூர் மாடர்ன் தியேட்டர்ஸ் போல், நம்மூர் ஜூபிடர் பிக்சர்ஸ் போல், நல்ல தரமான படங்களைக் கொடுக்கவேண்டும், கண்ணியமான படங்களை மக்களுக்கு தரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் நாயுடு.

1962-ம் ஆண்டு தொடங்கிய இவரின் திரைப்பயணத்தில் எத்தனையோ படங்கள், எத்தனையோ நடிகர்கள், எத்தனையோ இயக்குநர்கள்... என தெலுங்கு சினிமாவின் முன்னணியில் வந்து ஜொலித்திருக்கிறார்கள். இவரின் படங்கள் வருடத்துக்கு இரண்டு மூன்று படங்களாவது வந்துவிடும்.

ஒரு படத்தைத் தயாரிக்கும் பணியானது பாதி நிறைவடைந்திருக்கும் போதே, அடுத்த படம் குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு படம் வெளியாகும் போது, அடுத்த படத்தின் முக்கால்வாசிப் பணிகளை முடித்திருப்பார். இந்தப் படத்தின் விளம்பரம் வரும்போதே அடுத்த படத்துக்கான அறிவிப்பையும் விளம்பரத்தையும் சேர்த்து ‘ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்’ அடித்தார்.

ஒரு கட்டத்தில் ஹைதராபாத்துக்கு அருகில் உள்ள மலைப்பகுதியில் ஸ்டூடியோ கட்ட முடிவு செய்தார். ‘’மலையும் பாறையுமா இருக்கு. காடு மாதிரி இருக்கு. படமெடுக்க யாரும் ஸ்டூடியோவுக்கு வரமாட்டாங்களே...’’ என்று பலரும் சொன்னார்கள். அதையும் மாற்றிக் காட்டினார் நாயுடு .

வெளிப்படப்பிடிப்புக்காக, நனகிரம்குடா எனும் ஊரில் சினிமாப் படப்பிடிப்பு நடத்துவதற்காக, அச்சுஅசலாக ஒரு கிராமத்தையே உருவாக்கினார். அந்த கிராமமும் தெருக்களும் வீடுகளும் எல்லா மொழிக்கான படங்களை எடுக்கும்விதமாக கட்டமைத்தார். ’’இதெல்லாம் முடியாது’’ என்கிற வார்த்தையை எவரேனும் சொன்னாலே கோபம் வந்துவிடுமாம் ராமா நாயுடுவுக்கு.

‘’உலகத்துல, முடியாதுன்னு ஒண்ணு இல்லவே இல்ல. அது என்னால முடியாததா, நான் செய்யமுடியாததா இருக்கலாம். ஆனா, அதை நீ செய்யலாம். அதோ... அங்கே ஒருத்தர் நடந்து போறாரே... அவர் செய்யலாம். ஆக, யாரோ ஒருத்தர் செய்யமுடியும்னு இருக்கிற போது, ‘இதெல்லாம் முடியாது’ன்னு நாம சொல்லவே கூடாது’’ என்பதுதான் ராமா நாயுடுவின் தாரக மந்திரம்; வெற்றிக்கான சூத்திரம்!

தமிழில் நேரடியாக பத்துக்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தார் ராமா நாயுடு. ‘வசந்த மாளிகை’ ஒருசோறுபதம்! தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பஞ்சாபி, ஒரிய மொழி என 13-க்கும் மேற்பட்ட மொழிகளில் படங்களைத் தயாரித்த ராமா நாயுடு, ஆங்கிலப் படமும் தயாரித்திருக்கிறார். தனியொருவராக இருந்து, திரையுலகில் 150 படங்களைத் தயாரித்தவர் என்று கின்னஸ் புத்தகத்தில் பதிவாகி, சரித்திரம் படைத்திருக்கிறார்.

மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே உட்பல பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். ஆந்திரத்தின் உயரிய விருதான நந்தி விருது, இவருக்கு ஐந்து முறை வழங்கப்பட்டிருக்கிறது. நான்கு முறை இவரின் படங்களுக்கு தேசியவிருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் உள்ள நடிகர் நடிகைகளை எடுத்துக்கொண்டால், அவர்களில் பெரும்பாலானோர் ராமா நாயுடு படங்களில் நடித்தவர்களாகவே இருப்பார்கள்.

தெலுங்கு மற்றும் இந்தித் திரையுலகில் இதுவரை 24-க்கும் மேற்பட்ட இயக்குநர்களையும் ஏராளமான இசையமைப்பாளர் களையும் அறிமுகப்படுத்தி சாதித்துக் காட்டியவர் என்று தெலுங்குத் திரையுலகம் ராமா நாயுடுவின் புகழை பெருமையுடன் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. ரஜினியை வைத்து ‘தனிக்காட்டு ராஜா’ முதலான படங்களையும் தயாரித்தார்.

‘ராமா நாயுடு சாரிடபிள் டிரஸ்ட்’ ஒன்றை உருவாக்கி, தனது வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை அதற்கு எழுதிக் கொடுத்து, 1991-ம் ஆண்டில் இருந்து மக்களுக்கு பல உதவிகளைச் செய்து வந்தார். இன்றைக்கும் அந்த டிரஸ்ட் இயங்கிக் கொண்டிருக்கிறது. 2015-ம் ஆண்டு, பிப்ரவரி 18-ல், தனது 78-வது வயதில், மறைந்தார் ராமா நாயுடு.

அவரின் மகன்களில் சுரேஷ் ஒருவர். மற்றொருவர்... மிகப்பிரபல நடிகராக பல ஹிட் படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் வெங்கடேஷ். ராமா நாயுடுவின் மகள் லட்சுமி. நடிகர் நாகார்ஜுனாவுக்கும் இவருக்கும் திருமணமாகிப் பிரிந்தார்கள். ராமா நாயுடுவின் பேரனும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவும் நடிப்பில் அசத்திக் கொண்டிருக்கிறார்.

டி.ராமாநாயுடுவுக்கு முன், திரையுலகில் உறவென்றே எவருமில்லை. ஆனால், தெலுங்குத் திரையுலகத்தையும் தென்னகத் திரையுலகத்தையும் மிகப்பெரிய அளவில் கட்டியாண்டு, அதை வளர்த்தெடுத்த ஜாம்பவான் ராமா நாயுடுவைக் கொண்டாடுபவர்கள் எல்லோருமே சினிமாவின் உறவுக்காரர்கள்தான்; ராமாநாயுடுவின் சொந்தங்கள்தான்!

திரையுலக ஜாம்பவான் ராமாநாயுடுவைப் போற்றுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in