த்ரில்லரில் திகைக்க வைத்த ‘டிக்... டிக்.. டிக்..!’

- கமல் - பாரதிராஜா - இளையராஜா கூட்டணியின் மற்றுமொரு வெற்றி!
த்ரில்லரில் திகைக்க வைத்த ‘டிக்... டிக்.. டிக்..!’

கிராமத்தில் இருந்தால் நகரத்தின் மீது காதல் வெளிப்படுவதும் நகரத்தில் இருப்பவர்களுக்கு கிராமம் மீதான ஆச்சரியங்கள் இருப்பதும் சகஜம்தானே. இயக்குநர் இமயம் என்று போற்றிக் கொண்டாடப்படும் பாரதிராஜாவும் கிராமத்தை அப்படியே இயல்பாகக் காட்டி, படங்கள் எடுத்து வந்தார். ஆனால், ‘இவர் கிராமத்துப் படங்கள் மட்டும்தான் எடுப்பாரு போலப்பா. சிட்டி சப்ஜெக்ட்டெல்லாம் வராது போல...’ என்று எழுந்த விமர்சனத்தை ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்திலேயே உடைத்தார் பாரதிராஜா. அதுமட்டுமில்லாமல், பாரதிராஜாவினுள்ளே இன்னொரு முகம் இருந்தது. க்ரைம் ப்ளஸ் சிட்டி சப்ஜெக்ட் எடுப்பதில் ஆர்வத்துடன் இருந்தார். அப்படி அவர் எடுத்த சிட்டி ப்ளஸ் க்ரைம்தான் ’டிக்... டிக்... டிக்...’

முதல் படமான ’16 வயதினிலே’, ’கிழக்கே போகும் ரயில்’ எடுத்த பிறகு கமலை வைத்து ’சிகப்பு ரோஜாக்கள்’ எனும் க்ரைம் த்ரில்லர் சிட்டி சப்ஜெக்ட் எடுத்தார் பாரதிராஜா. அதையடுத்து ’நிறம் மாறாத பூக்கள்’, ’புதிய வார்ப்புகள்’, ’நிழல்கள்’ (இதுவும் சிட்டி சப்ஜெட்டுதான்), அலைகள் ஓய்வதில்லை என்றெல்லாம் ஒரு ரவுண்டு போய்விட்டு, மீண்டும் க்ரைம், சிட்டி, த்ரில்லர் என்று களமிறங்கினார். இந்த முறை திரும்பவும் கமலுடன் கூட்டணி சேர்ந்தார்.

மூன்று அழகிகள். ஒருவர் பாடகி, இன்னொரு பாப் டான்ஸர். அடுத்தவர் மாடலிங் பெண். ஓபராய் எனும் பெருமுதலாளி, இப்படியான அழகிகளைத் தேர்வு செய்து, விழா எடுத்து, அந்த அழகிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பார். அங்கே, அவர்களுக்கு ஏதொவொரு விபத்தும் அந்த விபத்து நடக்கும். ஆபரேஷனின்போது உடலுக்குள் வைரங்களும் வைத்து தைத்து நூதனக் கடத்தல் நடந்துகொண்டிருக்கும்.

விளம்பரக் கம்பெனியின் புகைப்படக் கலைஞர் திலீப் என்கிற கதாபாத்திரத்தில் கமல். இங்கே ஒருவிஷயம்... திலீப் எனும் பெயர் பாரதிராஜாவுக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ. ’சிகப்பு ரோஜாக்கள்’ படத்திலும் கமலின் பெயர் திலீப். மூன்று நாயகிகள். மூன்று அழகிகள். மாதவி, ராதா, ஸ்வப்னா. இவர்களில் ராதாவின் பெயர் ராதாதான். மாதவியின் பெயர் சாரதா. இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். ’சிகப்பு ரோஜாக்கள்’ பட ஸ்ரீதேவிக்கும் பிறகு வந்த ‘ஒருகைதியின் டைரி’ ரேவதிக்கும் சாரதா என்றே பெயர் வைத்திருந்தார் பாரதிராஜா.

மூன்று பேரின் உடம்பிலும் ஆபரேஷன் செய்யப்பட்ட தழும்புகள். ஒருகட்டத்தில் ஏதோ விபரீதம் கமலுக்குத் தெரியவர... அதே நேரத்தில், ஸ்வப்னா திடீரென கொல்லப்படுகிறார். அந்தக் கொலைக்கு கமல்தான் காரணம் என்று போலீஸ் தேடுகிறது. அவர் தப்பித்தாரா, நிரபராதி என்று நிரூபித்தாரா, ஓபராய் என்கிற வைரக் கடத்தல்காரனை என்ன செய்தார்... என்று திக்திக் நிமிஷ பரபரப்புகளும் படபடப்புகளுமாகச் சொல்லியிருப்பார் பாரதிராஜா!

எண்பதுகளில் கமல் தனியழகு. பேரழகுடன் ரசிகர்களை மயக்கிப் போட்டார். அடர்த்தியான, அளவெடுத்த மீசை, ஸ்டெப் கட்டிங் ஹேர்ஸ்டைல், சுள்ளாப்பும் சுறுசுறுப்பும் கொண்ட உடல்மொழி என்று பெண்களின் தலையணைக்குக் கீழேயும், சலூன் கடைகளிலும் கமல் புகைப்படம் இருந்த காலம் அது. கமல் போட்டோவை கையில் வைத்துக்கொண்டு சலூன் கடைக்குப் போய், ‘இந்தக் கட்டிங் பண்ணிவிடுங்கண்ணே’ என்று சொன்ன இளைஞர்கள் ஏகப்பட்ட பேர் உண்டு!

அழகிகள் கதை. வைரக் கடத்தல் கதை. அழகிகளும் வைரம் போல் தகதகத்து ஜொலித்தார்கள். கூடுதல் கவர்ச்சியிலும் ஈர்த்தார்கள். ஷ்யாம் சுந்தர் என்பவரை வில்லனாக அறிமுகப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ’எனக்கு எல்லா தருமங்களும் தெரியும்; எல்லா நியாயங்களும் தெரியும்’ என்று வில்லன் பேசும் ‘பஞ்ச்’ வசனம் செம பாப்புலர். அவருக்குக் கையாளாக, ஆல் இன் ஆல் ஆளாக தியாகராஜன் நடித்திருப்பார். இன்னொரு விஷயம்... படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் யார் யாருக்கோ குரல் கொடுத்திருப்பார் பாரதிராஜா.

மூன்று நாயகிகள் என்றபோதும் மாதவிதான் மெயின் ஹீரோயின். கமலுக்கு ஜோடியும் இவர்தான். மாதவிக்கும் கமலுக்குமான காதல் அழகிய கவிதையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அவர்கள் இருவரும் அடிக்கடி முட்டிக்கொள்வதும் கோபப்படுவதும் பிறகு ஈஷிக்கொள்வதுமாக, கமலும் சரி, அந்தக் கண்களை வைத்துக்கொண்டு மாதவியும் சரி... காதல் ததும்ப நடித்திருப்பார்கள்.

ரெண்டுபேருக்கும் சண்டை. பேசவே மாட்டார் மாதவி. கமல், தாடியே வளர்த்துவிடுவார். ஒருநாள் ஆபீசுக்கு போன் வரும். “நான் ஆறுமணி ப்ளைட்டுக்கு சிலோன் போறேன். நாலரைக்கெல்லாம் வந்துருவேன். நீங்க அங்கே வரவேணாம். என்னைப் பாக்க வேணாம். எனக்கு பொக்கே கொடுக்க வேணாம். எனக்கு டாட்டா காட்ட வேணாம். ஆறு மணிக்கு ப்ளைட்டு. நாலரைக்கெல்லாம் வந்துருவேன். வர வேணாம்” என்று சொல்வதைக் கேட்டு, இன்னும் நொந்துபோவார் கமல்.

பிறகு கமலின் முதலாளி தேங்காய் சீனிவாசன், “முண்டம்... உன்னை அவ வரச்சொல்றாடா” என்று விளக்குவார். உடனே கமல் ஷேவ் செய்துவிட்டு, ஜம்மென்று வருவார். ஆனால் தேங்காய் சீனிவாசனின் டப்பாக் காரில் விமான நிலையம் போவதற்குள், விமானம் சிலோனே போயிருக்கும் போல! இங்கே, காதலையும் அதற்குள் காமெடியையும் வைத்து ஸ்கிரிப்ட் ரெடி செய்யப்பட்டிருக்கும்.

அதேபோல், மூன்று அழகிகளில் ஒருவரான ராதாவின் வீட்டுக்கு வந்திருக்கும் கமல், அப்பா பற்றி கேட்பார். ’விட்டுட்டுப் போயிட்டார்’ என்பார். அம்மாவைக் கேட்பார். ’ஆஸ்துமாவால் படுத்தபடுக்கை’ என்பார். ’அண்ணன் தம்பி..?’. என்று கமல் கேட்பார். ’யாருமே இல்ல’ என்பார் ராதா சோகத்துடன்! பிறகு கமல். கிளம்புவார். அப்போது, ’’இனிமே யாராவது அண்ணன் இல்லியான்னு கேட்டா, இல்லேன்னு சொல்லிடாதே. அண்ணன் நானிருக்கேன்’’ என்று சொல்வார் கமல். அற்புதமான, நெகிழச் செய்யும் காட்சி இது.

ஒரு கட்டத்தில் காதலியுடனான மோதலின் காரணமாக லேசான கழிவிரக்கம். போதாக்குறைக்கு சபலமும் எட்டிப்பார்க்கும். தேங்காய் சீனிவாசன் போன் நம்பர் கொடுப்பார் கமலிடம். போதையில் ஸ்வப்னா வீட்டுக்கு கமல் செல்ல, அங்கே நடக்கும் கூத்துக்கள், காமெடியாகவும் பயமாகவும் இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். படத்தில், அந்தக் காட்சி கொஞ்சம் நீளம்தான். ஆனாலும் அடுத்த கட்டத்துக்கு நகரும் கதைக்கு அது முக்கியமான கட்டம்தான். அப்போதுதான், அங்கு நடப்பதுதான் கமலைச் சிக்கலில் தள்ளிவிடும்.

அடுத்தடுத்து டேக் ஆஃப் ஆகிற கதை, விறுவிறுப்பும் த்ரில்லிங்குமாக இருக்கும். பாரதிராஜாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கண்ணன், அழகழகாய் படமாக்கியிருப்பார். ஸ்வப்னா இறந்ததும் கமல் அழுகையுடனும் பயத்துடனும் பண்ணுகிற ஒவ்வொரு செயல்களும் மிரட்டியெடுக்கும். வசனங்களை கலைமணி எழுதினார். வசனங்கள் ஜாலியாகவும் கேலியாகவும் ரகளையாகவும் ரசனையாகவும் எழுதப்பட்டிருக்கும்.

மனோபாலா, மணிவண்ணன், கே.ரங்கராஜ் என இன்றைக்கு வெற்றிக்கொடி நாட்டிய இயக்குநர்கள் பலரும் இதில் உதவி இயக்குநர்கள். அப்புறம்... இரண்டுவிஷயம் கொசுறாக..! படத்தில் கமலுக்கான உடைகளை வடிவமைத்தவர் வாணி கமலஹாசன். அடுத்தது... படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அழகியைக் கொல்லும் காட்சி இருக்கும். அவர்... சரிகா.

கமல்தான் நாயகன் என்றாலும் இன்னொரு நாயகனும் இருக்கிறார். அவர்தான் இசைஞானி இளையராஜா. கடிகார முள்ளின் சத்தத்தைக் கொண்டு டைட்டில் போடுகிற விதமும் ஓர் அலறலுடன் கூடிய டிரம்ஸ் இசையும் படத்தின் கதையையும் கதை போக்கிற போக்கையும் நமக்குச் சொல்லி உணர்த்திவிடுகிற இசையைத் தந்திருப்பார். படம் மொத்தத்திலும் ஒவ்வொரு காட்சியிலும் விதம்விதமான, ரகம்ரகமான இசையால் நம் மனங்களைக் களவாடியிருப்பார் இளையராஜா.

பாடல்களும் அப்படித்தான். ’இதுவொரு நிலாக்காலம்’, ‘ பூமலர்ந்திட நடமிடும் பொன்மயிலே’, ’நேற்று இந்த நேரம்’ எனப் பாடல்கள் எல்லாமே இனிமை மத்தாப்புகள். வெடிக்கிற வன்மம் இல்லாமல், மெல்லிசாய் ஒளியைப் பரவவிடுகிற, சிதறவிடுகிற இசையை வழங்கியிருப்பார். இங்கேயும்... சூப்பரான கொசுறுத் தகவல்... டைட்டிலில் பாடியவர்கள் பட்டியலில், அறிமுகம் என்று லதா ரஜினிகாந்த் பெயரும் இடம்பெற்றிருக்கும்.

அவர் பாடிய பாடலும் (நேற்று இந்த நேரம்) மிகப்பெரிய ஹிட்டடித்தது. அற்புதமாகப் பாடியிருப்பார். கண்ணதாசனின் வரிகளும் வைரமுத்துவின் வரிகளும் ஒவ்வொரு பாடலிலும் வெகுவாக ரசிக்கப்பட்டன. ’இதுவொரு நிலாக்காலம்’ பாடலின் வரிகள் எல்லோராலும் கொண்டாடப்பட்டன. ‘ பாவைக் கண்டாலே / நிலவு நெளியாதோ / அழகைப் பார்த்தாலே ஓஹோ / அருவி நிமிராதோ / வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே / ஓஹோ யாரும் வந்து நடக்காத சாலை நீயே/ உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே’ என்று வைரமுத்து எழுதியிருப்பார்.

இதையடுத்து, ‘தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ / ராஜ மேகங்கள் ஓஹோ பூவைத் தூவாதோ / கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும் / ஓஹோ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும் / ஓஹோ பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது’ என்று கவிதைப் பூக்களை பாடல் முழுவதும் தூவிக்கொண்டே வந்திருப்பார் வைரமுத்து.

1981அக்டோபர் 26-ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளியானது ‘டிக்... டிக்... டிக்...’ திரைப்படம். கதையைவிட ஸ்டைலிஷாக அது படமாக்கப்பட்ட விதத்தை ரொம்பவே ரசித்தார்கள் மக்கள். இளையராஜா பிஜிஎம் ஜாலங்கள் அப்போதே கொண்டாடப்பட்டன!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in