கிரிக்கெட்டர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம்!

கிரிக்கெட்டர் தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம்!

கிரிக்கெட் வீரர் தோனி தனது முதல் தமிழ்ப்படம் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி படங்கள் தயாரிப்பில் களம் இறங்கியுள்ளார். தோனி எண்டர்டெயின்மெண்ட் என்றப் பெயரில் தொடங்கியுள்ள இந்த நிறுவனம் தென்னிந்திய மொழிகளில் படங்கள் தயாரிக்க இருக்கிறது என்ற செய்தி வெளியானது. அந்த வகையில், தோனி தற்போது அதிகாரப்பூர்வமாகத் தனது முதல் தமிழ்ப்படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தோனியின் மனைவியும், தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாக்‌ஷி இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். குடும்ப பொழுதுபோக்கு படமாக இது உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இவர் ஏற்கனவே, ’அதர்வா- தி ஆர்ஜின்’ என்ற முப்பரிமாண நாவலை எழுதியுள்ளார்.

இந்தப் படம் இயக்குவது குறித்து இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி பகிர்ந்து கொண்டதாவது, ‘சாக்‌ஷி தோனி எழுதிய கதையின் கருவைப் படிக்கும்போதே இதன் தனித்துவத்தை என்னால் உணரமுடிந்தது. இந்தக் கதை குடும்பங்களை மகிழ்வூட்டி, சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் என்று நம்பினேன். இந்தப் பயணத்தில் பங்கேற்பதில் ஒட்டுமொத்தக் குழுவும் ஆர்வமாக உள்ளது. ஒரு சிறந்த திரைப்படத்தை மக்களுக்குக் கொடுக்கப்போகிறோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்’ என்றார்.

இந்தப் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்தான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் க்ரைம் த்ரில்லர், நகைச்சுவை, அறிவியல் புனைவு என அனைத்து பிரிவுகளிலும் வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in