மரியாதையா 'வாரிசு' படத்தை ஓட்டுங்க: நடிகர் கஞ்சா கருப்புவின் டென்ஷன் வீடியோ வைரல்

மரியாதையா 'வாரிசு' படத்தை ஓட்டுங்க: நடிகர் கஞ்சா கருப்புவின் டென்ஷன் வீடியோ வைரல்

நடிகர் விஜய் நடித்த 'வாரிசு' படம் ஆந்திராவில் திரையிடுவதற்கு சிக்கல் எழுந்துள்ள நிலையில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு அதற்காக குரல் கொடுத்துள்ளார். அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' திரைப்படம் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் சரத்குமார், பிரகாஷ்ராஜ், குஷ்பு யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 12-ம் தேதி படம் இப்படம் வெளியாக உள்ளது.

பொங்கல் பண்டிகையின்போது ஆந்திராவில் சங்கராந்தி கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகைக்கு சிரஞ்சீவி நடிப்பில் 'வால்டர் வீரய்யா', பாலகிருஷ்ணா நடிப்பில் 'வீர சிம்ஹா ரெட்டி' உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. இதனால் சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை அளித்து தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்க முடிவால் விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதற்கு இயக்குநர்கள் சீமான், லிங்குசாமி உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ஸ்ரீ சபரி ஐயப்பன் படத்திற்கு டப்பிங் பேச நேற்று வந்த நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, 'வாரிசு' படத்திற்கு ஆதரவாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், "நான் தெரியாம தான் கேக்குறேன். இங்க ஒரு படம் ஹிட்டானால் அந்த கதையைத் தெலுங்குக்கு வேண்டும் என்றால் கொடுக்கத்தான் போகிறோம். நீங்க ஏன் 'வாரிசு' படத்திற்கு தியேட்டர் இல்லை என சொல்கிறீர்கள்? உங்க படம் மட்டும் 'பாகுபலி' தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓடக் கூடாதா? உங்க படம் வரும்போது ஸ்டே போட்டால் விடுவீங்களா? மரியாதையா 'வாரிசு' படத்தை ஓட்டுங்க, அப்படி ஓட்டுனாதான் பெருமை" என்று பேசியுள்ளார். நடிகர் விஜய் ரசிகர்களால் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in