நடிகர் ராதாரவியின் சினிமா டப்பிங் அலுவலகத்திற்கு சீல்: மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி!

டப்பிங் யூனியன் அலுவலகம்
டப்பிங் யூனியன் அலுவலகம்நடிகர் ராதாரவி தலைமையில் செயல்பட்டு வரும் சினிமா டப்பிங் அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்..!

சென்னை சாலிகிராமத்தில் நடிகர் ராதாரவி தலைமையில் செயல்பட்டு வரும் டப்பிங் யூனியன் கட்டிடம் விதிகளை மீறி கட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.

சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் தமிழ்த் திரைப்பட துறையில் இருக்கும் டப்பிங் குரல் கொடுக்கும் கலைஞர்களுக்கு சொந்தமான சங்கக் கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் கடந்த 2011-ம் ஆண்டு 47 லட்ச ரூபாய்க்கு அதாவது 40 லட்சம் இடத்திற்கும், 7 லட்சம் அங்கு இருந்த கட்டிடத்திற்கும் கொடுத்ததாகவும், பின்னர் 75 லட்சம் செலவு செய்து புதிய கட்டிடம் கட்டியதாகவும், மொத்தம் ஒரு கோடியே இருபத்தி ஐந்து லட்சம் செலவு செய்ததாக அந்த சங்கத்தின் அப்போதைய நிர்வாகிகள் கணக்குக்காட்டியுள்ளனர்.

இதோடு கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சியில் பிளான் அப்ரூவல் வாங்குவதற்கு 75 ஆயிரம் செலவு செய்ததாகவும் சங்கத்தின் வரவு, செலவு பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்காக சென்னை மாநகராட்சியில் டப்பிங் யூனியன் நிர்வாகம் எந்தவொரு அனுமதியையும் வாங்கவில்லை என்று மாநகராட்சியில் சிலர் புகார் கொடுத்ததின் பேரில் சென்னை மாநகராட்சி நிர்வாகம், டப்பிங் சங்க நிர்வாகத்திற்கு நோட்டீஸ் வழங்கி, கட்டிடத்தை பூட்டி சீல் வைக்க இருப்பதாகக் கூறி கால அவகாசம் வழங்கியது.

இந்த நிலையில் நடிகர் ராதாரவி தலைமையிலான தற்போதைய டப்பிங் சங்கத்தின் நிர்வாகிகள் மாநகராட்சியின் இந்த நோட்டீஸை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராதாரவியின் மனுவை தள்ளுபடி செய்து, “இந்த விஷயத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை” என நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் ராதாரவி தலைமையிலான நிர்வாகம் அந்தக் கட்டிடத்தில் இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்த இரண்டு மாத காலம் அவகாசமும் வழங்கியது. அந்த கால அவகாசம் முடிவடைங்த நிலையில் சென்னை சாலி கிராமத்தில் உள்ள டப்பிங் யூனியன் கட்டிடத்திற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in