கரோனா பாதிப்பு; வீட்டுத் தனிமையில் பிரபல நடிகைகள்!

லட்சுமி மன்சு, குப்ரா சேட்
லட்சுமி மன்சு, குப்ரா சேட்

கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து 2 நடிகைகள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்புவரை குறைந்திருந்த கரோனா பாதிப்பு, ஒமைக்ரான் வைரஸ் நுழைந்த பிறகு தினமும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. நேற்று 90 ஆயிரத்து 928 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி இருந்த நிலையில், இன்று புதிதாக 1,17,100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்த கரோனா பாதிப்பு 3,52,26,386 ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தொற்று பாதிப்புக்கு நடிகர், நடிகைகளும் தப்பவில்லை. கடந்த சில நாட்களாக, நடிகர் அருண்விஜய், நடிகை மீனா, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு உள்ளிட்டோருக்கு கரோனா பாதித்த நிலையில், இப்போது நடிகை லட்சுமி மன்சுவுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லட்சுமி மன்சு
லட்சுமி மன்சு

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும், நடிகை லட்சுமி மன்சு தமிழில், மணிரத்னத்தின் கடல், ஆதி, டாப்ஸி நடித்த மறந்தேன் மன்னித்தேன், ராதாமோகன் இயக்கிய காற்றின் மொழி உட்பட சில படங்களில் நடித்திருக்கிறார். கரோனா பாதிப்பால், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்த 2 வருடங்களாக கண்ணாமூச்சி விளையாடிய இந்தக் கரோனா, கடைசியில் என்னையும் பிடித்துவிட்டது. நான் அதனுடன் கடுமையாகச் சண்டையிட்டேன். ஆனால் அதற்கு வேறு திட்டங்கள் இருந்தன. அதில் இருந்து மீள்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்போம். முகக்கவசம் அணிவோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “இது ஜலதோஷம் போல அனைவரையும் பிடிக்கப்போகிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் இந்தத் தொற்றை எதிர்த்துப் போராடும் அளவுக்கு உடலை வலுவாக்கிக் கொள்வதும் முக்கியம். தடுப்பூசி போட மறந்துவிடாதீர்கள்” என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குப்ரா சேட்
குப்ரா சேட்

இவரைப் போல, பிரபல இந்தி நடிகை குப்ரா சேட்டுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சல்மான் கானுடன் ரெடி, சுல்தான், ரன்வீர் சிங், ஆலியாபட் நடித்த கல்லிபாய் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

“எனக்கு அறிகுறி ஏதுமற்ற, லேசான கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக சோதனை செய்துகொள்ளுங்கள். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். ஓய்வெடுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதிகமாக திரவ உணவை உட்கொள்ளுங்கள். அமைதியான மனநிலையில் இருங்கள். ஐந்து, ஆறு நாட்களில் பை ஒமைக்ரான் என்று சொல்லலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in