பொன்னியின் செல்வருக்கு கரோனா; பூங்குழலியும் சேந்தன் அமுதனும் எங்கே?- ரசிகர்கள் நெகிழ்ச்சி பதிவு

பொன்னியின் செல்வருக்கு கரோனா; பூங்குழலியும் சேந்தன் அமுதனும் எங்கே?- ரசிகர்கள் நெகிழ்ச்சி பதிவு

பொன்னியில் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்த நடிகர் ‘ஜெயம்’ ரவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 

மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் சமீபத்தில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. இதில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் அந்த படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரமாகவே தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பெயரையும், படங்களையும் மாற்றி கவனத்தை ஈர்த்தார்கள்.   அருள்மொழி வர்மனாக ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் இருந்த காரணத்தால் நேற்று கரோனா பரிசோதனைக்குத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இன்று(21.10.2022)  மாலை எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் உடனடியாக என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவைப்பட்டால் தங்களைப் பரிசோதித்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். கண் திருஷ்டியால்தான் அவருக்குக் காய்ச்சல் வந்துவிட்டது எனவும், ‘எங்கள் பொன்னியின் செல்வருக்கா காய்ச்சல், நாகப்பட்டினத்தில் உள்ள புத்த புனித ஸ்தலமனா சூடாமணி ஆலயத்திற்கு எங்கள் இளவரசரை அழைத்துப் போக பூங்குழலியும் சேந்தன் அமுதனும் எங்கே? விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டும் சோழ நாட்டு மக்கள்.’ எனவும் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in