HBD Pugazh|வாய்ப்பு கொடுக்காத தலைமுடி, காலில் கட்டான நரம்பு... புகழின் ஹிட் ஸ்டோரி!

நடிகர் புகழ்...
நடிகர் புகழ்...

திரைத்துறைக்கு ஒருவர் நுழைவது எத்தனை எளிதில்லையோ அதுபோலவே நுழைந்த பின்பு தன்னைத் தக்கவைத்துக் கொள்வதும் தனக்கான புகழை சம்பாதிப்பதும் எளிதானதல்ல. அதற்காக நாம் கொடுக்கும் உழைப்பும் நேரமும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கும்.

அப்படியான ஒருவர் தான் புகழ். ‘கலக்க போவது யாரு’, ‘குக் வித் கோமாளி’ போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் மக்களை மகிழ்வித்த புகழ் தற்போது பெரிய திரையிலும் நடிகராக அடியெடுத்து வைத்துள்ளார். இன்று அவரின் 33வது பிறந்தநாள்.

நடிகர் புகழ்...
நடிகர் புகழ்...

கடலூரில் பிறந்து வளர்ந்த நடிகர் புகழ், படித்து முடித்ததும் அங்கேயே சிஸ்டம் சர்வீஸ் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவரை சென்னையில் இருந்த வந்த அவரது நண்பர் சென்னையின் சினிமா வாய்ப்புகளை குறித்து புகழுக்கு ஆசை காண்பிக்க அவரும் சென்னை கிளம்பி வந்தார். ஆனால், சென்னை வந்ததுமே அவரின் லக்கேஜ் திருடப்பட்டு விட, கையில் காசில்லாமல், கிடைத்த வாட்டர் வாஷ் வேலையை செய்து கொண்டு, இன்னொரு பக்கம் திரைத்துறையில் நுழைவதற்கான வாய்ப்புகளையும் தேடிக் கொண்டிருந்தார்.

அவரைப் பார்த்த ’பாணா காத்தாடி’ புகழ் நடிகர் உதயராஜ் நட்பு கிடைத்திருக்கிறது. விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சி வாய்ப்பு குறித்து சொல்ல அதில் கலந்து கொண்டார். ஆனால், அதில் தேர்வாகவில்லை. அதன் பிறகு இன்னொரு சந்தர்ப்பத்தில் தேர்வானார் புகழ். அதில் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்ட புகழ் தனக்கென்று ரசிகர்களை உருவாக்கினார். அதன் பிறகு, ‘அது இது எது’, ‘சிரிச்சா போச்சு’ எனத் தொடர்ந்து விஜய் டிவியின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிரிப்பு மூட்டி ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

இவரது தொலைக்காட்சி பயணத்தின் ஆரம்பக்கட்டத்தில் அதிகளவு பெண் போல வேடமணிந்து செய்த நகைச்சுவை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இன்றளவும் இவரை கவனிக்க வைத்து வருகிறது.

நடிகர் புகழ்...
நடிகர் புகழ்...

புகழுக்கு அடையாளமாக இருப்பது அவருடைய தலைமுடி என சொல்லலாம். ஆரம்பத்தில் வாய்ப்பு கிடைக்காமல் அலைந்த போது அதற்குக் காரணம் தன் தலைமுடிதான் என நினைத்தவர், மொட்டை அடித்துக் கொண்ட சுவாரஸ்ய கதையும் உண்டு. அது குறித்து, ”எனக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போனதற்கு முக்கியக் காரணம் என் தலைமுடிதான் என நினைத்தேன். இதனால, மொட்டை அடிச்சுட்டு வந்து மறுபடியும் ’கலக்கப் போவது யாரு’ ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன். அதுலேயும் எலிமினேட் பண்ணிட்டாங்க. கொஞ்சம் அப்செட் ஆகிருச்சு, திரும்பவும் ஊருக்குப் போயிட்டேன்” என்கிறார். 

நடிகர் புகழ்...
நடிகர் புகழ்...

மேலும், “ஆரம்பத்தில் சென்னைக்கு வந்த புதிதில் வெல்டிங் வேலை, ரூஃபிங் வேலை எல்லாம் பார்த்தேன். இதில் ரூஃபிங் வேலையின் போது எதிர்பாராத விதமாக என் கால் நரம்பு கட்டாகிய சம்பவமும் நடந்தது” என்கிறார் கண்கலங்கிய படியே. விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இவருக்கு இன்னும் அதிகம் ரசிகர்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அதன் பிறகு அஜித், விஜய்சேதுபதி, சந்தானம் என இப்போது பெரிய திரையிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார் புகழ். சமீபத்தில் தனது காதல் மனைவி பென்சியைக் கரம் பிடித்தவர் தனது மகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறார். தனது வேலையில் அடுத்தடுத்து புகழ் தேடிக் கொண்டிருக்கும் புகழுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத இரண்டு விஷயங்கள் என்றால், ‘பிரசாத் லேப்பும் வடிவேல் பாலாஜியும்’ தான் என்கிறார்.

வடிவேல் பாலாஜி, புகழ்...
வடிவேல் பாலாஜி, புகழ்...

”சென்னையில நான் பார்க்காத வேலையே இல்லைன்னு சொல்லலாம். கடைசியா பிரசாத் ஸ்டியோ வாசல்ல லாரிக்கு கிரீஸ் அடிச்சிட்டு இருந்தேன். சாக்கு துணி போட்டுட்டு, உடல் முழுக்க அழுக்கா, முகத்துல கறுப்பா கிரீஸ் அப்பிக்கிட்டு வேலை செஞ்சிகிட்டு இருப்பேன். இப்போ அதே பிரசாத் லேப்ல கெஸ்ட்டா வரேன். நடிக்கிறேன்” என பூரிக்கும் புகழுக்கு ஆரம்ப காலத்தில் பல வாய்ப்புகளை அறிமுகம் செய்தவர்களில் வடிவேல் பாலாஜி முக்கியமானவர். அவர் எப்போதும் என் நினைவுகளில் இருப்பார் என்கிறார் நெகிழ்ச்சியாக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in