வெறுப்புகளையும் நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்! - மனம் திறக்கும் 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி

வெறுப்புகளையும் நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்! - மனம் திறக்கும் 'குக் வித் கோமாளி' ஷிவாங்கி
ஷிவாங்கி

கடந்த வாரம் நடந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஷிவாங்கி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இதனை குறிப்பிட்டு, இணையத்தில் ஒருவர் 'நல்ல வேளை இந்த வாரம் cringe ஷிவாங்கி இல்லை' என்று கேலி செய்யும் விதமாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஷிவாங்கி, 'இல்லாத என்னை பற்றி பேசுவதைவிட இருக்கும் கோமாளிகள் பற்றி பேசினால் நன்றாக இருக்குமே!' என்று பதில் கொடுத்திருந்தார்.

ஷிவாங்கியின் இந்த பதிவுக்கு நிறையப் பாராட்டுகளும் அவருக்கு ஆதரவும் குவிந்தது. இணையத்தில் ஆதரவு இருக்கும் அதேசமயம் இதுபோன்ற வெறுப்புகளை அவர் எப்படி சமாளிக்கிறார் ட்விட்டர் ஸ்பேஸில் ஷிவாங்கியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஷிவாங்கி, "உண்மையில் எனக்கு வெறுப்புகள் இருக்கிறது என்பதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்பு எவ்வளவு கிடைக்கிறதோ, அது போலவே வெறுப்புகளையும் நான் வரவேற்கிறேன்!

நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுபோன்ற வெறுப்புகளும் ஒரு உதாரணம். அதுமட்டுமில்லாமல் இதை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமே இல்லை! திரையுலகில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுக்கு வெறுப்புகள் தினம்தோறும் வருகிறது. நாம் அவர்களுடன் ஒப்பிடும் பொழுது ஒரு ஆளே கிடையாது. அதனால் இதுபோன்ற வெறுப்புகளால் நான் துவண்டு விடமாட்டேன்.

வெறுப்புகளையும் நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கவே செய்கிறேன். ஏற்கெனவே நான் சொன்னது போல, பள்ளி நாட்களில் என்னுடைய குரலுக்காக சக நண்பர்களால் பயங்கரமா கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டேன். அதிலிருந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு வந்த பொழுது என்னுடைய குரலோ என்னுடைய நடவடிக்கையோ நான் எப்படி இயல்பாக இருப்பேனோ அப்படியே இருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அதுவே எனக்கு நிறையப் பேரிடம் அன்பையும் பாசத்தையும் பெற்றுத்தந்தது. தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே என்னை நினைக்க வைத்தது. அது மட்டுமே எனக்கு வேண்டும். இதுபோன்ற வெறுப்புகள் பெரிதாக என்னை பாதிப்பதில்லை" என்று தெரிவித்துள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக அறியப்பட்ட ஷிவாங்கியின் இன்னொரு முகம் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் தெரியவந்தது. திரையுலகில் 'டான்' திரைப்படம் மூலமாக அடி எடுத்து வைத்தார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரமும் ரசிகர்களிடையே வரவேற்புப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in