`இன்னும் நிறைய உயரத்துக்கு நீ போகணும்'- சிவாங்கியை வாழ்த்தும் `குக் வித் கோமாளி' பிரபலங்கள்

`இன்னும் நிறைய உயரத்துக்கு நீ போகணும்'- சிவாங்கியை வாழ்த்தும் `குக் வித் கோமாளி' பிரபலங்கள்

'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியின் 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் அறிமுகமாகி பின்பு 'குக் வித் கோமாளி' சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலமாக பிரபலமானார் சிவாங்கி. பின்பு 'டான்' உள்ளிட்ட படங்களில் நடிப்பு, ஆல்பத்திற்கான பின்னணி பாடல் என தற்போது பிஸியாக இருக்கிறார். சிவாங்கி இன்று தனது 22-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் புகழ், சிவாங்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து 'இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் தங்கமே. என் கூட ஒரு தங்கச்சி பொறக்கலையே என்ற குறையே எனக்கு இல்ல. எல்லா சூழ்நிலையிலும் எனக்கு எல்லாமுமா நீ இருக்க. உனக்கு எப்பவும் நான் கூட இருப்பேன் டா. இன்னும் நிறைய உயரத்துக்கு நீ போகணும். உன் குரல் போலவே இனிமையான உன் மனசுக்கு எந்த கஷ்டமும் வராது. அப்படி உனக்கு வர கஷ்டத்தை கூட கடவுள் எனக்கு கொடுக்கணும்னு வேண்டிக்கிறேன். இன்னைக்கு போலவே எப்பவும் மகிழ்ச்சியாக இரு செல்லமே' என பதிவிட்டுள்ளார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவரான சக்தி, சிவாங்கியுடன் இருக்கும் புகைப்பட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்து, 'சூப்பர் சிங்கரில் இருந்து பெரிய திரைக்கு நடிகையாக உன்னுடைய வளர்ச்சியை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வருடம் உனக்கு பிடித்ததாக அமையும். புன்னகைத்து கொண்டே இருங்கள் தலைவி!' என வாழ்த்தியுள்ளார்.

விஜே மணிமேகலை, 'பிறந்தநாள் வாழ்த்துகள் சிவாங்கி. இன்னும் இன்னும் அதிக உயரத்தை நீ அடைய கடவுள் ஆசிர்வதிக்கட்டும் என அன்பு தங்கையே!' என வாழ்த்தி இருக்கிறார்.

விஜே அஞ்சனா, சிவாங்கி புகைப்படத்தை பகிர்ந்து, 'பிறந்தநாள் வாழ்த்துகள் செல்லக்குட்டி! நிறைய சந்தோஷமும், வெற்றியும் அன்பும் கிடைக்க வாழ்த்துகள். ஜாலி பண்ணு' என வாழ்த்தி உள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாது, விஜே ரக்‌ஷன், `குக் வித் கோமாளி' வித்யுலேகா, ஸ்ருதிகா, ரசிகர்கள் என பலரும் சிவாங்கி பிறந்தநாளுக்காக காமன் டிபி வெளியிட்டு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in