விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் மகேஷ் பாபு படத்தின் ரீமேக்கா?

சர்ச்சையைக் கிளப்பிய ஸ்டில்ஸ்
விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படம் மகேஷ் பாபு படத்தின் ரீமேக்கா?

நடிகர் விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ திரைப்படம், மகேஷ் பாபு நடிப்பில் வெளியான தெலுங்குப் படத்தின் ரீமேக்கா எனும் கேள்வி இணையத்தில் வைரலாகிவருகிறது.

தெலுங்குத் திரைப்பட இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் ‘வாரிசு’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தில் ராஜு தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தின் புகைப்படங்களும், பாடல் காட்சிகளும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி அளித்துவந்தன.

இதையடுத்து சமீபத்தில் படக்குழு வெளியிட்ட ’வாரிசு’ பட ஸ்டில்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அத்துடன், வார இதழ் ஒன்றுக்கு இயக்குனர் வம்சி கொடுத்திருக்கும் பேட்டியுடன் ‘வாரிசு’ படத்தின் சில புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. இந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தை அப்படியே காப்பி அடித்திருப்பதாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர்.

பின்னணி என்ன?

வம்சி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘மகரிஷி’ (2019) படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அதே படத்தை ரீமேக் செய்துள்ளார் வம்சி என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதாவது ‘மகரிஷி’ படத்தில் உள்ள புகைப்படங்களும், இந்த புகைப்படங்களும் பெரும்பாலானவை ஒத்துப்போவதாகச் சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஏற்கெனவே தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டபோது அவற்றில் விஜய் நடித்துள்ளார். ‘கில்லி’, ‘போக்கிரி’ போன்ற படங்கள் மகேஷ் பாபு நடித்த படங்களின் ரீமேக் தான். அந்த வகையில் தற்போது ‘மகரிஷி’ படத்தின் ரீமேக் தான் ‘வாரிசு’ என்று சிலர் குறிப்பிடுகின்றனர்.

ஆனால் ‘வாரிசு’ படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ‘மகரிஷி’ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தப் படத்தின் ரீமேக்தான் ‘வாரிசு’ படம் என எப்படிச் சொல்ல முடியும் என்று விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். இதற்கிடையே, ‘வாரிசு’ படம் முழுக்க தமிழ் விருந்து என இயக்குநர் வம்சி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in