தொடரும் ‘மன்மத லீலை’ தலைப்பு சர்ச்சை

மன்மத லீலை
மன்மத லீலை

‘மன்மத லீலை’ தலைப்பை பயன்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படத்துக்கு ’மன்மத லீலை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்ருதி வெங்கட் உட்பட பலர் நடிக்கின்றனர்.

கே.பாலச்சந்தா் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1976-ம் ஆண்டு வெளியான படத்தின் தலைப்பு இது. கலாகேந்திரா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தது. இந்தத் தலைப்பை அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாக, கே.பாலசந்தர் ரசிகர் மன்றத்தின் பொதுச் செயலாளர் கவிதாலயா பாபு எதிர்ப்பு தெரிவித்தார்.

வெங்கட்பிரபு
வெங்கட்பிரபு

இந்தப் படத்தை முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள சிங்காரவேலன், “மன்மத லீலை’ என்கிற தலைப்பை, உரிய துறையில் பதிவுசெய்து, அனுமதி பெறப்பட்ட பின்னரே தணிக்கை சான்றிதழ் பெற விண்ணப்பித்துப் பெறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சட்டரீதியாக நீதிமன்றத்துக்குப் போனால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம்’’ என்றார்.

இதையடுத்து அடுத்து, கே.பாலசந்தர் ரசிகர் மன்ற செயலாளர் கவிதாலயா வீ.பாபு, இணை செயலாளர் கவிதாலயா பி.பழனிசாமி ஆகியோர், ‘’மன்மத லீலை’ தலைப்பை கலாகேந்திரா நிறுவனத்தின் தயாரிப்பாளரிடம் முறைப்படி அனுமதி வாங்கி உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் கோரிக்கை. பிரபுதேவா நடித்து வெளிவரவுள்ள ‘பொய்க்கால் குதிரை’ படத்தின் பெயரை, சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடம் முறைப்படி பேசி உரிமை பெற்றுதான் பதிவு செய்துக்கொண்டனர். மேலும், நெற்றிக்கண், எதிர்நீச்சல், தில்லுமுல்லு என்கிற பெயர்களையும், கதைகளையும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் முறைப்படி பேசித்தான் உரிமையை பெற்றுக் கொண்டனர். அதுதான் முறையானது. அதுதான் மனிதாபிமானம்.

மனசாட்சியோடு மரியாதை நிமித்தமாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் பேசி, சமாதானமாக உரிமையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமே தவிர, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது அவர்களுக்கு முக்கியம் அல்ல’’ என்று கூறியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in