`நடிகை அப்படி பேச சொன்னதால் பேசினேன்'- சர்ச்சைக்கு நடிகர் சதீஷ் விளக்கம்

`நடிகை அப்படி பேச சொன்னதால் பேசினேன்'- சர்ச்சைக்கு நடிகர் சதீஷ் விளக்கம்

’ஓ மை கோஸ்ட்’ திரைப்பட விழாவில் நடிகர் சதீஷ் நடிகைகளின் உடை குறித்துப் பேசிய பேச்சுக்கு இப்போது இணையத்தில் பலரது கண்டனத்தைப் பெற்று வருகிறது.

சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் சன்னி லியோன், சதீஷ், தர்ஷாகுப்தா, ஜி.பி.முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் சதீஷ் பேசும்போது, ‘பாம்பேயில் இருந்து வந்த சன்னி லியோன் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றது போல புடவை உடுத்தி வந்துள்ளார். ஆனால், நம்ம ஊர் கோயம்புத்தூரில் இருந்து வந்த தர்ஷா குப்தா கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார்’ என்று பேசினார்.

சதீஷின் இந்தப் பேச்சுக்கு இணையத்தில் ’எந்த உடை அணிய வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை. உங்கள் மனைவி இந்த உடைதான் அணிய வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான்’ என கடுமையான எதிர்வினைகளை பதிவு செய்தனர். குறிப்பாக ’மூடர் கூடம்’ இயக்குநர் நவீன், பாடகி சின்மயி, பாடகர் ஸ்ரீனிவாஸ் ஆகிய பிரபலங்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர்.

இந்த எதிர்ப்புகளை அடுத்து நடிகர் சதீஷ் விளக்கம் அளித்து காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில், ‘சன்னி லியோனுக்கு போட்டியாக நான் உடை உடுத்தி வந்தேன். ஆனால், அவர் புடவையில் வந்துவிட்டார் என தர்ஷா குப்தா வருத்தம் தெரிவித்தார். இதை மேடையில் சொல்லுங்கள் என்றும் சொன்னார். அதை நான் சொன்னதுதான் இப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. உண்மையில் பெண்களுக்கு அவர்கள் விரும்பிய உடை அணிவதற்கு முழு சுதந்திரம் உண்டு. சிலர், நவீன், சின்மயிக்கு நான் பணம் கொடுத்து பேச சொன்னீர்களா என்றும் கேட்கின்றனர். நிச்சயம் இல்லை. இதைத்தாண்டியும் நான் மது, சிகரெட் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்ல கருத்துகளும் கூறி இருக்கிறேன்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதற்கு இயக்குநர் நவீன், நடிகர் சதீஷை டேக் செய்து, ‘நன்றி சகோ! நீங்கள் பேசும் நல்ல கருத்துகளும் மக்களை சென்றடைய வாழ்த்துகள். தங்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்பல்ல. பொது புத்தியில் பதிந்திருக்கும் மடமைகளை களையவே அப்பதிவு. ஆனா, என் நண்பர்கள் ‘மூடர்கூடம்’ என்று தலைப்பு வைக்காதீர்கள். வாயில் நுழையாது என அப்போதே சொன்னார்கள்’ என கூறியுள்ளார். அந்த காணொளியில் இயக்குநர் நவீனை மறைமுகமாக ’மூடர்’ என சதீஷ் சொல்லி இருப்பார். இதைக் குறிப்பிட்டே நவீன் அதை சொல்லி இருக்கிறார். ஆனால், இந்த காணொளியை சதீஷ் பின்பு நீக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in