பாகுபலி முதல் பொன்னியின் செல்வன் வரை!

கான்செப்ட் ஓவியங்களால் கவனிக்க வைக்கும் விஸ்வநாத்
ராஜமவுலியுடன் விஸ்வநாத்
ராஜமவுலியுடன் விஸ்வநாத்

சினிமாத்துறையில் இளம் படைப்பாளிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில்நுட்பத்தையும், கலையையும் சரிவிகிதமாக இணைக்க முடிந்தவர்களுக்கு வெள்ளித்திரை எப்போதும் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராக இருக்கிறது என்கிறார் கான்செப்ட் ஓவியர் விஸ்வநாத் சுந்தரம்.

விஸ்வநாத்
விஸ்வநாத்

'பாகுபலி 1', 'பாகுபலி 2', '2.0', 'புஷ்பா', 'மரைக்காயர்' முதல் சமீபத்தில் வெளியான 'ரத்தம்', 'ரணம்', 'ஆர்ஆர்ஆர்' வரை பிரம்மாண்டப் படங்களுக்கு கான்செப்ட் ஓவியங்களை வரைந்த தமிழர் விஸ்வநாத். கோவையில் பிறந்து புதுச்சேரியில் வளர்ந்த இவர், தற்போது பெரும்பாலான பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக இருக்கிறார். பாகுபலி தொடங்கி அவரின் பங்களிப்பு மிகவும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருப்பதால் தொடர்ச்சியாக ராஜமவுலி தன் படங்களில் பணியாற்ற விஸ்வநாத்தை அமர்த்திக் கொள்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளுக்கான அடிப்படை மாஸ்டர் ஸ்கெட்ச்களை திறம்பட உருவாக்கும் விஸ்வநாத்துடன் பேசியதிலிருந்து...

ஓவியத்தின் மீது எப்படி ஈடுபாடு வந்தது?

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய வரலாற்று ஆசிரியர் நான் வரைவதை பார்த்து பாரதியார் பல்கலைக்கூடத்தில் சேரச் சொன்னார். அங்கே ஐந்தாண்டுகள் முடித்தபோது எந்த வேலைக்குப் போவது என்று குழம்பி, நான் வரைந்த ஓவியங்களை விற்றும், கண்காட்சி நடத்தியும் வருமானம் ஈட்டினேன். அப்படியே சென்னை, கோவை போன்ற நகரங்களில் உள்ள சின்னச் சின்ன நிறுவனங்களில் சேர்ந்தேன். அப்போதுதான் மல்டிமீடியா அறிமுகமாகி வளர்ந்த நேரம். அதையும் கற்றுக் கொண்டேன். பென்சில் ஓவியங்களுக்கு இடையே டிஜிட்டல் ஓவியங்கள் கொஞ்சம் எளிதாகவும் அதிக டீட்டெயிலுடனும் வரைய முடிந்தது.

தீட்டப்பட்ட பாகுபலி காட்சி
தீட்டப்பட்ட பாகுபலி காட்சி

திரைத்துறைக்குள் எப்போது நுழைந்தீர்கள்?

‘விடியும் முன்’ படத்தின் உதவி இயக்குநர் எனது நண்பர். அவர் மூலம் அந்தப் படத்தின் கான்செப்ட் ஓவியங்களை வரைந்தேன். அப்படியே ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலிடம் என்னுடைய படைப்புகளை காட்டவும் வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய திறமையை வெளிப்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தேன். ஒருநாள், சாபுசிரில் என்னை அழைத்து, “உடனே ராஜமவுலியை பார்க்க போங்கள்” என்றார். அவர் எடுத்த ’நான் ஈ’ படத்தைப் பார்த்த பிறகுதான், தொழில்நுட்பத்தை, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸை திறம்பட கையாளும் ஒரு இயக்குநரைப் பார்க்கப் போகிறோம் என புரிந்தது.

ராஜமவுலி பாராட்டிய தருணங்கள் எவை?

நல்ல வேலை கிடைத்துவிட்டது என ஐதராபாத் சென்றுவிட்டேன். ஆனால், செட்டில் என்ன வேலை நடக்கிறது, நம்முடைய வேலை என்ன என்றெல்லாம் முதலில் புரியவில்லை. ஒரு கட்டத்தில், ஊருக்குத் திரும்பிவிடலாமா என்று கூட யோசித்தேன். திடீரென ஒரு நாள் இயக்குநர் அழைக்கிறார் என்றதும் அவரைப் போய் பார்த்தேன். அனுஷ்காவின் போட்டோஷூட் படங்களைக் காட்டி, “எனக்கு 16 வயது, ஒல்லியான அனுஷ்கா வேண்டும்” என்றார் இயக்குநர். அந்த போட்டோவில் அனுஷ்கா, மிகவும் சோர்வாக, கொஞ்சம் பருமனாக தெரிந்தார்.

பாகுபலி அனுஷ்கா ஓவியம்
பாகுபலி அனுஷ்கா ஓவியம்
திரையில் அனுஷ்கா ஓவியம்
திரையில் அனுஷ்கா ஓவியம்

அவர் கேட்டதுபோல கற்பனை செய்து அனுஷ்காவை ஸ்கெட்ச் செய்தேன். சின்ன ஓலையில் அவரின் ஓவியத்தைப் பார்க்கும் சீன், அப்படியே பிரம்மாண்டமாகச் சுவர் ஓவியமாக விரிந்தது. படத்தின் திருப்புமுனை காட்சியாகவும் அது அமைந்தது எதிர்பாராதது. அந்த ஓவியத்தை நீண்ட நாள் தன்னுடைய போனில் முகப்பு படமாக ராஜமவுலி வைத்திருந்தார். பல்வாள் தேவனின் பதவியேற்பு நிகழ்வு தான் படத்தின் பிரம்மாண்டத்தை விளக்கும் காட்சி. அதற்கான அமைப்பை உருவாக்க முடியாமல் ரொம்பவும் கடினமாக இருந்தது. நேரமெடுத்து ஒரு மாஸ்டர் ஸ்கெட்ச் வரைந்து கொடுத்தேன்.

ஆர்ஆர்ஆர் படத்தில் ஸ்காட் அரண்மனையின் அமைப்பை ராஜமவுலி வரையச் சொன்னார். அப்போது அவர் குறிப்பிட்ட விஷயம், ஆங்கிலேயர்கள் படை திரட்டுதல் முதல் அவர்களின் தங்குமிடம்வரை ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்றுவார்கள் என்றார். அப்படியே வரைந்து கொடுத்திருந்தேன். ராஜமவுலியின் அதிகபட்சமான பாராட்டு ஒரு ‘வாவ்’ சொல்வதே. அப்படி சொன்ன ஸ்கெட்ச்கள் இவைதான்.

புஷ்பாவிலிருந்து...
புஷ்பாவிலிருந்து...
புஷ்பாவிலிருந்து...
புஷ்பாவிலிருந்து...

ஒரே நேரத்தில் பல படங்களில் வேலை செய்யும்போது கடினமாக இல்லையா?

இதுவரை வேலை பார்த்த படங்கள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு காலகட்டத்தைக் குறிக்கும் படங்களே. ஒரு இயக்குநரின் மனதையும் அவரின் எதிர்பார்ப்பையும் புரிந்து கொள்வதுதான் முதல் படி. அதை அறிந்து கொண்டால் எத்தனை படத்தில் வேண்டுமானாலும் வேலை செய்யலாம். அத்துடன் ஒரு படத்துக்கான கிரவுண்ட்வொர்க் எனப்படும் அடிப்படை விஷயங்களை தீவிரமாக அறிந்து கொண்டு செயல்பட்டால் எளிதாகவே இருக்கும். ஆர்ஆர்ஆர் படத்தின் இறுதிக் கட்டத்தின்போது கரோனா கட்டுப்பாடுகள் வந்துவிட்டது. அவரவர் இடத்தில் இருந்து வேலை செய்தோம். ’புஷ்பா’ படத்துக்காக கிராமம், செஞ்சந்தன கட்டைகளை அடுக்குமிடம் உள்ளிட்டவற்றை வரைந்தேன். இப்படி ஒவ்வொரு படத்தின்போதும், காட்சியின் தன்மைதான் நமக்கு புரிய வேண்டும். மொழியை விட அதுதான் முக்கியம்.

இதுவரை மிகவும் சிரமப்பட்டு வரைந்த டிஜிட்டல் ஸ்கெட்ச் எது?

எப்போதுமே ஒரு காட்சிக்கு இரண்டு மூன்று மாதிரிகளை தயார் செய்து விடுவேன். ஆனால், ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரணை இருபதுக்கும் மேற்பட்டோர் சூழ்ந்துகொள்ளும்போது அவர் எப்படி வெளியே வருகிறார் என்ற காட்சியமைப்பை எப்படி கொண்டு செல்வது என்பது குழப்பமாக இருந்தது. அந்த இடத்தில் பல்வேறு கோணங்களில், அவர் லத்தியை எப்படி எடுத்து வெளிவர முடியும் என்பதை சண்டைப் பயிற்சியாளருக்கும் புரியும் வகையில் காட்சிப்படுத்தினேன். உண்மையில் அதிக நேரம் உழைத்த காட்சி அது.

தற்போது அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்திலும் பங்காற்றி இருக்கிறீர்கள் போல?

மணிரத்னத்திடம் என்னுடைய ஆல்பங்களை காட்ட விரும்பினேன். அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, ’பொன்னியின் செல்வன்’ முற்றிலும் வேறாக இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். இந்தப் படத்தில் விக்ரமின் ஆதித்த கரிகாலன் லுக், ஜெயம் ரவியின் கிரீடம், கார்த்தியின் லுக், அரியணை உட்பட பல விஷயங்களை வரைந்து கொடுத்திருக்கிறேன். இதற்கு மேல் சொல்லக் கூடாதே!

டிஜிட்டல் தூரிகை ஏந்தி...
டிஜிட்டல் தூரிகை ஏந்தி...

திரைக்குப் பின்னே இருப்பதால் உங்களின் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என நினைக்கிறீர்களா?

முன்பெல்லாம் தொழில்நுட்ப வல்லுநர்களை யாரும் அறிய மாட்டார்கள். இப்போது நிலைமை அப்படி இல்லை. படம் பார்க்கும்போதே டைட்டில் கார்டில் யார் யார் என்ன வேலை பார்த்திருக்கிறார்கள் என்பதை மக்கள் கவனிக்கிறார்கள்.

சினிமாவில் தொழில்நுட்ப துறையில் திறமையான இளைஞர்களுக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது?

டிஜிட்டல் தொழில்நுட்பம் என்றால் சி.ஜி மட்டும் கிடையாது. கலரிங், enhancing, lighting, composing, texturing என இங்கு பல பிரிவுகள் இருக்கிறது. திறமையானவர்களைத் தூக்கிக் கொண்டாடுவார்கள். கையால் வரையும் ஓவியங்களில் தான் ஆன்மா இருக்கும். அவை சிந்திக்கத் தூண்டும். ஆனால் , சமீப காலங்களில் இளைஞர்கள் அடிப்படையான ஓவியக் கலையை மறந்துவிட்டு, வெறுமனே டிஜிட்டல் ஓவியம் வரைவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை விட எவ்வளவு சம்பளம் தருவார்கள் என்ற எண்ண ஓட்டத்தில் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். எவ்வளவு கற்றுக் கொண்டாலும் இது கடல் போன்றது. அதனால் தன் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தாராளமாக இங்கே வரலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in