நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையரிடம் புகார்

`ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய கோரிக்கை
நயன்தாரா, விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையரிடம் புகார்

"ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ரவுடிகளை ஒடுக்க தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரவுடிகளை ஊக்குவிக்கும் விதமாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் துவங்கி இருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மற்றும் அவரது ரவுடி பிக்சர்ஸ் குழு இணைந்து பட்டாசு வெடித்து கொண்டாடிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்களை காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த வகையில் உடனடியாக ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்து, நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in