
துஷ்யந்த் நடிக்கும் படத்துக்கு ’ஷூட்டிங் ஸ்டார்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி இணைந்து தயாரிக்கும் படம், ’ஷூட்டிங் ஸ்டார்’. எம் ஜெ ரமணன் இயக்கும் இந்தப் படத்தில், துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சீனிவாச ரெட்டி, இந்தி நடிகர் ரவி கிஷன், மாஷூம் சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இதில் கவுரவ வேடத்தில் நடிக்க இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் ஏமாற்றங்களைச் சந்தித்த ஒருவனை, அவனைச் சுற்றியுள்ளவர்கள் எப்படி மேலும் ஏமாளி ஆக்கினார்கள் என்பதை காமெடியாக சொல்லும் படம் இது. ஒளிப்பதிவை எஸ்.ஆர். சதீஷ்குமார் கவனிக்கிறார். இந்திப் பட இசையமைப்பாளர்கள் அம்ஜத்-நதிம்-ஆமீர் இசையமைக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் தொடங்கிசென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கஜுராஹோ பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தப் படத்தின் தொடக்க விழா சென்னையில் இன்று நடந்தது. நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.