தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாதவர் செந்தில். கவுண்டமணி, செந்தில் இணைந்து கலக்கிய நகைச்சுவை காட்சிகளை நம்பி நம்மூரில் நகைச்சுவைக்கு என்று தனியே சேனல்கள் எல்லாம் ஆரம்பிக்கப்பட்டன. 80,90-களில் தமிழ் சினிமாவின் நகைச்சுவைக்கு அடையாளமாக இருந்த கவுண்டமணி செந்தில் இருவரும் 90-களின் இறுதிக்குப் பிறகு வடிவேலு, விவேக் என்று தமிழ் சினிமாவின் நகைச்சுவை தொனி மாறியது.
அவ்வப்போது ஒரு சில திரைப்படங்களில் இருவரும் தனித்தனியே நடித்து வந்தனர். 2015-ம் ஆண்டு கவுண்டமணி ‘49-ஓ’ என்ற திரைப்படத்திலும், 2016-ம் ஆண்டு ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அதன் பின் 2016-ம் ஆண்டு சாந்தனு கதாநாயகனாக நடித்த ‘வாய்மை’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, அதன் பின் வேறு எந்த படங்களிலும் நடிக்காமல் திரைத் துறையை விட்டு விலகியிருக்கிறார். செந்தில் அவ்வப்போது சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
70 வயதை எட்டியுள்ள நிலையில், செந்தில் தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கி முடித்துள்ள ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் செந்தில். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளைச் செந்தில் முடித்துவிட்டாலும், இதுவரை இத்திரைப்படத்துக்குப் பெயர் வைக்கவில்லை. ஆயுள் கைதியாகச் செந்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.