திரை விமர்சனம்: காஃபி வித் காதல்

திரை விமர்சனம்: காஃபி வித் காதல்

அன்பான சகோதரர்கள்; அவர்களின் காதல் வாழ்க்கையில் நிகழும் குழப்பம்... இதுதான் ‘காஃபி வித் காதல்’ படத்தின் ஒரு வரி.

சமீப காலங்களாக ஹாரர் படங்களைக் கொடுத்து வந்த இயக்குநர் சுந்தர்.சி ‘காஃபி வித் காதல்’ படம் மூலமாக மீண்டும் தன்னுடைய பலமான காமெடி ஜானருக்கு வந்திருக்கிறார். அது கைகொடுத்திருக்கிறதா, இல்லையா?

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி நால்வரும் சகோதர சகோதரிகள். டிடி திருமணம் ஆகி குழந்தைப் பேறுக்காக அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறார். ஸ்ரீகாந்த்துக்கு ஏற்கனவே சம்யுக்தாவுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. ஜீவா வெளிநாட்டில் தன் காதலியுடன் லிவ்-இன் உறவில் இருக்க, ஒரு கட்டத்தில் அது பிரேக்கப் ஆகிறது. இந்தச் சூழலில் அவர் வீட்டுக்கு வர ஜெய்க்கும், ஜீவாவுக்கும் சேர்த்து திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஜெய் சொத்துக்காக வீட்டில் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாலும் தனது தோழியான அம்ரிதா மேல் காதல் இருப்பதைப் பின்பு புரிந்துகொள்கிறார். இதற்கிடையில் ஜெய்க்குப் பார்த்த பெண்ணுக்கும் ஜீவாவுக்கும் இடையில் காதல் வர ஒருகட்டத்தில் அதைத் தவிர்க்கிறார் ஜீவா. பின்பு தன் பிரேக்கப் விஷயத்தை வீட்டில் சொல்லி வேறு பெண் பார்க்க சொல்ல, ஸ்ரீகாந்தின் காதலியான ரைசா உள்ளே வருகிறார். இப்படி ஒரு இடியாப்பச் சிக்கல் காதல் கதையில் யார் யாருடன் சேர்ந்தார்கள் என்பதுதான் ‘காஃபி வித் காதல்’.

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், டிடி, பிரதாப் போத்தன், அம்ரிதா, ரைசா என அனைத்து கதாபாத்திரத் தேர்வுமே பொருத்தம். படம் நெடுக நிறைய நட்சத்திரப் பட்டாளங்கள் இருந்தாலும் அனைவருமே பார்வையாளர்கள் மனதில் பதியும்படி, தங்கள் கதாபாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

கதையைப் பொறுத்தமட்டில் ஏற்கெனவே வெவ்வேறு வடிவங்களில் பார்த்து பழகியதை எளிதாகக் கணிக்கும்படியான திரைக்கதையுடன் படமாக்கியிருப்பது மிகப் பெரிய பலவீனம். குறிப்பாக நகைச்சுவைக்கு என யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லே வரும் காட்சிகள் சிரிப்பை வரவழைக்காமல் அயர்ச்சியையும் எரிச்சலையுமே அதிகரிக்கின்றன.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் படத்திற்கு மிகப் பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. படத்தின் வசனங்கள் சில இடங்களில் அட போட வைத்தாலும் பல நேரங்களில் சொதப்புகின்றன. ஆக மொத்தத்தில், அங்கங்கே சிரிக்க வைக்கும் ஒன்லைனர்கள், பார்த்துப் பழகிய கதையை புதிய வடிவத்தில் எடுத்து ’காஃபி’யுடன் கலந்து தந்திருக்கிறார்கள். முதல் பாதியில் ஓகேவாக செல்லும் கதையை தன் வழக்கமான பாணியிலேயே சுந்தர் சி எடுத்து சென்றிருந்தால் ‘காஃபி வித் காதல்’ இன்னும் சிறப்பாகவே வந்திருக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in