திரை விமர்சனம்: கோப்ரா

திரை விமர்சனம்: கோப்ரா

சர்வதேசப் பெரும்புள்ளிகளைக் கொலை செய்யும் நாயகனுக்குப் பின்னால் உள்ள உளவியல், உறவு மற்றும் உணர்வு ரீதியான அழுத்தங்கள் என்ன என்பதைப் பேசும் படம்தான் ‘கோப்ரா’.

கணித ஆசிரியராகப் பணிபுரியும் மதியழகன் (விக்ரம்) ஒரு மாநில முதல்வர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட தேசிய, சர்வதேச ஆளுமைகளைக் கொலை செய்கிறார். இதற்காக தனது கணித மேதைமையையும் மாறுவேடங்கள் உள்ளிட்ட திசைத்திருப்பும் உத்திகளையும் பயன்படுத்துகிறார். ஒரு மாபெரும் கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தின் வாரிசான ரிஷி (ரோஷன் மேத்யூஸ்) என்பவருக்காக மதியழகன் இந்தக் கொலைகளைச் செய்கிறார். இந்தப் பரிவர்த்தனையில் இடைத்தரகராக, பத்திரிகையாளர் நெல்லையப்பன் (கே.எஸ்.ரவிக்குமார்) செயல்படுகிறார்.

இந்தக் கொலைகளை விசாரிக்கும் இன்டர்போல் அதிகாரி அஸ்லன் (இர்ஃபான் பதான்) மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த கொலைகளை இணைக்கும் புள்ளியைத் தெரிந்துகொண்ட பின் கொலையாளியைத் தேடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் அந்தப் புள்ளியை தெரிந்துகொள்ள காரணமாக அமைந்த கிரிமினாலஜி மாணவியும் கணிதத்தில் நிபுணத்துவம் கொண்டவருமான ஜூலி (மீனாட்சி கோவிந்தராஜன்) விசாரணையில் உதவுகிறார்.

மதியழகன் கொலையாளி ஆனதற்கான காரணம் என்ன? இந்தக் கொலைகள் ஏன் நடக்கின்றன? கொலையாளியான மதியழகன் பிடிபட்டாரா? இப்படியான கேள்விகளுக்கு விடையளிக்கிறது மீதிப் படம்.

மக்களோடு மக்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் கணித ஆசிரியர் சர்வதேச ஆளுமைகளைக் கொலை செய்வது, கணித அறிவு மிக்க இளம் பெண்ணின் உதவியுடன் இன்டர்போல் விசாரணை அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்லப்படுவது என ஒரு சுவாரசியமான புதுமையான துப்பறியும் த்ரில்லருக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது ‘கோப்ரா’. ஆனால் அதைத் திரைக்கதை பயன்படுத்திக்கொள்ளத் தவறுகிறது. ஆங்காங்கே சில ரசிக்கத்தக்க அம்சங்கள், விக்ரமின் அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு, ஏ.ஆர்.ரஹ்மானின் தடதடக்கும் இசை ஆகியவற்றைத் தாண்டி படத்தில் ஒன்றுமே இல்லை.

முதல் பாதியில் ரஷ்ய அமைச்சரை விக்ரம் கொல்லும் காட்சியும், அதற்கு முன்பு நாயகனின் உளவியல் சிக்கல் கொண்ட அவருடைய மனத்துக்குள் நிகழும் போராட்டம் காட்சியாக விரிவதும் குறிப்பிடத்தக்கவை. விக்ரமைச் சிக்கவைக்க முயலும் ஹேக்கர் யார் என்பது தெரியவரும் இடைவேளைக் காட்சியும் கவனம் ஈர்க்கிறது. ஆனால் இரண்டாம் பாதி மீது ஏற்பட எதிர்பார்ப்பு அடுத்த சில காட்சிகளிலேயே அடங்கிவிடுகிறது. இரண்டாம் பாதியில் சென்டிமென்ட், காதலுக்கு முக்கியத்துவம் அளித்து வைக்கப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் கொஞ்சம்கூட வலு இல்லை.

கொலையாளியைச் சிக்கவைப்பதற்கான விசாரணைக் காட்சிகளிலும் கொலையாளியின் பின்னணியை வெளிப்படுத்தும் காட்சிகளிலும் சுவாரசியம் எதுவும் இல்லை. சிபிஐ அதிகாரிகளால் விசாரிக்கப்படும் காட்சியில் விக்ரமுக்குள் நிகழும் உளவியல் போராட்டம் வெளிப்படும் காட்சி மட்டும் அதுவரையில் ஏற்பட்ட சோர்வைக் கடந்து ரசிக்க வைக்கிறது. அந்தக் காட்சியில் விக்ரம், ஆனந்த் ராஜ் இருவரின் நடிப்பும் அபாரம்.

மூன்று மணி நேரம் நீளும் படத்தில் ஸ்காட்லாந்து இளவரசரும் ரஷ்ய அமைச்சரும் ஏன் கொல்லப்படுகிறார்கள் என்பதற்கான முழுமையான பதில் கிடைக்கவில்லை. அதேபோல் நாயகனின் காதலி குற்றவியல் பேராசிரியராக இருக்கிறார் ஆனால் அவருக்கு நாயகனின் மர்மமான நடவடிக்கைகள் குறித்து எதுவுமே தெரியவில்லை. இதுபோல் காதில் பூ சுற்றும் விஷயங்களுக்குப் படத்தில் பஞ்சமேயில்லை.

விக்ரம் வழக்கம்போல் முழுமையான அர்ப்பணிப்புடன் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக உளவியல் சிக்கலுடன் போராடும் காட்சிகளில் எப்படிப்பட்ட நடிகர் இவர் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ஸ்ரீநிதி அழகாக இருக்கிறார். கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார். இர்ஃபான் பதான் கதாபாத்திரத்துக்குப் பொருத்தமான தேர்வு.

மெயின் வில்லன் கதாபாத்திரம் குறித்து எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாலும் அதில் ரோஷன் மேத்யூஸ் நடிப்பை ரசிக்க முடிகிறது. கே.எஸ்.ரவிக்குமார், ரோபோ ஷங்கர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் சிறப்பாக அமைந்துள்ளன. குறிப்பாகப் பின்னணி இசை திரைக்கதைக்குத் தேவையான பரபரப்பையும் விறுவிறுப்பையும் அளித்திருக்கிறது. இப்படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து, ‘டைரி’ புகழ் இன்னாசி பாண்டியன் எனப் பலர் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். ஆனால், அந்தப் பங்களிப்பு முழுமையடையவில்லை.

ஒரு சுவாரசியமான க்ரைம் த்ரில்லர் படத்தைக் கொடுப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் கொண்டிருந்தும், அவை அனைத்தையும் வீணடித்திருக்கிறது ‘கோப்ரா’.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in