ஒளிப்பதிவு மேதை: ’கெளபாய்’ சண்டைக்காட்சிகளில் விந்தைகள் செய்த கர்ணஜாலங்கள்!

- ஒளிப்பதிவாளர் எம்.கர்ணன் நினைவு தின சிறப்புப் பகிர்வு
ஒளிப்பதிவு மேதை எம்.கர்ணன்
ஒளிப்பதிவு மேதை எம்.கர்ணன்

ஒரு சினிமாவின் சாமான்ய ரசிகனையும் இணைப்பதற்கு கதை இருக்கவேண்டும், தெளிவான திரைக்கதை அமைந்திருக்க வேண்டும், நறுக்குத் தெறித்தாற்போல் வசனங்கள் இருக்கவேண்டும், நடிகர்களும் நடிகைகளும் சிறப்புற நடித்திருக்கவேண்டும் என்பதெல்லாம் இருக்கட்டும். முதலில், நம்மையும் சினிமாவையும் கைகோத்துப் பயணிக்கச் செய்கிற ஆற்றல் ஒளிப்பதிவுக்குத்தான் உண்டு. அதில் ஜாம்பவான்கள் என்று பேரெடுத்த எத்தனையோ ஒளிப்பதிவாளர்கள் நம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். அந்த வகையில் ஒளிப்பதிவில் மேதை என்று போற்றப்பட்டு, புகழப்பட்டவர் எம்.கர்ணன்.

கர்ணனின் ஒளிப்பதிவை ‘கர்ணஜாலங்கள்’ என்றே அன்றைக்குப் பத்திரிகைகளில் எழுதினார்கள். கோடம்பாக்கத்தில் பிறந்து வளர்ந்தவர், கோடம்பாக்கத்துக்குள்ளேயே செல்வதற்கு மனம் ஒப்பாதவராகத்தான் இருந்தார். கடற்படையில் சேரவேண்டும் என்பதுதான் கர்ணனின் கனவு. ஆனால் அப்பா சம்மதிக்கவில்லை. “எங்கோ தொலைதூரத்திலெல்லாம் உன்னை விட்டுவிட்டு என்னால் இருக்கமுடியாது. நீ என் கூட வா’’ என்று ரேவதி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார். அப்போது ஒளிப்பதிவாளருக்கு உதவியாளர் தேவைப்பட்டது. ஆகவே, உதவி ஒளிப்பதிவாளராக ரேவதி ஸ்டூடியோவில் பணியாற்றினார் கர்ணன்.

அறுபதுகளில் வந்த எண்ணற்ற படங்களுக்கு தன் ஒளி ஜாலத்தில் சுவை கூட்டிய பி.என்.சுந்தரத்திடம் உதவியாளராகப் பணியாற்றினார் கர்ணன். அவரிடம் பல நுணுக்கங்களையெல்லாம் கற்றுக் கொண்டே வந்தார்.

அவரிடம் மட்டுமா?

கமால் கோஷ் கேமராவின் ஜித்தன். நிமாய் கோஷ், கேமராக்களின் காதலன். பொம்மன் டி.இரானிக்கு கேமராதான் சுவாசமே. பி.எஸ்.ரங்கா கேமராவில் விளையாடுவார். இவர்களிடம் எல்லாம் உதவியாளராகப் பணிபுரிந்து அனைவரின் ஸ்டைலையும் கற்றுக்கொண்டு தேடலுடனும் காதலுடனும் தன் கேமராப் பயணத்தைத் தொடர்ந்தார் கர்ணன்.

தமிழ் சினிமா சரித்திரத்தில் டபிள்யூ.ஆர்.சுப்பாராவுக்கு ஒரு பெருமை உண்டு. முதல் முழுநீள கேவா கலர் தமிழ்ப் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்துக்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். பி.ஆர்.பந்துலு இயக்கிய படங்களுக்கு சுப்பாராவ் ஒப்பந்தமான போது, அவருடன் கர்ணனும் உதவி ஒளிப்பதிவாளர் எனும் அந்தஸ்துடன் பணியாற்றத் தொடங்கினார். தொடர்ந்து, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சபாஷ் மீனா’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘தங்கமலை ரகசியம்’ முதலான பல முக்கியமான படங்களுக்குப் பணிபுரிந்தார்.

இந்தப் படங்களில் சில காட்சிகளை, கர்ணனையே ஒளிப்பதிவு செய்யச் சொன்னதும் நிகழ்ந்திருக்கிறது. ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’ என்ற படம், 1959-ம் ஆண்டு வெளியானது. இதுதான் ஒளிப்பதிவாளர் எம்.கர்ணன் என்று டைட்டிலில் வந்த முதல் படம். ஒளிப்பதிவாளராக முதல் படத்திலேயே, வியக்க வைத்திருந்தார். ஏ.எல்.எஸ். தயாரித்த ‘அம்பிகாபதி’ படத்திலும் பல நுட்பங்களில் ஜொலிக்கச் செய்திருந்தார் கர்ணன். அவரின் திரையுலக ஆரம்ப காலகட்டத்தில், ‘அம்பிகாபதி’ மிக முக்கியமான, ஸ்பெஷலான படமாக அமைந்திருந்தது.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு, கர்ணன் மீது ஆரம்பக் காலத்தில் இருந்தே தனிப்பிரியமும் அவர் திறமை மீது மிகுந்த நம்பிக்கையும் உண்டு. ஏ.எல்.எஸ். தயாரிப்பில், ‘சாரதா’ தான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய முதல் படம். அந்தப் படத்திலேயே கர்ணனை ஒளிப்பதிவாளராக தன்னுடன் இணைத்துக் கொண்டார். கே.ஆர்.விஜயாவின் அறிமுகப் படமான ‘கற்பகம்’ படத்துக்கும் கர்ணனே ஒளிப்பதிவு செய்தார். பிறகு ‘கற்பகம்’ இந்தியில் தயாரிக்கப்பட்ட போது அங்கேயும் கர்ணஜாலம், வெகுவாகப் பாராட்டப்பட்டது.

அந்தப் படத்தில் இந்தி நடிகர் ராஜ்குமார் நடித்தார். கர்ணனின் ஒளிப்பதிவு நுட்பங்கள் பிடித்துப் போனது. ஒருநாள், கர்ணனை அழைத்து, கவர் ஒன்றைக் கொடுத்தார். “இப்போது பிரிக்கவேண்டாம். பிறகு பிரித்துப் பாருங்கள்’’ என்று ராஜ்குமார் சொல்ல, சரியென்று கவரை வாங்கிக் கொண்டார். ஆனால், படத்தின் பாதியிலேயே வேறொரு ஒளிப்பதிவாளரைப் போடுகிற சூழல் உருவானது. இதில் ராஜ்குமாருக்கு ரொம்பவே வருத்தம்.

“ஆமாம்... முன்பொரு முறை ஒரு கவர் கொடுத்தேனே. அதைப் பிரித்துப் பார்த்தீர்களா? இப்போது கிளம்புகிறேன். பிரித்துப் பாருங்கள்’’ என்று நடிகர் ராஜ்குமார் சொல்லிச் சென்றார். கர்ணன் கவரை எடுத்தார். பிரித்தார். அதிர்ந்து வியந்தார். அந்தக் கவரில் பத்தாயிரம் ரூபாய் இருந்தது.

இயக்குநர் பி.மாதவன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை ரசித்து ரசித்துப் படங்களை எடுத்தவர். இவரின் ‘மணியோசை’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக கர்ணன் பணியாற்றினார். அப்போது இருவரும் நல்ல நண்பர்களானார்கள். ‘’நாமே சேர்ந்து படம் தயாரித்தால் என்ன?’’ என்று பேசினார்கள். இன்னும் இருவரையும் சேர்த்துக்கொண்டார்கள். மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உகந்த கலைஞரும் கூட! ஜெய்சங்கரிடம் சென்று விஷயத்தைச் சொல்ல, அவரும் உடனே சம்மதித்தார்.

‘பெண்ணே நீ வாழ்க’ என்ற படத்தை எடுத்தார்கள். மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் தந்தது இந்தப் படம். பிறகு, சண்டையோ பூசலோ இல்லாமல், நான்கு பேரும் தனித்தனியே இயங்கத் தொடங்கினார்கள். பி.மாதவன் ‘அருண்பிரசாத் மூவிஸ்’ எனும் பேனரில் படங்களைத் தயாரித்து இயக்கினார். அதேபோல, அதுவரை ஒளிப்பதிவாளராக இருந்த கர்ணன், ‘விஜயசித்ரா மூவிஸ்’ எனும் நிறுவனத்தைத் தொடங்கி, படங்களைத் தயாரித்தார். ஒளிப்பதிவு செய்தார். இயக்கவும் செய்தார். தயாரிப்பில் வந்த முதல் படத்தை இவர் இயக்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த படங்களில் ஜெய்சங்கர்தான் நாயகன். சொல்லப்போனால், ஒருகாலத்தில், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களென்றால் ஜெய்சங்கர் இருப்பது போல, கர்ணன் தயாரித்து இயக்குகிற படமென்றாலே, ஜெய்சங்கர்தான் ஆஸ்தான நாயகன்.

’காலம் வெல்லும்’, ‘ஜக்கம்மா’, ‘கங்கா’ என்று ஜெய்சங்கரை ரசித்து ரசித்து படங்களைத் தந்தார் கர்ணன். தமிழ் சினிமாவில் கெளபாய் படங்களை அதிக அளவில் தந்தவர் எனும் பெருமையைப் பெற்றவரானார் கர்ணன்.

முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் முக்தா சீனிவாசன் இயக்கிய பல படங்களுக்கு கர்ணன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். காட்சியை விளக்கிச் சொன்ன, சில நிமிடங்களில், கேமராவை சரிசெய்துகொண்டு, தயாராக இருக்கும் கர்ணனின் வேகம் கண்டு அனைவரும் அதிசயித்திருக்கிறார்கள்.

கர்ணனின் ஒளிப்பதிவில் பல நுணுக்கங்கள் அசாத்தியமானவை. அதேபோல, தமிழ் சினிமாவில் சண்டைக்காட்சிகளை எடுப்பதுதான் மிக மிகச் சிரமம். அதுவரை சண்டைக் காட்சிகளுக்கு வைத்த கோணங்கள் வேறு வகையாகவும் கர்ணனின் படங்களில் வருகிற சண்டைக் காட்சிகளின் கோணங்கள் ஆங்கிலப்படங்களுக்கு இணையாகவும் பேசப்பட்டன.

‘எங்க பாட்டன் சொத்து’, ‘ஜம்பு’ முதலான படங்களிலெல்லாம் இன்னொரு வெரைட்டியும் கொடுத்தார் கர்ணன். அது... லொகேஷன். அதுவரை தமிழ் சினிமா பார்த்திடாத இடங்களெல்லாம் லொகேஷன்களாகின. அல்லது பார்த்துப் பழக்கப்பட்ட இடங்களையே புதுமாதிரியாகக் காட்டி பிரமிக்கவைத்தார் ஒளிப்பதிவு மேதை கர்ணன்.

பனிச்சறுக்குச் சண்டை, அருவிக்கு அருகில் சண்டை, புழுதி மண் பறக்கச் சண்டை, ‘நுக்நுக்நுக்நுக்நுக்நுக்’ என குதிரைகள் றெக்கை இல்லாமலேயே பறக்கும் வகையில் சண்டை, ‘சர்விர்சர்விர்சர்விர்’ரென பைக்குகளில் அட்டகாசம் செய்யும் வலிமையான சண்டை என ஒளிப்பதிவு மேதை கர்ணஜாலங்கள்; தமிழ் சினிமாவில் பட்டையைக் கிளப்பிய சண்டை ஜாலங்கள்!

ஒளிப்பதிவு மேதை எம்.கர்ணனின் நினைவு நாள் இன்று (டிசம்பர் 13). இந்த நாளில், அவரின் கேமராவையும் அந்த ஒளிப்பதிவு மேதையையும் வணங்கிப் போற்றுவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in