
42 வருட சினிமா வாழ்க்கையில் வெற்றி, தோல்வி என இந்த சினிமா அதிகம் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று நடிகர் அர்ஜுன் கூறினார்.
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன், தெலுங்கு ஹீரோ விஷ்வக் சென் நடிக்கும் படத்தை இப்போது இயக்குகிறார். இந்தப் படத்தில் மூலம் தனது மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கில் அவர் அறிமுகப்படுத்துகிறார். ஜெகபதி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் நடிகர் அர்ஜுனே தயாரிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் நடந்தது. நடிகர் பிரகாஷ்ராஜ், கேமராவின் ஸ்விட்ச் ஆன் செய்ய, பிரபல ஹீரோ பவன் கல்யாண் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் நடிகர் அர்ஜுன் கூறுகையில், ``1984-ம் ஆண்டு இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா, ’மா பல்லெலோ கோபாலுடு’ என்னும் படத்தில் நடிக்க தெலுங்குக்கு அழைத்தார். நடிக்க தெரியாது என்றேன். கற்றுத் தருகிறோம் என்று சொன்னார். பிறகு தெலுங்கு தெரியாது என்றேன். அதையும் பார்த்து கொள்கிறோம் என்று அழைத்து வந்து நடிக்க வைத்தார். அந்த படம் பிளாக்பஸ்டர் ஆனது .
நான் சினிமாவுக்கு வந்து 42 வருடங்கள் ஆகிவிட்டது. வெற்றி, தோல்வி, இன்பம், துன்பம் என அனைத்தையும் எனக்கு இந்த சினிமா கற்றுக் கொடுத்திருக்கிறது. இப்போது இங்கு என் மகள் ஐஸ்வர்யாவை அறிமுகம் செய்து வைப்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ், கன்னடத்தில் தலா ஒரு படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா.
இப்போது தெலுங்கில் நடிக்க இருக்கிறார். இந்த விழாவில் என் மனைவியும் அருகில் இருக்கிறார். என் வெற்றிக்கும் என் மகிழ்ச்சிக்கும் என் மனைவிதான் காரணம். இத்தனை ஆண்டுகளாக என்னை ஆதரித்த ரசிகர்கள் என் மகளையும் ஆதரிக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தார்.