நடிக்க தடை போட்ட மருத்துவர்கள்: பாரதிராஜா மீண்டுவரக் காத்திருக்கும் படங்கள்!

நடிக்க தடை போட்ட மருத்துவர்கள்: பாரதிராஜா மீண்டுவரக் காத்திருக்கும் படங்கள்!

இயக்குநர் பாரதிராஜாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவர் சினிமாவில் நடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர். இதனால், அவர் நடித்து பாதியில் நிற்கும் படங்களின் இயக்குநர்கள் செய்வதறியாது தவித்துவருகின்றனர்.

தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 21-ம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ஆகஸ்ட் 26-ல் உயர் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தான் நலமாக இருப்பதாக அவரும் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, செப்டம்பர் 9-ல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சென்னை நீலாங்கரையில் உள்ள, தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்து வந்த அவர், சில நாட்களுக்குப் பின்னர் மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை தேறிவிட்டாலும், அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவதால், அவரை உடனிருந்து கவனித்துக்கொள்ள இரண்டு செவிலியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் மீண்டும் நடிக்கக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நடிக்கும் படங்கள், தங்கர்பச்சான் இயக்கும் படம் எனப் பல புதிய படங்களில் பாரதிராஜா நடித்துவந்தார். இந்தப் படங்களின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியை எடுக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், அவர் நடிப்பதற்குத் தற்சமயம் வாய்ப்புகள் குறைவு என்பதால் மேற்கொண்டு காட்சிகளை எடுக்க முடியாமல் படக்குழுவினர் தவித்துவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in