
மணிரத்னம் இயக்கத்தில் தயாராகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ வெற்றிக் கொண்டாட்டம். ஆகஸ்ட் 19ம் தேதி ‘சோழா சோழா’ இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் போஸ்டரில் விக்ரம் குதிரையில் அமர்ந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.
ஏற்கெனவே ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் கடந்த ஜூலை 31ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இரண்டாவது பாடலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.