மெல்லிசை மன்னரை ‘ஏமாற்றிய’ சோ!

- ‘அல்லா அல்லா’ பாட்டுக்குப் பின்னே இப்படியொரு பின்னணி!
எம்.எஸ்.வி - சோ
எம்.எஸ்.வி - சோ

தமிழ்த் திரையுலகில் அரசியலை வைத்துப் பகடி செய்தவர்கள் பலர் இருந்தாலும், அந்தப் பகடிகளில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, சொல்ல வந்த கருத்தை, தைரியமாகவும் உறுதியாகவும் சொன்னவர்களில் முக்கியமானவர் நடிகரும் அரசியல் விமர்சகரும் பத்திரிகை ஆசிரியருமான சோ.

சிவாஜியின் ‘பார் மகளே பார்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக திரையுலகில் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் தொடங்கி கமல், ரஜினி வரை கலக்கியெடுத்தவர் சோ.

சோ நடிகராக திரையுலகிற்கு அறிமுகமாவதற்கு முன்னதாகவே, இவரின் நாடகங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து அசத்தினார் சோ. அரசியல் நடப்புகள் அறிந்தவர்களுக்குத்தான் இவரின் நையாண்டி புரியும் என்பார்கள். அதேபோல், அரசியல் நடப்புகள் அறிந்துகொள்ள, இவரின் நையாண்டி காரணமாக இருந்தது என்றும் சொல்லுவார்கள்.

சோ குறித்து பலரும் பகிர்பவை அனைத்துமே கலகல ரகம்தான். எப்போதும் ஏதாவது குறும்பு செய்து அந்த இடத்தை குஷிப்படுத்திக் கொண்டே இருப்பார் என்பார்கள். இயக்குநர் முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி கூட, படப்பிடிப்புத் தளங்களில், சோ ஒவ்வொருவரிடமும் எப்படியெல்லாம் நடந்துகொண்டார் என்பதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

சோ குறித்தான இன்னொரு தகவலும் சுவாரசியமானது.

சோ
சோ

‘முகமது பின் துக்ளக்’ நாடகம் அரங்கேற்றினார் சோ. இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. ‘’இந்த நாடகத்தை சினிமாவாக்கினால் என்ன?’’ என்று யோசித்து படமெடுக்கவும் களத்தில் இறங்கினார். சோ, மனோரமா, உஷா நந்தினி முதலானோர் நடித்தார்கள். 1968ம் ஆண்டு நாடகமாக வந்த ‘முகமது பின் துக்ளக்’, 1971ம் ஆண்டு திரைப்படமாகவும் வந்தது. எழுதி இயக்கி நடித்திருந்தார் சோ.

படத்துக்கான பாடல்களை கவிஞர் வாலி எழுத, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை, நீதானே உலகின் எல்லை’ என்ற பாடல் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்றைக்கும் இந்தப் பாடல் மறக்கமுடியாத பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

காட்சியைச் சொல்லி சோ விளக்கியதும், மெல்லிசை மன்னர் கவிஞர் வாலியை அழைத்து பாடல் கேட்டார். டியூனைக் கொடுத்தார். டியூனை பாடிக்காட்டினார் எம்.எஸ்.வி. டியூனைப் போடும்போதே, ‘இந்தப் பாடலை நாகூர் ஹனீபாவை அழைத்துப் பாடவைக்கவேண்டும்’ என முடிவு செய்தார் மெல்லிசை மன்னர். இதை சோவிடம் தெரிவித்தார். ஆனால் சோ, ‘’இந்த மாதிரி நிறைய பாடல்கள்தான் ஹனீபா பாடியிருக்கிறார். இன்னமும் பாடிக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு ஹைபிட்ச் நன்றாக வருமே... நீங்களே பாடுங்கள், வித்தியாசமாக இருக்கும்’’ என்று சொல்ல, மெல்லிசை மன்னர் மறுத்தார். ‘நாகூர் ஹனீபா’’ என்பதில் எம்.எஸ்.வி. உறுதியாக இருந்தார். ’எம்.எஸ்.வி.தான் பாடவேண்டும்’ என்று சோ விடாப்பிடியாக இருந்தார்.

இந்தத் தர்க்கம் நீண்ட நேரமாகியும் முடிவுக்கு வரவில்லை. உடனே சோ, ‘’எதுக்கு இந்த வம்பு? ரெண்டுபேர் பேரையும் தனித்தனியே எழுதி சீட்டுக் குலுக்கி எடுக்கலாம். யார் பேரு வருதோ, அவரே இந்தப் பாட்டைப் பாடட்டும்’’ என்று சோ சொல்ல, மெல்லிசை மன்னர் உட்பட எல்லோரும் சம்மதித்தார்கள். சீட்டுக் குலுக்கி எடுத்தார்கள். அதில், ‘மெல்லிசை மன்னர்’ பெயரே வந்தது. வாலி எழுதிய அந்தப் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் தன் உச்சஸ்தாயி குரலில் பாடி அசத்தினார்.

’நிலம் வெளுக்க நீர் தான் உண்டு நீர் வெளுக்க மீன் தான் உண்டு/ நிலம் வெளுக்க நீர் தான் உண்டு நீர் வெளுக்க மீன் தான் உண்டு/ மனம் வெளுக்க எதுதான் உண்டு? நபியே உன் வேதம் உண்டு அல்லா அல்லா லா அல்லா அல்லா/ நீ இல்லாத இடமே இல்லை நீ தானே உலகின் எல்லை’ என்றும்

’உடலுக்கு ஒன்பது வாசல் மனதுக்கு எண்பது வாசல்/ உடலுக்கு ஒன்பது வாசல் மனதுக்கு எண்பது வாசல்/ உயிருக்கு உயிராய்க் காணும் ஒரு வாசல் பள்ளிவாசல் அல்லா அல்லா லா அல்லா அல்லா/ என்றும் வரிகளில் உருக்கிவிடுவார் மெல்லிசை மன்னர்.

’இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் இல்லார்க்கு எதுதான் சொந்தம்/ இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் இல்லார்க்கு எதுதான் சொந்தம்/ நல்லார்க்கும் பொல்லார்க்கும்தான் நாயகமே நீயே சொந்தம்’ என்று ஒவ்வொரு வரிக்கும் வார்த்தைகளை உச்சரித்த விதமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

படம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடியது. விழாவில் மெல்லிசை மன்னரும் கலந்துகொண்டார். அப்போது மைக் பிடித்த சோ, ‘’இப்போது நானொரு உண்மையைச் சொல்லப் போகிறேன். நான் மெல்லிசை மன்னரை ஏமாற்றிவிட்டேன். அவரும் ஏமாந்துவிட்டார்’’ என்று சொல்ல... அனைவரும் அதிர்ந்து போனார்கள். இதைக் கேட்டு எம்.எஸ்.விக்கும் ஷாக். சோவை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

‘’ ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் இடம்பெற்ற ‘அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை’ பாடலை நாகூர் ஹனீபா பாடவேண்டும் என்பதில் மெல்லிசை மன்னர் உறுதியாக இருந்தார். நானோ, இந்தப் பாடலை மெல்லிசை மன்னர்தான் பாடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தேன். இந்த வாக்குவாதம் நிற்கவே இல்லை. சீட்டுக் குலுக்கி எடுக்கிற ஐடியாவைச் சொன்னேன். அதன்படி சீட்டும் குலுக்கினோம். அதில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்று வந்தது. அதை ஏற்றுக்கொண்டவர் அந்தப் பாடலை அவரே பாடிக் கொடுத்தார். பாடலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுவிட்டது. மொத்தம் இரண்டு சீட்டுகளில் பெயர் எழுதி குலுக்கினோம். இரண்டிலுமே எம்.எஸ்.வி.யின் பெயரைத்தான் எழுதிவைத்திருந்தேன். அப்போது என் மீது கொண்ட நம்பிக்கையால் உடனே பாடச் சம்மதித்து பாடி ஹிட்டாக்கியும் கொடுத்துவிட்டார். ஆனால் உண்மையை மறைக்க எனக்கு விருப்பமில்லை. நாகூர் ஹனீபாவின் குரலும் எனக்குப் பிடிக்கும். அவருடைய ரசிகன் தான் நான். ஆனாலும் இந்தப் பாடலை வழக்கமாக அவர் பாடாமல், எம்.எஸ்.வி. பாடினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன். அதனால் இரண்டுச் சீட்டிலும் அவருடைய பெயரை எழுதி விசு அண்ணனை ஏமாற்றிவிட்டேன்’’ என்று சோ பேசி முடிக்க... மொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரித்தது. மெல்லிசை மன்னரால் சிரிப்பை அடக்க வெகுநேரமானது.

1968ம் ஆண்டு ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை அரங்கேற்றினார் சோ. 1970ம் ஆண்டு ‘துக்ளக்’ பத்திரிகையை பொங்கல் நன்னாளில் தொடங்கினார். 1971ம் ஆண்டு, ‘முகமது பின் துக்ளக்’ படத்தை இயக்கி நடித்தார். பத்திரிகை தொடங்கி 52 ஆண்டுகளாகிவிட்டன. படம் வெளியாகி 51 ஆண்டுகளாகிவிட்டன.

வாலியின் வரிகளில், மெல்லிசை மன்னர் இசையமைத்துப் பாடிய ‘அல்லா அல்லா’ பாடல் இன்றைக்கும் நம்மால் ரசிக்கும் பாடலாக, முணுமுணுக்கும் பாடலாக அமைந்திருக்கிறது.

சோ செய்த குறும்புகள் இப்படி எத்தனையெத்தனையோ?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in