‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தி: சிரிக்க வைத்தவர், சிறந்த கலைஞர்களைத் திரைக்குத் தந்தவர்!

96-வது பிறந்தநாளில் சிறப்புப் பகிர்வு
சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி
சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி

இசைஞானி இளையராஜாவை நமக்கு வழங்கியவர் பஞ்சு அருணாசலம். கவியரசர் கண்ணதாசனின் உதவியாளராக, பிறகு பாடலாசிரியராக வளர்ந்தார் பஞ்சு அருணாசலம். பின்னாளில், கதாசிரியராக, திரைக்கதை அமைப்பாளராக, வசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக பன்முகத் திறமைகளையும் வெளிப்படுத்தி, தனித்துவம் மிக்க கலைஞனாகத் திகழ்ந்தார். அப்படி பாடலாசிரியர் எனும் நிலையில் இருந்து அடுத்த நிலைக்குக் கதாசிரியராகவும் திரைக்கதை வசனகர்த்தாவாகவும் உயர்ந்ததற்கு பிள்ளையார்சுழி போட்டவர்... சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி. தமிழ்த் திரைப்பட தயாரிப்பு உலகில், தனக்கென தனியிடம் பிடித்தவர்.

புதுக்கோட்டை சமஸ்தானத்துக்காரர். இளம் வயதிலேயே சினிமாவின் மீது ஈடுபாடு. என்ன செய்வது என்று யோசித்தவர், விநியோகத் துறையில் காலடியெடுத்துவைத்தார். ’ஒரு படம் ஏன் ஓடுகிறது, எதனால் வெற்றிபெறுகிறது, ஏன் ஓடவில்லை, எதெல்லாம் இருந்தால் ஓடியிருக்கும்’ என்கிற கணக்குகள் இன்றுவரை எவருக்கும் பிடிபடாத ரகசியங்கள். அந்த மாயாஜால ரகசியங்களை ஓரளவு கணிப்பதில் சூரரானார் கிருஷ்ணமூர்த்தி.

அந்த சமயத்தில்தான், ‘சித்ரமஹால்’ என நிறுவனத்துக்குப் பெயர் சூட்டினார். கிருஷ்ணமூர்த்தி, ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்பட்டார். சொந்தமாகப் படங்கள் தயாரிப்பது எனும் முடிவுக்கு வந்தவர், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், எல்லா தரப்பினரும் பார்ப்பார்கள், ரசிப்பார்கள் என நம்பினார்.

திரையுலகில் பலரின் தொடர்பு அவருக்குக் கிடைத்துவிட்டிருந்தது. நிறைய படங்கள் தயாரித்தார். தயாரித்து இயக்கவும் செய்தார். ஆரம்பகட்டத்தில், 1969-ம் ஆண்டு, ’செல்லப்பெண்’ என்றொரு படத்தைத் தயாரித்தார். ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ் என நடித்திருந்தார்கள். இந்தப் படத்தை அவரே இயக்கினார். ’புதிய பறவை’யை இயக்கிய தாதாமிராஸியைக் கொண்டு, ரவிச்சந்திரன், சரோஜாதேவி, பாலையா, நாகேஷ் முதலானோரைக் கொண்டு, ‘ஓடும் நதி’ என்ற படத்தைத் தயாரித்தார்.

நாகேஷ், சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி
நாகேஷ், சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி

நாகேஷ், விஜயலலிதா, வி.கே.ராமசாமி, சுருளிராஜன், எம்.ஆர்.ஆர்.வாசு, எஸ்.என்.லட்சுமி, தேங்காய் சீனிவாசன், சச்சு, ராமராவ் விஜயசந்திரிகா என பெருங்கூட்டத்தை வைத்துக்கொண்டு ‘தேன் கிண்ணம்’ படத்தைத் தயாரித்தார். ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியே இயக்கினார். படமும் ஹிட். பாடல்களும் ஹிட்டடித்தன.

இந்தச் சமயத்தில்தான், தன்னுடைய படத்துக்கு பஞ்சு அருணாசலத்தை கதை எழுதவும் திரைக்கதை அமைக்கவும் தேர்வு செய்தார். ‘எனக்கும் விருப்பம்தான். உங்க படத்துக்கு பெரியாளா புக் பண்ணலாமே கிருஷ்ணமூர்த்தி’ என்று பஞ்சு அருணாசலம் சொல்ல, ‘நான் முடிவு பண்ணிட்டேன். நீங்கதான் பண்றீங்க’ என்று உறுதியாகச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி. அப்படி உருவானதுதான், ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியின் ‘ஹலோ பார்ட்னர்’. பஞ்சு அருணாசலத்துக்குள் இருக்கும் பன்முகத்திறமைகளை வெளிக்கொண்டு வந்த வகையில், இதுவே அவருக்கு முதல்படமானது.

பஞ்சு அருணாசலத்துடன் ஒரு பாடல் கம்போஸிங்கில்...
பஞ்சு அருணாசலத்துடன் ஒரு பாடல் கம்போஸிங்கில்...

இதைத் தொடர்ந்து ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியும் பஞ்சு அருணாசலமும் ஜோடி போடத் தொடங்கினார்கள். இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில், சினிமாக்காரர்கள் இப்போது போலவே ரொம்பவே சென்டிமென்ட் பார்த்தார்கள். பஞ்சு அருணாசலம் வேலைபார்த்தால் அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடும் என்று நம்பப்பட்டது. அப்படி ஆரம்பத்தில் நிகழ்ந்துமிருக்கிறது. அதனால், பஞ்சு அருணாசலத்தை, ‘பாதிக்கதை’ பஞ்சு என்றே கேலி பேசியவர்களும் உண்டு. ஆனால், ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தி, இந்த சென்டிமென்ட் பேத்தல்களையெல்லாம் உடைத்தார். தொடர்ந்து தன் படங்களுக்கு அவரையே பயன்படுத்தினார்.

‘நல்ல கதை, நிறைய காமெடி. படம் பார்த்துவிட்டு, வெளியே வரும் ரசிகர்கள் சிரித்த முகத்துடன் போக வேண்டும்’ என்பதுதான் ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியின் இலக்கணமாக இருந்தது. ’ஹலோ பார்ட்னர்’ படத்துக்கு, பாடகர் தாராபுரம் சுந்தர்ராஜனை இசையமைப்பாளராக்கினார்.

முத்துராமன், ஜெயந்தி, சிவகுமார், சோ, சுருளிராஜன், மனோரமா என ‘சண்முகப்பிரியா’ எனும் படத்தைத் தயாரித்து இயக்கினார். ‘நல்ல கதை, கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கிற படத்தை ரசிகர்கள் ஓடச் செய்திருக்கலாம்’ என பத்திரிகைகள் விமர்சனம் எழுதின.

’உங்கள் விருப்பம்’ என்ற படம். பஞ்சு அருணாசலம் கதை வசனத்தில் வந்தது. இந்தமுறை கன்னடத்தில் இருந்து வந்திருந்த விஜயபாஸ்கர் எனும் இசையமைப்பாளர்தான் இசை. ஜெய்சங்கர், ஜெயசித்ரா, மனோரமா, தங்கவேலு, தேங்காய் சீனிவாசன் என பலரும் நடித்தார்கள். தயாரித்து இயக்கினார் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி. ‘மினிமம் பட்ஜெட். லாபம் நிச்சயம்’ என்பதுதான் அவரின் வியாபார சூத்திரம்.

ஜெய்சங்கர், ஜெயசித்ராவுடன் ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தி
ஜெய்சங்கர், ஜெயசித்ராவுடன் ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தி

மீண்டும் ஜெய்சங்கர், ஜெயசித்ரா கூட்டணி போட்டார்கள். பஞ்சுவும் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியும் கூட்டணியைத் தேர்வு செய்தார்கள். விஜயபாஸ்கரின் இசை. பஞ்சுவின் கதை வசனத்தில், ‘கல்யாணமாம் கல்யாணம்’ படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்கினார். ’இளமை நாட்டிய சாலை’, ’காலம் பொன்னானது கடமை கண்ணானது’ என்ற எஸ்பிபி-யின் பாடல், ‘கவிதை நான் கவிஞன் நீ’ எனும் எல்.ஆர்.ஈஸ்வரியின் பாடல், எல்லாவற்றுக்கும் மேலாக, ‘ஆத்தங்கரையில் காத்திருந்தார் மாமா’ என்ற டிஎம்எஸ் பாடல் என எல்லாமே ஹிட் பாடல்களாக அமைந்தன.

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி தயாரித்து இயக்கினால், அந்தப் படம் ‘முதலுக்கு மோசமில்லை’ என்று விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க ஓடிவந்தார்கள். ‘உங்க வீட்டுக் கல்யாணம்’ படமும் அப்படித்தான் லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. விஜயகுமார், ஸ்ரீப்ரியா நடித்த ‘ஒளிமயமான எதிர்காலம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. விஜயபாஸ்கர் எனும் இசையமைப்பாளரையும் பஞ்சு அருணாசலம் எனும் பன்முகக் கலைஞரையும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே வந்தார் சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி.

படங்களைத் தயாரிப்பது, இயக்குவது, விநியோகிப்பது என்பதுடன் நிறுத்திக் கொள்ளாமல், திரைப்படத் துறையில் எத்தனையோ பங்களிப்புகளை முன்னெடுத்து நடத்தினார். எம்ஜிஆருக்கு சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியை ரொம்பவே பிடித்துப் போனது. ‘கலையை உண்மையா நேசிக்கிறீங்க. நியாயமா நடந்துக்கறீங்க’ என்று எம்ஜிஆர் மனம் திறந்து பாராட்டியிருக்கிறார்.

சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி
சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி

அந்தக் காலகட்டத்தில், எம்ஜிஆருக்கு ஒரு ஆசை இருந்தது. ‘தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ உருவாக்க வேண்டும் என்று! தயாரிப்பாளர்கள் வலம்புரி சோமநாதன், ராம.அரங்கண்ணல், தேவி பிலிம்ஸ் ராஜகோபால் செட்டியார், ஏவி.எம்.முருகன், கலாகேந்திரா கோவிந்தராஜன், சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தி, முக்தா சீனிவாசன் ஆகியோர் சேர்ந்து கையெழுத்திட்டு உருவாக்கிய அமைப்புதான் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்.

1977-ம் ஆண்டு. எம்ஜிஆர் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்தித்தார். சித்ரமஹால் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். சென்னை தியாகராயநகரில் வேட்பாளராக நிறுத்தினார். சினிமாவே மூச்சு, உண்மையே சுவாசம் என்று வேறு எதுவும் அறியாதவராகவே இருந்துவிட்ட கிருஷ்ணமூர்த்தி, தேர்தலில் தோற்றுப்போனார். ஆனால், திரையுலகில், தனித்ததொரு தயாரிப்பாளராக, பண்பும் அன்பும் மிக்க மனிதராக, ‘சித்ரமஹால்’ எனும் நிறுவனத்துக்கு நற்பெயர் சம்பாதித்து வைத்தார். தலைமுறை கடந்தும் கூட, எல்லோரும் ரசிக்கும் வகையிலான காமெடிப் படங்களை வழங்கினார்.

ஒருகட்டத்தில், தயாரிப்பதையும் இயக்கும் பணியையும் விட்டுவிட்டு, விநியோகப் பணியில் மட்டும் கவனம் செலுத்தினார். பலகாலம் கழித்து, இவரின் மகன் குமரன், ‘தினந்தோறும்’ முதலான படங்களைத் தயாரித்தார். பட விநியோகத்திலும் ஈடுபட்டார். டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டு, கே.பாலசந்தரால் இனம் கண்டறியப்பட்டு, இன்றைக்கும் மிகச்சிறந்த கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகை ரேணுகா, ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியின் மருமகள்.

தமிழ் சினிமாவில், இப்படி மறந்துவிட்ட நல்ல நல்ல படைப்பாளிகள் எத்தனையோ பேர் உண்டு. அவர்களையெல்லாம் ஆவணப்படுத்தவும் வேண்டும்; உரிய கெளரவத்தையும் வழங்கி சரித்திரமாக்கவும் வேண்டும்.

1927 செப்டம்பர் 18-ம் தேதி பிறந்த ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியின் 96-வது பிறந்தநாள். இந்தநாளில், நல்ல காமெடிப் படங்களை வழங்கியவரையும் பஞ்சு அருணாசலத்தின் திறமைகளை ஆரம்பக்கட்டத்திலேயே அறிந்து கைகோர்த்தவருமான ‘சித்ரமஹால்’ கிருஷ்ணமூர்த்தியை நினைவுகூர்வோம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in