"கர்ப்பம் தரித்ததை சொல்லாததற்குக் காரணம் இதுதான்!"- ட்விட்டரில் கொந்தளித்த சின்மயி!

"கர்ப்பம் தரித்ததை சொல்லாததற்குக் காரணம் இதுதான்!"- ட்விட்டரில் கொந்தளித்த சின்மயி!

பின்னணி பாடகி சின்மயி தனக்குச் சமீபத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதைத் தெரிவித்தார். இதற்குப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்த அதே சமயம் அவர் சமூக வலைத்தளங்களில் கேலிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு அதே சமூக வலைத்தளத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி.

பின்னணி பாடகி சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் கடந்த 2014ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்பதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்கள். தன்னுடைய கர்ப்ப காலம் குறித்து ரகசியம் காத்துவந்த சின்மயி தனக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள பதிவைக் கண்டு, அவரின் ரசிகர்கள் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.

அதேவேளையில் எதிர்மறை கருத்துக்களையும் சின்மயி எதிர்கொள்ள நேரிட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு 'மீ டூ' இயக்கம் தமிழகத்தில் பெரும் பேசுபொருள் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகைச் சேர்ந்த பிரபல கவிஞர் மீதும், பாடகர்கள் மீது சின்மயி பாலியல் புகார்களை முன்வைத்தார். சின்மயி எழுப்பிய புகாரானது திரைத்துறை மட்டுமல்லாது அரசியலிலும் பெரும் அதிர்வலையைக் கிளப்பியது. இந்த சர்ச்சைகள் ஓய்ந்த நிலையில் தற்போது அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் சின்மயி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ' உங்கள் இரட்டை குழந்தைகளை வைரம், முத்துவைப் போல என்றும் புகழோடு நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், 'எனது குழந்தைகளின் பிறப்பை நான் அறிவித்ததிலிருந்து 'மீ டூ' இயக்கத்தில் நான் புகார் அளித்த நபரின் பெயரைக் குறிப்பிட்டு பலரும் என் குழந்தைகளுக்கும் அது போலவே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம் மட்டும் தான் முன்னேறி உள்ளது, பெண்ணியம் பேசும் மாநிலம் எனத் தமிழ்நாட்டைப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற சாக்கடைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இதனால்தான் நான் கர்ப்பமாக இருந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சாக்கடைகளை சுற்றித்தான் நம் குழந்தைகளையும் வளர்க்க வேண்டிய நிலை உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தமிழ் நாட்டில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேலிக் கூத்தாக உள்ளது' என சின்மயி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in