‘இவர்கள்தான் இனி எங்கள் உலகம்’ - இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான சின்மயி நெகிழ்ச்சி!

‘இவர்கள்தான் இனி எங்கள் உலகம்’ -  இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான சின்மயி நெகிழ்ச்சி!

மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தமிழ் மட்டுமல்லாது இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் பாடியுள்ளார். நடிகைகளுக்குப் பின்னணிக் குரலும் கொடுத்துள்ளார்.

இவருக்கும் நடிகர் ராகுலுக்கும் கடந்த 2014-ல் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக சின்மயி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஆண், பெண் என பிறந்துள்ள இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு த்ரிப்டா மற்றும் ஷர்வாஸ் என பெயர் வைத்துள்ளதாக சின்மயி கூறியுள்ளார். குழந்தைகளின் கையைப் பிடித்துள்ளவாறு இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து இதைத் தெரிவித்துள்ள அவர், 'இவர்கள்தான் இனி எங்கள் இருவரின் உலகம்' என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். ராகுல் - சின்மயி தம்பதிக்கும் குழந்தைகளுக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

‘குழந்தைகளின் புகைப்படங்கள் பொதுவில் வராது’

சின்மயி தன்னுடைய இன்னொரு பதிவில், 'நான் கர்ப்ப காலத்தின் புகைப்படங்களை இங்கு பகிராததால் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்றுக்கொண்டேனா என சமூக வலைதளங்களில் குறுஞ்செய்தி அனுப்பி கேட்பவர்களையும் அன்பு செய்கிறேன். என்னுடைய நெருங்கிய வட்டத்திற்கு மட்டுமே இந்தச் செய்தி தெரியும். மேலும் நான் என்னுடைய குடும்பம், நண்பர்கள், தனிப்பட்ட வாழ்க்கை என எதையும் இதுவரை பொதுவில் பெரிதாகக் கொண்டு வந்தது இல்லை. அதைப் பற்றி நான் மிகவும் கவனமாக, பாதுகாப்பாக இருந்திருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன்' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘என் குழந்தைகளின் புகைப்படங்களும் பொதுவில் வராது. என் அறுவை சிகிச்சை சமயத்தின்போது நான், என் இரட்டையர்கள் இந்த உலகத்தில் அடியெடுத்து வைத்தபோது நான் பஜனை பாடினேனா எனவும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். இதை எல்லாம் பற்றி பின்பு நான் சொல்கிறேன். ஆனால், இப்போதைக்கு இந்தத் தகவல்கள் போதும்' என்று சின்மயி கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in