திரைப்படத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

குட்கா, கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை வெளியிடவும்!
திரைப்படத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய வேண்டுகோள்

திரைப்படத்தில் குட்கா, கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கத்தில் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ஒரு காலத்தில் திரைப்பட தயாரிப்பில் இருந்தவன் நான். ஒரு சில படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். திமுகவையும் திரைத் துறையையும் பிரிக்க முடியாது. 2 ஆண்டுகாலம் கரோனாவால் பல்வேறு துறையினர் பாதிப்படைந்தனர். அதில் திரையுலகமும் பாதிப்புக்குள்ளானது. லட்சக்கணக்கான மக்கள் திரைத்துறையை நம்பி உள்ளனர். பல்லாயிரம் கோடி வர்த்தகம் நடைபெறும் தொழிலாகும்.

திரைத்துறையில் முத்திரை பதித்த மாநிலம் தமிழ்நாடு. திரைத்துறையாக இருந்தாலும் செய்தித்துறையாக இருந்தாலும் தமிழ்நாடு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். தொழில்துறை முன்னேற்றம் காண வேண்டும் என்ற அடிப்படையில் துபாய்க்கு சென்று வந்தேன். மாநிலத்தின் உரிமைகளை உரிமையோடு கேட்க வேண்டும் என்பதற்காக தலைநகரம் டெல்லிக்கு சென்று வந்தேன். திரைப்படத்தில் குட்கா, கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும். திரைதுறையை மேம்படுத்த அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு தயாராக இருக்கிறது" என்றார்.

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுது போக்கு மாநாட்டில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, ஃபெஃப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி மற்றும் நிர்வாகிகள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, ஆர்.கே.சுரேஷ், பி.வாசு, தினா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.