`முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்'- தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தும் முதல்வர் ஸ்டாலின்

`முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்'- தேசிய விருது வென்றவர்களை வாழ்த்தும் முதல்வர் ஸ்டாலின்

தேசிய விருது பெற்றுள்ள நடிகர் சூர்யா உள்பட பலருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

68-வது தேசிய சினிமா விருதில் நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படம் ஐந்து விருதுகளை பெற்றுள்ளது. மேலும், சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா உள்ளிட்ட படங்களுக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில், தேசிய விருது பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், `68-வது தேசிய சினிமா விருதில் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்கரா, ஜி.வி.பிரகாஷ், அபர்ணா முரளி உள்ளிட்ட சூரரைப் போற்று படக்குழுவினருக்கும்; இயக்குநர் வசந்த், லட்சுமி ப்ரியா, ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட `சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்' படக்குழுவினருக்கும், மடோன் அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள். அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள். சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும்" என்று கூறியுள்ளார்.

மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், `சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது பெற்றிருக்கும் சூர்யாவிற்கு வாழ்த்துகள். சிறந்த படம், நடிகை, திரைக்கதை, இசையமைப்பு என 5 விருதுகளை பெற்றுள்ள படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், `சூரரைப் போற்று திரைப்படத்தில் தனது பன்முகத்தன்மை கொண்ட நடிப்பிற்காகத் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துகள். சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் சூர்யாவுக்கு வழங்கி கௌரவித்த மத்திய அரசுக்கு நன்றி' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in