பைக்கில் பின் தொடரும் வாலிபர்... வீடு வரை தொந்தரவு: பதறிய பிக்பாஸ் வைஷ்ணவிக்கு போலீஸ் தைரியம்

பைக்கில் பின் தொடரும் வாலிபர்... வீடு வரை தொந்தரவு: பதறிய பிக்பாஸ் வைஷ்ணவிக்கு போலீஸ் தைரியம்

வாலிபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்து தொந்தரவு அளிப்பதாக ஆர்ஜேவும், பிக்பாஸ் பிரபலமுமான வைஷ்ணவி வீடியோ ஆதாரங்களுடன் சமூக வலைதளம் மூலம் காவல்துறையினர் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி. இவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவரைப் பற்றி பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில், இருசக்கர வாகனத்தில் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும், வீட்டின் வாசலுக்கு வந்து தன்னை தொந்தரவு செய்வதாகவும், தன் வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சி செல்லும்போது பின்தொடர்ந்து வந்து மிரட்டும் தோனியில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

பின் தொடர்ந்து வந்த வாலிபர்
பின் தொடர்ந்து வந்த வாலிபர்

மேலும், தான் தங்கியிருக்கும் வீட்டை அந்த வாலிபர் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக 30 நிமிடம் வீட்டுக்கு செல்லாமல் பதற்றத்துடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், அதன்பின் அந்த வாலிபருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்றதாகவும், தனக்குத் தொந்தரவு அளித்த அந்த நபரை அவருக்கு தெரியாமலே வீடியோ படம் எடுத்து வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இதுபற்றி தனது தாயிடம் கூறியபோது, நபர் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டாம் எனவும், பழிவாங்கும் நோக்கில் அந்த நபர் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது? என அச்சத்துடன் கேட்டதாகவும், அதற்கு தான் புகார் அளிக்காமல் இருப்பதால் அந்த மர்ம நபர் மறுபடியும் தொந்தரவு செய்யாமல் இருப்பாரா? வேறு பெண்ணிடம் இதுபோல் நடக்க வாய்ப்புள்ளது அல்லவா? என இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியதாக தெரிவித்துள்ள வைஷ்ணவி, சென்னை காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தை இணைத்து இந்த புகாரை தெரிவித்துள்ளார்.

தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு புகார் அளித்த வைஷ்ணவிக்கு காவல்துறை தரப்பில் இருந்து சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று இக்கட்டான நேரங்களில் 100க்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in