
பண மோசடி செய்ததாக, இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் பிரபல திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மா. இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் படங்களை இயக்கியுள்ள இவர், சூர்யா நடிப்பில் ரத்தச்சரித்திரம் என்ற படத்தை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.
இவர், கால்நடை இளம் மருத்துவர் ஒருவர், ஹைதராபாத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை மையமாக வைத்து ’திஷா என்கவுன்டர்’ என்ற படத்தை உருவாக்கினார். இந்தப் படத்துக்காக, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த கே.சேகர் பாபு என்பவரிடம் ரூ.56 லட்சம் கடனாகப் பெற்றார், ராம் கோபால் வர்மா.
பட ரிலீஸின் போது திருப்பித் தந்துவிடுவதாகக் கூறியிருந்தாராம். ஆனால், தரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து மியாபூர் போலீஸ் ஸ்டேஷனில் ராம் கோபால் வர்மா மீது சேகர் பாபு பணமோசடி புகார் கொடுத்தார்.
அதில், வர்மாவுக்கும் எனக்கும் பொதுவான நண்பரான ரமண ரெட்டி மூலம் வர்மா அறிமுகமானார். இந்தப் படத்துக்காக பணம் பெற்ற வர்மா, ஆறு மாதத்துக்குள் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகக் கூறியிருந்தார். ஆனால், இதுவரை தராமல் மோசடி செய்து விட்டார்’ என்று கூறியுள்ளார். வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.