சன்னி லியோன் மீதான ‘420’ வழக்கு: கேரள நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சன்னி லியோன் மீதான ‘420’ வழக்கு: கேரள நீதிமன்றம் முக்கிய உத்தரவு

பாலிவுட் தாரகை சன்னி லியோனுக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் முக்கிய முடிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாலிவுட் சினிமாவில் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருபவர் சன்னி லியோன். முன்னதாக இவர் பங்கேற்ற பெரியோர் படங்களின் பிரபல்யம் காரணமாக, சன்னி லியோனின் தற்போதைய பங்களிப்பும் கவர்ச்சி சார்ந்தே இடம்பெற்று வருகிறது. இதே பிரபல்யம் சன்னி லியோனின் புகழை பாலிவுட்டுக்கு அப்பாலும் பரப்பியிருக்கிறது. அந்த வகையில் தமிழில் ஜெய் நடித்த ’வடகறி’ திரைப்படத்துக்காக சன்னி லியோன் ஒற்றைப் பாடலுக்கு ஆடியிருக்கிறார். தற்போது சன்னி லியோன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

’ஓ மை கோஸ்ட்’ விழாவில் சன்னி
’ஓ மை கோஸ்ட்’ விழாவில் சன்னி

பாலிவுட், கோலிவுட் ஆகியவற்றுக்கு அப்பால் மலையாள தேசத்தில் சன்னி லியோனுக்கான மவுசு இன்னும் அதிகம். ஷகீலா போன்றவர்களைக் கொண்டு கேரள சூப்பர் ஸ்டார்களின் திரை வெளியீடுகளையே மிரட்டியவர்கள் அவர்கள். அங்கே அழைப்பின் பேரில் சன்னி லியோனும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் அப்படியான நகைக்கடை திறப்பு விழா ஒன்றில் சன்னி லியோன் பங்கேற்றபோது, அவரது ரசிகர்கள் ஆவலாய் திரண்டதில் நகரமே ஸ்தம்பித்தது. அந்த மக்கள் திரள் காட்சியை சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஒரு தேசிய கட்சி, தங்கள் தலைவருக்கு திரண்ட கூட்டம் என பெருமை பேசி பின்னர் சேட்டன்களால் மூக்குடைபட்டது.

தற்போது அதே கேரளாவில் ’சீட்டிங்’ வழக்கு ஒன்றில் சன்னி லியோன் சிக்கியிருக்கிறார். சன்னி லியோன் வழக்கமாக பங்கேற்கும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்த குஞ்சு முகமது என்பவர், அதற்கான பெருந்தொகையையும் சன்னி லியோன் சார்ந்தவர்களிடம் வழங்கியிருந்தாராம். ஆனால் சன்னி லியோன் தரப்பு உறுதியளித்தவாறு நிகழ்வில் பங்கேற்கவும் இல்லை; பெருந்தொகையை திருப்பியும் அளிக்கவில்லை என்பதுதான் குஞ்சு குற்றச்சாட்டு. சன்னி லியோன் மட்டுமன்றி அவரது கணவர் டேனியல் வெபர் மற்றும் ஒரு உதவியாளர் ஆகியோருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கணவருடன் சன்னி
கணவருடன் சன்னி

இந்த வழக்கில் சன்னி லியோன் தரப்பில் அளிக்கப்பட விளக்கத்தில் ’குஞ்சு முகமதுவின் குற்றச்சாட்டுகளை மறுத்ததோடு, ஆதாரங்கள் அற்ற அந்த புகாரால் தன் மீதான மதிப்புக்கு பங்கம் நேர்ந்திருப்பதாகவும், அதிக மனவேதனை அளித்திருப்பதாகவும்’ தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இருதரப்பையும் விசாரித்த நீதிமன்றம், அடுத்த முடிவு எட்டப்படும் வரை சன்னி லியோன் தரப்புக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in