
பிரபல நட்சத்திர தம்பதி மீது, பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழில் 'ஜனா', 'ஸ்கெட்ச்', விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வீரமே வாகை சூடும்’படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் பாபு ராஜ். பிரபல மலையாள நடிகர் மற்றும் தயாரிப்பாளரான இவர், நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.
வாணி விஸ்வநாத், தமிழில்' மண்ணுக்குள் வைரம்', 'பூந்தோட்டக் காவல்காரன்',' தாய்மேல் ஆணை', 'இதயத் திருடன்' உட்பட பல படங்களிலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் நடித்துள்ளார்.
கேரளாவில் வசித்து வரும் இவர்கள், ’கூடாஷா’ (Koodasha) என்ற படத்தை கடந்த 2018-ம் ஆண்டு தயாரித்தனர்.
டினு தாமஸ் ஈழன் இயக்கிய இந்தப் படத்தில் பாபுராஜ், தேவன், நிதின் ஜார்ஜ், ஓர்மா போஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். படத்துக்காக, கேரள மாநிலம் திருவில்வமலா என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் ரூ.3.14 கோடியை பாபுராஜும், வாணி விஸ்வநாத்தும் கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஒட்டப்பாலம் வங்கி ஒன்றின் மூலம் இந்தப் பணம் கொடுக்கப்பட்டதாகவும் ஆனால், படம் வெளியாகி இத்தனை வருடம் ஆகியும் வாங்கிய பணத்தைத் திருப்பித் தரவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, ரியாஸ் ஒட்டப்பாலம் போலீஸில் பணமோசடி புகார் அளித்தார்.
இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நட்சத்திர தம்பதி மீது பண மோசடி புகார் கொடுக்கப் பட்டிருப்பது கேரள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மூணாறில் ரிசார்ட் ஒன்றை குத்தகைக்கு வாங்கிய விவகாரத்தில் ரூ.40 லட்சம் மோசடி செய்துவிட்டதாக நடிகர் பாபுராஜ் மீது, ஏற்கனவே தொழிலதிபர் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.