நிறம் மாறுகிறதா தமிழ் சினிமா?

கமல் - பா.ரஞ்சித்
கமல் - பா.ரஞ்சித்

சமீபத்தில் வெளிவந்த ‘ஜெய் பீம்’ திரைப்படம், சமூகத்தின் பல அடுக்குகளிலிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வரவேற்பும் பாராட்டும் ஒருபுறம் இருந்தாலும், சில விமர்சனங்களையும் கேள்விகளையும் இப்படம் எழுப்பியுள்ளது. நிஜக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தில், நிஜமாக நிகழ்ந்த நிகழ்வில் தவறு செய்தவர் ஒரு கிறிஸ்தவராக இருக்கும்போது திரைப்படத்தில் அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராகச் சித்தரித்திருப்பது, சாதிய அமைப்புகளிடமிருந்தும் மதவாத அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

‘ஜெய் பீம்’ திரைப்படம் மட்டுமல்ல கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் குரல்களையும், இடதுசாரிக் கொள்கைகளையும் வலியுறுத்தும் திரைப்படங்கள் மூலம் தங்களுடைய நம்பிக்கை புண்படுத்தப்படுவதாகத் தொடர்ந்து வலதுசாரி அமைப்புகள் குற்றம் கூறிவருவதைப் பார்க்க முடிகிறது. உண்மையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் குரலாக ஒலிக்கும் சினிமாவாக, இடதுசாரி சிந்தனை கொண்டவர்களின் சினிமாவாகத் தமிழ்த் திரையுலகம் மாறிவிட்டதா, இனிமேல் இந்தப் போக்குதான் தொடருமா எனும் கேள்வி எழுந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் 90 வருட வரலாற்றில் நிகழ்ந்த மாற்றங்களைக் கவனித்துப் பார்த்தால், இந்தக் கேள்விக்கு விடை கிடைக்கும்.

’ரிக்‌ஷாக்காரன்’ - 1971
’ரிக்‌ஷாக்காரன்’ - 1971

ஆரம்பகாலப் புரட்சிப் படங்கள்

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலம் தொட்டே மிதவாதமான போக்கே கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. எம்ஜிஆர் காலத்து சினிமாக்கள் புரட்சிப் பேசினாலும், அதில் பெரும்பாலும் வர்க்க ரீதியான புரட்சிக் குரலே அதிகம் எதிரொலிக்கும். நிதர்சனத்தில் இப்போது இருப்பதைவிட, மிகக் கொடுமையாக இருந்த சாதிய கொடுமைகளைப் பட்டவர்த்தனமாகப் பேசும் திரைப்படங்கள் அப்போது மிக அரிது. கருணாநிதி, எம்.ஆர்.ராதா போன்ற சிலர் வலதுசாரி கருத்துகளை எதிர்த்து ‘பராசக்தி’, ‘ரத்தக்கண்ணீர்’ போன்ற நாடகங்களையும் திரைப்படங்களையும் உருவாக்கினாலும், எம்ஜிஆர், சிவாஜி போன்ற நட்சத்திர பிம்பங்கள் வெகுஜன திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தியதும், அக்காலகட்டத்தில் திரைப்படத் தயாரிப்பு என்பது நிலச்சுவான்தார் மற்றும் பண்ணையார்களின் கைகளில் இருந்ததும், காத்திரமான புரட்சிகரக் கருத்துகள் அழுத்தமாகப் படமாக்கப்படாமல் போனதற்குக் காரணம் எனலாம்.

‘தண்ணீர் தண்ணீர்’ - 1981
‘தண்ணீர் தண்ணீர்’ - 1981

ஜெயகாந்தன் இயக்கிய ‘உன்னைப் போல் ஒருவன்’, நிமாய் கோஷின் ‘பாதை தெரியுது பார்’, ஜான் ஆபிரஹாம் இயக்கிய ‘அக்ரஹாரத்தில் கழுதை’ எனச் சில முக்கியப் படைப்புகள் இடதுசாரிக் கொள்கைகளை அடிநாதமாகக் கொண்டு உருவாக்கப்பட்டன. எனினும், வணிகத் திரைப்பட உலகில் அப்படியான முயற்சிகள் காத்திரமாக உருக்கொள்ளவில்லை, ‘சிவப்பு மல்லி’ போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர!

1990-களில் பல படங்கள் சரியான சமூகப் புரிதலின்றி தேசியவாதம் பேசுவதையே புரட்சி என்ற கொள்கையைத் தூக்கிப்பிடித்தன. ‘ரோஜா’, ‘குருதிப்புனல்’ போன்ற தேசியவாதப் போக்கு கொண்ட திரைப்படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். 1980-களில் கே.பாலசந்தரும் ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ போன்ற படங்களில் அரசை விமர்சித்திருப்பாரே தவிர, சமூகத்தின் நிதர்சன பிரச்சினைகளைப் பட்டவர்த்தனமாக உடைத்துப் பேச இயக்குநர்களுக்கு அக்காலகட்டத்தில் சாத்தியப்படவில்லை என்பதே உண்மை.

சார்பட்டா பரம்பரை - 2021
சார்பட்டா பரம்பரை - 2021

நடைமுறைச் சிக்கல்கள்

ஆண்டாண்டு காலமாக அடக்குமுறையை எதிர்கொண்டுவரும் மக்களின் கதையைச் சொல்லும்போது, பல நடைமுறைச் சிக்கல்கள் இன்றைக்கும் இயக்குநர்களுக்கு உள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பல்லாண்டு காலமான பொதுப்புத்தியை உடைப்பது மிகக் கடினம். மேலும், ஒடுக்குமுறையின் அடையாளப் பிரதிநிதியாகக் காட்டப்படும் கதாநாயகன், ஒரேநேரத்தில் பத்து பேரைப் பந்தாடும் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகனுக்கான இயல்புடன் காட்டினால், அது அவர்கள் மீதான பார்வையை மேலும் மோசமானதாகக் கட்டமைக்கும் அபாயமும் இருக்கிறது. இவ்வளவு சவால்களைக் கடந்து ஒரு திரைப்படத்தை உருவாக்கினாலும், அது மக்களின் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும்.

பா.ரஞ்சித் - ரஜினிகாந்த்
பா.ரஞ்சித் - ரஜினிகாந்த்

முன்னணி கதாநாயகர்களின் தேவை

தமிழ் சினிமா, ஆதர்ச புருஷர்களாகக் காட்டப்படும் நாயகர்களை மையம் கொண்டே இந்நாள்வரை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் முகங்களுக்காகவே மக்கள் திரையரங்குக்கு வரும் போக்கு இருக்கிறது. பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்களுக்குக் கதை, கருத்து எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

இந்தச் சூழலில், அதிநாயகர்களின் (Super Stars) தயவு இல்லாமல் இங்கே மாற்று சினிமா சாத்தியமில்லை என்பதைச் சரியாக உள்வாங்கிக்கொண்டு செயல்பட்டவர் இயக்குநர் பா.ரஞ்சித். தமிழ் சினிமாவில் ‘வாட்டாக்குடி இரணியன்’ போன்ற திரைப்படங்கள் சாதி ஏற்றத்தாழ்வைக் காத்திரமாகச் சாடியிருந்தாலும், வெகு சொற்பமாக வெளிவந்த இவ்வகைத் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை. இப்படியான சூழலில்தான், வணிக சினிமாவின் வெற்றிமுகமான ரஜினிகாந்தை வைத்து அடக்குமுறைகளுக்கு எதிரான வசனங்களையும், அம்பேத்கர் படம் போன்ற குறியீடுகளையும் வைத்து ‘கபாலி’ படத்தை ரஞ்சித் எடுத்தார்.

அப்படத்தில் ரஜினி பேசும் அதிரடி வசனங்கள் என்னவோ மலேசிய வில்லனின் திசையை நோக்கிப் பாய்பவை என்றாலும், அதன் உட்கருத்துகள் இந்தியச் சமூகத்தின் ஆதிக்க சக்திகளுக்கு எதிரானவை என்பதை உணர முடியும். தொடர்ந்து ரஜினியை வைத்தே ‘காலா’ திரைப்படத்தில் அடிப்படைவாதிகளுக்கு எதிராகக் கருத்துகளைத் திரைமொழியில் கோர்த்திருப்பார் ரஞ்சித். மானுடம், சமூக நீதியைப் பற்றி சினிமாவில் பேச வேண்டுமென்றால், சினிமாவுக்கான இலக்கியத்தோடும், ஈர்ப்பு காரணிகளின் உதவியுடனே பேச வேண்டும். அப்பொழுதுதான் பொதுச்சமூகத்தின் முன் எடுபடும் என்பதை ரஞ்சித் சரியாகவே கையாண்டார்.

வரவேற்பும் வளர்ச்சியும்

மக்கள் இவ்வகைக் கதைகளை வரவேற்கின்றனர். குறிப்பாக, இன்று சந்தைக்களமாக மாறியிருக்கும் சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் அதிகமாக வரவேற்பு அளிக்கின்றனர் என்று அறிந்ததும், முன்னணிக் கதாநாயகர்களும் இவ்வகைக் கதைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க ஆரம்பித்தனர். இதன் நீட்சியாக அடுத்தடுத்து வெற்றிமாறன் போன்ற தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, இடதுசாரிக் கருத்துகள் கொண்ட கதைக்களத்தைத் தேர்ந்தெடுக்க, தமிழ் சினிமாவின் சமீபகால அடையாளமாக அறியப்படும் அனைத்துப் படங்களும் இடதுசாரி சித்தாந்த திரைப்படங்களாகத் தோன்றியுள்ளன. ‘பரியேறும் பெருமாள், ‘கர்ணன்’ என மாரி செல்வராஜ் தொடர்ந்து அழுத்தமான படைப்புகளை வழங்கிவருகிறார்.

இதன் அடுத்தகட்டமாக, தமிழ் சினிமாவின் பெரும் கலைஞரான கமல்ஹாசன் பா.ரஞ்சித் திரைப்படத்திலும், வெற்றிமாறன் திரைப்படத்திலும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களும் அடுத்தடுத்து புரட்சி பேசும் இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. சமூக ஊடகங்களின் தாக்கம் நிறைந்த இன்றைய யுகத்தில் சமூகத்தின் மனவோட்டத்தைப் பிரதிபலிக்கும் படங்கள் வருவதிலும், முன்னணி நாயகர்கள் அதை நோக்கிப் பயணிப்பதிலும் ஆச்சரியமில்லை!

மேலும், அறம் பேசும் பத்திரிகைத் துறையிலிருந்து தார்மிக உணர்வுகொண்ட பத்திரிகையாளர்கள் திரைத் துறைக்குச் செல்வதும் திரைப்படங்களின் போக்கை மாற்றியமைத்துள்ளது. ராஜுமுருகன், இரா.சரவணன், த.செ.ஞானவேல் போன்றோர் இதற்குச் சிறந்த உதாரணம்.

சரி... இதே நிலை தொடருமா என்றால் அது சந்தேகமே.

‘ஜெய் பீம்’ - 2021
‘ஜெய் பீம்’ - 2021

காலம் மாறும்

பொதுவாக சினிமா, பொதுப்புத்தியின் எதிரொலியாகவே இருக்கிறது. பொதுப்புத்தி எப்போதும் நம்மை ஆளும் சித்தாந்தத்துக்கும், கொள்கைக்கும் எதிரானதாகவே இருக்கும். இது உலகம் முழுக்க பொருந்தும். தன்னை ஆளுபவர்களை ஒரு பொதுச்சமூகம் ஏற்றுக்கொண்டால், உலகத்தில் எங்குமே புரட்சியோ, ஆட்சி மாற்றமோ நிகழவே நிகழாது. மனித மனதின் அடி ஆழத்திலிருக்கும் அதிகாரத்துக்கு எதிரான அராஜகப் போக்கின் (Anarchy) கூட்டு வெளிப்பாடுதான் புரட்சிக்கும், ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுக்கிறது.

மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததைத் தொடர்ந்து, கடந்த ஏழாண்டுகளாக வலதுசாரிக் கொள்கைகளின் ஆதிக்கம் சமூகத்திலும் தாக்கம் செலுத்துவதைப் பார்க்க முடிகிறது. அதற்கு எதிரான மக்களின் கூட்டு மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இப்போது வெளிவரும் திரைப்படங்கள். தமிழகத்தில் திராவிட மறுமலர்ச்சி ஏற்பட்டு திராவிட சித்தாந்தவாதிகளும், கடவுள் மறுப்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த காலங்களில்தான் தமிழ் சினிமாவில் அதிகமான பக்திப் படங்கள் வந்தன என்ற கோணத்திலிருந்து இதை யோசித்தால், தற்போதைய பொதுப்புத்தியின் மனநிலையை அறிய முடியும்.

ஒரு சமூகத்தில் உருவாகும் திரைப்படங்கள் அச்சமூகத்தின் பெரும்பாலான கூட்டு மனநிலையின் வெளிப்பாடு என்பதையும், பொதுப்புத்தியின் மனநிலை எப்போது மாறுதலுக்கு உட்பட்டது என்பதையும் கணக்கில் கொண்டு பார்த்தால், தமிழ் சினிமாவில் இப்போது மட்டுமல்ல எப்போதும் ஒரேபோக்கு கோலோச்சுவது கடினம் என்பதைப் புரிந்துகொள்ளலாம். இக்காலகட்டம் இடதுசாரி சினிமாக்களின் காலகட்டம். அது மாற்றமடைய சில, பல ஆண்டுகள் ஆகும். ஹாலிவுட்டின் ஆரம்ப காலங்களில் நிறவெறியரான டி.டபுள்யூ. க்ரிஃபித் இயக்கிய திரைப்படங்கள் கொண்டாடப்பட்டன. பின்னர் ‘மிசிசிப்பி பர்னிங்’, ‘எ டைம் டு கில்’ போன்ற படங்கள் கறுப்பின மக்கள்மீதான வன்முறை வெறியாட்டத்தைப் பதிவுசெய்தன. ஒருகட்டத்தில் மெல் கிப்ஸன் போன்ற வலதுசாரிகளின் படங்கள் ரசிக்கப்பட்டன. இன்றைக்கு, ஹாலிவுட் திரையுலகில் கறுப்பினத்தவர்களின் பிரதிநிதியாகச் செயல்படும் ஸ்பைக் லீயின் படங்கள், உலக அங்கீகாரம் பெறுகின்றன. இந்த சுழற்சி உலகெங்கும் பொதுவான ஒன்று.

சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் படங்களுக்கு மத்தியில், சாதி பெருமிதத்தைக் கதையுடன் இணைத்துச் சொல்லும் முத்தையா போன்ற இயக்குநர்களின் படங்களும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் செயல்பாடுகளைப் பகிரங்கமாக விமர்சிக்கும் மோகன் ஜியின் படங்களும் சலனம் ஏற்படுத்துகின்றன.

ஆக, எந்த மாதிரியான திரைப்படங்கள் வெளிவர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது இயக்குநர்களோ, நடிகர்களோ, அரசியல்வாதிகளோ அல்ல... அந்த முடிவு மக்களுடையதுதான். மக்களின் மனதைக் கவரவில்லை என்றால், போக்குகளும் திசைமாறும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in